நினைவில் வைத்திருக்கும் கடவுள்

“கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார்; அவர் நம்மை ஆசீர்வதிப்பார்” (சங்கீதம் 115:12). ஆசாப், பகைவர்கள் அவர்களுடைய பரிசுத்த ஆலயத்தை கொள்ளையடித்ததால் அவமானத்திற்குள்ளான ஜனங்களை நினைக்கும்படி தேவனை வேண்டுகிறார் (சங்கீதம் 74:1-2). இந்தச் சங்கீதம் நாத்திகனின் பாடல் அல்ல; விசுவாசியின் புலம்பல்.
சந்தேகங்களின் நடுவில் ஆசாப் தேவனை நோக்கி திரும்பி, தேவன் தம்மை நினைவில் கொள்ள வேண்டிய ஐந்து காரணங்களை முன்வைக்கிறார். தேவன் எப்பொழுதும் தம்முடைய உடன்படிக்கையை நினைவில் வைத்திருக்கிறார்; ஏனெனில் வானவில் அவர் சிங்காசனத்தைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கிறது (வெளிப்படுத்துதல் 4:3).

அவருடைய சபை:
இஸ்ரவேல் மக்கள் உடன்படிக்கை சமூகமாக இருந்தனர். சீனாய் மலையில், தேவன் மோசேயின் மூலம் நியாயப்பிரமாணத்தை அளித்தபோது, ஜனத்தோடு உடன்படிக்கை செய்தார் (யாத்திராகமம் 12:1-30) அதுபோல, புதிய ஏற்பாட்டுக் கால விசுவாசிகள் மனந்திரும்பி, பாவங்களை விட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, தேவனுடைய பிள்ளைகளாக ஆனபோது, கர்த்தருடனான உடன்படிக்கையில் இணைந்தார்கள் (யோவான் 1:12).

வாங்கப்பட்டவர்கள்:
இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் வாங்கப்பட்டு காக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு குடும்பமும் ஒரு ஆட்டுக்குட்டியை பலியிட்டு, அதன் இரத்தத்தை வாசற்படிகள் மற்றும் கதவுத்தூண்களில் பூச வேண்டும். எகிப்தியர்களின் எல்லா முதற்பேறுகளையும் கொன்று நியாயத்தீர்ப்பு நிறைவேற்றிய மரணத் தூதன், இஸ்ரவேல் மக்களை விட்டுப்போனான். விசுவாசிகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படுகிறார்கள் (1 யோவான் 1:7).

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்:
எல்லா ஜனங்களிலும், தேவனுடைய கட்டளைகளைக் கேட்டு, மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி வாழ்ந்தால், இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய சிறப்பான சொத்தாக இருப்பார்கள் (யாத்திராகமம் 19:5). உலகம் படைக்கப்படும் முன்பே தேவன் தம்முடைய சீஷர்களைத் தேர்ந்தெடுத்தார். உலகளாவிய சபையே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி ஆகும் (எபேசியர் 1:4; 5:21-24).

மீட்டெடுக்கப்பட்டவர்கள்:
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் சந்ததியினர் தேசங்களின் அடிமைச் சந்தைகளிலிருந்து மீட்டெடுக்கப்பட்டவர்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தம்முடைய சீஷர்களை பாவம், சாத்தான், உலகம் ஆகியவற்றின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக்கொண்டார்.

அவர்களிடையே வாசமாயிருந்தார்:
ஆசாப் பாடியது, கர்த்தர் இஸ்ரவேலின் பாளயங்களில், வாக்களிக்கப்பட்ட தேசத்தில் நிலைபெற்ற ஜனங்களிடத்தில் வாசமாயிருந்தார் என்பதைக் குறித்தது. கர்த்தர் மனிதர்களின் இருதய வாசற்படியில் தட்டுகிறார்; அவரை வரவேற்கும்வர்களின் வாழ்க்கைக்குள் அவர் பிரவேசித்து, அவர்களோடு உணவருந்துகிறார் (வெளிப்படுத்துதல் 3:20). விசுவாசிகள் பரிசுத்த ஆவியின் ஆலயமாக இருக்கிறார்கள் (1 கொரிந்தியர் 6:19-20).

தேவன் என்னை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறார் என்பதை நான் உணர்கிறேனா? 
 

Rev. Dr. J.N. Manokaran