பற்றாக்குறையால் தளர்ந்த மனம்

உத்தரப் பிரதேசத்தின் சந்தாலி மாவட்டத்தில் உள்ள ஹமித்பூர் கிராமத்தில், ஒரு திருமண விழாவின் போது உணவு பற்றாக்குறையைக் காரணமாகக் கூறி மணமகன் திருமணத்தை பாதியிலேயே கைவிட்டு விட்டார். அதே இரவு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது (இந்தியா டுடே, 28 டிசம்பர் 2024). திருமணம் என்பது மணமகனும் மணமகளும் ஒன்றிணைந்து ஒரு குடும்பமாக அமைவதற்கான ஒரு நல்ல ஏற்பாடாகும்; அதுவிருந்து வைப்பதற்கான நிகழ்வு அல்ல. “வயிற்றுக்கு உணவு. உணவுக்காக வயிறு” ஆம். ஆனால் தேவன் இரண்டையும் அழிப்பார் (1 கொரிந்தியர் 6:13) என பவுல் எழுதுகிறார். 

பவித்ரமான திருமணம்:
திருமண நிகழ்வு என்பது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண், திருமண ஏற்பாட்டின் அடிப்படையில் இணைந்து வாழச் செய்வதைச் சட்டபூர்வமாகவும், பகிரங்கமாகவும், முறையாகவும் ஏற்றுக் கொள்வதற்கான ஒரு புனித நிகழ்வாகும். ஆனால் அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களும், மணமகனும் கூட, இந்த திருமணத்தின் நோக்கத்தையும், அர்த்தத்தையும், சடங்குகளையும் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் இதை வெறும் பண்டிகையாகவும், விருந்தாகவும், சாப்பிட்டு மகிழும் நிகழ்வாகவே எண்ணினர்.

உறுதி மொழி:
திருமண விழா என்பது உறவினர்கள், சபை உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் மதத் தலைவர்கள் முன்னிலையில், மணமக்கள் ஒருவருக்கொருவர் அளிக்கும் உறுதியின் வெளிப்பாடாகும். இது ஒரு புதிய குடும்பத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பொது அறிவிப்பாகும். விருந்து, சடங்குகள், பொழுதுபோக்கு நிகழ்வுகள், பரிசுகள் ஆகியவை திருமணத்தின் மைய அம்சங்கள் அல்ல, அவை திருமண நிகழ்வை மேம்படுத்தும் அல்லது மகிழ்விக்கும் சிறுதுணைப்பாகங்களே.

துணையை கைவிட முடியுமா?
உணவுப் பற்றாக்குறைவைக் காரணமாகக் கூறி திருமணத்தை ரத்து செய்த அந்த நபர், சிறிது நேரத்தில் வேறு ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு, வாழ்க்கைத் துணை என்பது விருப்பப்படி வாங்கிக்கொள்ளக்கூடிய அல்லது தேவையில்லை என்றால் தூக்கி எறியக்கூடிய ஒரு சொத்து மாதிரியே. அவர் துணையை ஒரு நபராக அல்ல, ஒரு பொருளாகவே பார்த்தார்.

மரியாதை மற்றும் காயம்: 
தனக்கான உரிமை என்று நினைக்கும் மனப்பான்மை, மரியாதையின் மாயையான பெருமை இந்த நிகழ்வில் வெளிப்பட்டது. திருமண ஏற்பாட்டில் இருந்த சிறிய குறைபாடே இவர்களுக்கு கெளரவக் குறைச்சலை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, மணமகளின் வாழ்க்கையே கிட்டத்தட்ட அழிந்து விட்டது; மேலும், அவளின் உறவினர்களின் மனநிலையும் ஸ்தம்பித்து போனது.

 கானாவூர் திருமணம்:
அப்போஸ்தலனாகிய யோவான் கானாவூரில் நடைபெற்ற திருமணத்தைப் பற்றி எழுதுகிறார். பொதுவாக, மணமகன் மணமகளை அழைத்து வருவதற்காக வந்த இடத்திலேயே திருமண விழா நடைபெற்றிருக்கலாம். ஆனால் விழாவில் ஒரு சிக்கல் ஏற்பட்டது;  விருந்துக்கு அவசியமான திராட்சரசம் குறைவுபட்டது (யோவான் 2:1–11). இயேசுவின் தாயார் மரியாள் இந்த பிரச்சனையை கர்த்தராகிய இயேசுவிடம் கொண்டு சென்றார்.‌ அவர் தண்ணீரை திராட்சரசமாக மாற்றும் அற்புதத்தைச் செய்தார். கர்த்தர் இல்லாத திருமணத்தில் எப்போதும் குறைபாடுகள் இருக்கும்; அவருடைய பிரசன்னம் மட்டுமே முழுமையைத் தருகிறது.

பற்றாக்குறையை மிகுதியாக மாற்றும் கர்த்தரைக் குறித்து நான் அறிந்துள்ளேனா?  

Rev. Dr. J.N. Manokaran