"Stirring the pot" என்பது குட்டையைக் குழப்புதல் அல்லது பானையைக் கிளறுதல் என பொருள்படும்; அதாவது சில சமயங்களில் தேக்க நிலையில் மிகவும் தேவையான மாற்றம் அல்லது உந்துதலை அறிமுகப்படுத்தும் ஒருவரை விவரிக்க நேர்மறையாகப் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, ஒரு தலைவர், மனநிறைவுடன் இருக்கும் ஒரு குழுவை உற்சாகப்படுத்த "பானையைக் கிளறலாம்". மற்றொரு வகையில், தேங்கி நிற்கும் தெளிவான நீர்நிலைகளில் அனேக சிறிய மற்றும் பெரிய மீன்கள் சேர்ந்து கிடக்கும். அந்த மீன்களை பிடிக்க நினைப்பவர்கள் ஒரு கல்லை எடுத்து எறிவார்கள்; அப்போது தண்ணீர் கலங்கி அதில் கிடக்கும் மீன்கள் மேலெழும்பும்; அப்போது எளிதாக மீன்களை பிடித்து விடலாம்; ஆக குட்டையைக் குழப்பும் போது தெளிவும் கிடைக்கிறது. ஆனால் சிலர் உண்டு; அவர்கள் சர்ச்சைகள் மற்றும் வாதங்களை தூண்டி, பிளவுகளை உருவாக்குகிறார்கள். ஆனால், பேதுரு அவரது கடிதத்தில் விசுவாசிகளை ஒரு உண்மையான நோக்கத்துடன் குட்டையைக் குழப்ப அழைக்கிறார் (2 பேதுரு 3:1). சிலர் தூய மனதுடையவர்கள் தான், ஆனால் செயலற்ற நிலையில் அதாவது தேங்கி கிடக்கும் நீர்நிலை போல காணப்படுகிறார்கள். ஆகையால், பேதுரு தனது கடிதத்தில் தூய மனங்களைத் தூண்டுமாறு அல்லது ஒரு உந்துதலை ஏற்படுத்துமாறு ஊக்குவிக்கிறார்.
தூய்மையற்ற மனங்கள்:
ஒரு மனிதனின் மனது தேவனுடைய வார்த்தையினால் புதியதாக்கப்படவில்லை என்றால், அது பாவச்சிந்தனைகளால் மாசடைந்த, தூய்மை இல்லாத மனமாக இருக்கிறது (ரோமர் 12:2). இப்படிப் பாவம் மற்றும் தவறான எண்ணங்களால் நிரம்பிய மனங்களை தூண்டினால், அதனால் ஏற்படும் நடவடிக்கைகள் நம்மையும் மற்றவர்களையும் அழிவுக்கு இட்டுச் செல்லும்.
தூய மனம்:
பேதுரு பயன்படுத்திய கிரேக்க வார்த்தையின் அர்த்தம்; ஒரு பொருள் பிரகாசமான வெயில் வெளிச்சத்தில் பரிசோதிக்கப்படும்போது தூய்மையுடன் இருக்க வேண்டும் என்பதாகும். அதாவது, தூய மனம் என்பது ஏமாற்றமோ வஞ்சகமோ இல்லாத, உண்மைக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட மனமாகும். உண்மையில், ஒரு தூய மனம் என்னவெல்லாம் நினைக்கும் என்பதை பிலிப்பியர் 4:8 வசனம் விளக்குகிறது:
"உண்மையுள்ளது எதுவோ, மதிக்கத்தக்கது எதுவோ, நீதியானது எதுவோ, தூய்மையானது எதுவோ, இன்பமானது எதுவோ, புகழுக்குரியது எதுவோ, சிறந்தது எதுவோ அதைப் பற்றியே நினைக்கும்.
தூண்டும் மனம்:
இது, தகவல்களை வெறுமனே ஏற்றுக்கொள்ளாமல், மனதை விழிப்புணர்ச்சியுடன் சிந்திக்கச் செய்யும் செயலாகும். தூண்டப்படும் மனம் ஆரோக்கியமான சிந்தனையை உருவாக்குகிறது. முதலில், விசுவாசிகள் வேத வசனங்களைத் தியானிக்க வேண்டும். உணர்வுப்பூர்வமான, பாரம்பரிய சார்ந்த அல்லது உணர்ச்சிவசப்பட்ட வாதங்களை ஒதுக்கி வைத்து, பரிசுத்த ஆவியானவர் மனதை வெளிச்சமடைய செய்வார் என்பதை நம்ப வேண்டும். இரண்டாவதாக, தியானத்தின் மூலம் கற்ற உண்மை வாழ்க்கையின் அனைத்து முடிவுகளுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். மூன்றாவதாக, கர்த்தர் அவர்களை எப்படி நடத்தினார் என்பதை நினைவுகூர வேண்டும் (உபாகமம் 8:2). தலைவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை, அவர்களின் முடிவை, பயனுள்ள வாழ்க்கையை நினைவுகூருங்கள், அவர்களின் விசுவாசத்தை பின்பற்றுங்கள். நான்காவதாக, ஆண்டவருக்கான தீவிரத் தன்மை குறைந்துவிட்டதால் புறக்கணிக்கப்பட்ட ஆவிக்குரிய நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபட வேண்டும். ஜெபம், உபவாசம், ஐக்கியங்கள், வேத வசனங்களைத் தியானித்தல் போன்ற ஆவிக்குரிய ஒழுக்கங்கள் குறைவடைந்துவிட்டன. முதலில் இருந்த அன்பு குறைந்ததால் மற்ற விசுவாசிகளுடன் உறவுகள் துண்டிக்கப்பட்டுள்ளன; இதனை திருப்பிப் பெற வேண்டும். ஐந்தாவது, எதிர்கால வாழ்க்கைக்கு திசை காட்டும் புதிய தரிசனத்தைப் (fresh vision) பெற்று நடத்தப்பட வேண்டும். ஆறாவது, வாழ்க்கையை தேவனின் ராஜ்யத்துக்கான முன்னுரிமைகளுடனும், நீதியுடனும் (மத்தேயு 6:33) சீரமைக்க வேண்டும்.ஏழாவதாக, ஆண்டவரில் எப்போதும் சந்தோஷமாயிருக்க வேண்டும். அவருடைய சித்தத்தின்படி முன்னேற வேண்டும்.
நான் என் தூய மனதை ஆவிக்குரிய காரியங்களுக்கு நேராக தூண்டிவிட்டேனா?
Rev. Dr. J.N. Manokaran