தேவனற்ற வாழ்வு வீணான வாழ்வு

"Nisi Dominus Frusta" என்பது ஒரு லத்தீன் வாசகம். இது சங்கீதம் 127:1-இல் உள்ள வசனத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் பொருள்: "கர்த்தர் இல்லையெனில், எல்லாம் வீணாகும்." ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோ நகரம் இந்த வாசகத்தைத் தமது நகரத்தின் உத்தியோகப்பூர்வக் குறியாகக் கொண்டு, அரசியல் மற்றும் நிர்வாக ஆவணங்களில் பயன்படுத்தி வருகிறது.

கட்டுதல்:
பொதுவாக மனிதன் தனக்கென்று சொந்தமாக வீடு வேண்டும் எனக் கட்ட முயற்சிப்பதுண்டு. ஆனால் தேவனின் உதவியில்லையெனில், அது பாரமான செயலாக முடியும். இயற்கையின் நியமங்கள் நிலைத்திருக்கின்றன, ஏனெனில் அவற்றை படைத்த தேவனும் நிலைத்தவராக இருக்கிறார். ஈர்ப்பு விசை போன்ற பல நியமங்கள் இயங்கும்போதுதான் ஒரு வீடு உறுதியாக நிற்கும். தேவனுடைய நித்திய வல்லமையும், தெய்வீக இயல்பும் அவரது படைப்புகளில் தெளிவாகக் காணப்படுகின்றன (ரோமர் 1:20). யுத்தத்திற்காக குதிரையை ஆயத்தம் செய்யலாம், ஆனால் வெற்றி கர்த்தரிடமிருந்து வருகிறது. வீடு எவராலும் கட்டப்படலாம்; ஆனால் அதன் நிறைவும், நோக்கமும் தேவன் ஆசீர்வதிக்கும்போதுதான் முழுமை பெறும் (நீதிமொழிகள் 21:31).

குடும்பங்களைக் கட்டுதல்:
இந்த வசனம் ஒரே நேரத்தில் ஒரு வீட்டின் பொருட்களால் கட்டப்பட்ட கட்டமைப்பைக் குறிப்பிடுவதோடு, அதில் வசிக்கும் குடும்பத்தையும் குறிக்கிறது. ஏனெனில், பின்னர் வரும் வசனங்களில் பிள்ளைகள் கர்த்தரின் சுதந்தரமும், பரிசும், பங்கேற்பும் எனக் கூறப்படுகிறது (சங்கீதம் 127:3-5). பழைய ஏற்பாட்டில், ஒரு குடும்பம் "வீடு" என்று குறிப்பிடப்படுகிறது; இன்று அது பிரபலமான குடும்பம் அல்லது வம்சம் (dynasty) அறியப்படுகிறது. எபிரேயத்தில் ben என்பது குமாரனை, bath என்பது மகளைக் குறிக்கின்றன. Beith என்பது வீடு எனப் பொருள்படும். இவை அனைத்தும் ஒரே மூல வார்த்தையான banah, அதாவது “கட்டுதல்” என்பதிலிருந்து வந்துள்ளன.
ஒரு வீடு கட்ட இரும்பு, சிமெண்ட், செங்கல், சுண்ணாம்பு, மரம் ஆகியவை தேவைப்படும் போல, ஒரு குடும்பம் உருவாக மகன்கள், மகள்கள் தேவைப்படுகிறார்கள்.

பாதுகாப்பு:
ஒரு நகரத்தில் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள், காவல் படை, மற்றும் வாயில்கள் இருக்கலாம். இருப்பினும், தேவன் காக்கவில்லை என்றால் இவையெல்லாம் வீண். மனித முயற்சிகள் முக்கியமானவை, ஆனால் போதுமானதல்ல. அபாயம், அழிவு, அல்லது மரணம் எங்கு இருந்து வேண்டுமானாலும் வரக்கூடும். மெய்நிகர் கண்காணிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்புடன் கூடிய “ஸ்மார்ட் நகரங்கள்” கனவு நகரங்களாக இருக்கலாம், ஆனால் உண்மையான பாதுகாப்பு தேவனாலேயே உண்டாகும்.   

சார்பு: 
தமது முன்னேற்பாடும், நன்மையும், கிருபையையும்  அனைவருக்கும் தந்திருக்கும் பொது வரங்களும் நமக்காக வழங்குவார் என்ற நம்பிக்கையில் தேவனை நம்புவது இந்த உலகில் நம்பிக்கையுடன் வாழும் வாழ்வாகும். அன்றன்று எங்களுக்கு என்ன தேவையோ அதை எங்களுக்கு தாரும் என்பதே பரிசுத்தர்களின் தேவனைச் சார்ந்த நம்பிக்கையுடனான ஜெபமாகும் (மத்தேயு 6:11). அவரின்றி நம்மால் எதையும் செய்ய முடியாது என்பதே விசுவாசிகளின் உண்மை நிலை (யோவான் 15:5).

நான் தேவனின் கிருபையுள்ள வழங்கலை அல்லது தேவைகள் சந்திக்கப்படுவதை நன்றி நிறைந்த  இருதயத்துடன் ஒப்புக்கொள்கிறேனா?  

Rev. Dr. J.N. Manokaran