புனேவில், ஒரு தினசரி கூலித் தொழிலாளி, தனது மனைவி பிரசவ அறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டபோது, மனம் நிறைந்த பதட்டத்துடன் வெளியே காத்திருந்தான். சிசேரியன் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கேள்விப்பட்டதும், “எவ்வளவு பணம் கேட்பார்கள்?” என்ற எண்ணம் மட்டும் அவன் மனதை பீடித்தது. சிறிது நேரத்துக்கு பிறகு, டாக்டர் வெளியில் வந்தார். அந்த தொழிலாளி தயக்கத்துடன், “டாக்டர்… என்ன குழந்தை?” என்றான். அதற்கு டாக்டர் முகம் மலர்ந்து கூறினார்; “ஒரு தேவதை… உங்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது.” அவன் கண்களில் மகிழ்ச்சி மிளிரத் தொடங்கியவுடன், இன்னொரு கவலை நினைவுக்கு வந்தது. பணம்… பிரசவ செலவு… எப்படி சமாளிப்பது? அவன் திணறிக் கொண்டிருந்ததை கவனித்த டாக்டர் சிரித்துக் கொண்டு சொன்னார்; “தேவதைகள் பிறக்கும் போது நான் கட்டணம் கேட்க மாட்டேன்”. அந்த தொழிலாளி அதிர்ச்சியோடு டாக்டரை பார்த்தான். அந்த நொடியில் தனது வாழ்க்கையின் பெரிய சுமை ஒன்று அகன்றது போல இருந்தது. அவர் தான் டாக்டர் கணேஷ் ராக். சிறுவயதில் அவரது தாயார் அவரிடம் சொல்லியிருந்தார்:
“டாக்டராகி, இந்த தேவதைப் பெண்களை பாதுகாப்பாய் காப்பாற்று… அவர்களிடம் பணம் வாங்காதே”. அந்த தாயின் வார்த்தையை அவர் வாழ்க்கைப் பணி ஆக்கிக் கொண்டார். கடந்த பத்து ஆண்டுகளில், அவர் 2000-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள்; அவரது சொற்களில் சொல்ல வேண்டுமானால் தேவதைகள் பிறக்கும் போது இலவசமாக மருத்துவம் பார்த்துள்ளார். பெண்களை அவமதிக்கும் நடைமுறைகள் இன்னும் நிலவும் சமுதாயத்தில், அவர் அந்த பாரபட்சத்திற்கு அமைதியான ஆனால் வலிமையான சவால் விடுத்திருக்கிறார்.
கொல்லுவது பாவம்:
கருவில் இருக்கும் குழந்தையாயினும், பிறந்து விட்ட குழந்தையாயினும் அவை அனைத்தும் தேவனின் சாயலிலும் உருவத்திலும் படைக்கப்பட்ட பரிசுகளே. எந்த காரணத்திற்காக இருந்தாலும், ஒரு குழந்தையின் உயிரை அறுத்தெடுப்பது, கருக்கலைப்பாக இருந்தாலும், பிறப்பிற்குப் பிறகு கொல்வதாக இருந்தாலும் “கொலை செய்யாதிருப்பாயாக” (யாத்திராகமம் 20:13) என்ற தேவனின் கட்டளைக்கு நேரான மீறல்; அது தேவனின் கண்களில் பாவமே. வருத்தமாக, இன்றைய உலகம் இந்தப் பெரிய பாவத்தை சாதாரணமாகக் கருதி, தாய் அல்லது பெற்றோரின் விருப்பம், சுதந்திரம் என்ற பெயரில் கொண்டாடுகிறது.
பராமரிப்பை சுமையாக எண்ணுதல்:
ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி கூட, தனது மகளை “சுமை” எனக் குறித்துக் கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக வருத்தப்பட்டார். பணமும் படிப்பும் அதிகமான குடும்பங்களிலும், பெண் குழந்தையை இன்றும் செலவாகவும், வரவேற்கப்படாதவராகவும், விரும்பத்தகாதவராகவும் பலர் எண்ணுகின்றனர்.
கருப்பை கல்லறையாக மாறுதல்:
சட்டத்திற்கு எதிரானதாயினும், சில ஒழுக்கமற்ற ஆய்வகங்களில் குழந்தையின் பாலினத்தை பெற்றோருக்கு தெரிவிக்கின்றனர். கருவில் இருக்கும் குழந்தை பெண் எனத் தெரிந்தால், பல பெற்றோரும் உடனே கருக்கலைப்பைத் தேர்வுசெய்கிறார்கள். வருத்தமாக, உண்மையான சம்மதத்தாலும் அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட சம்மதத்தாலும்,
உயிரை உருவாக்கும் தாயின் கருப்பையே ஒரு குழந்தையின் கல்லறையாக மாற்றிக் கொள்ளும் நிலை உருவாகிறது.
சிசுக்கொலை (Infanticide):
சில இடங்களில், பிறந்த சில நாட்களிலேயே பெண் குழந்தைகள் உயிரிழக்கச் செயப்படுகின்றன. அவர்கள் கழுத்தை நெரித்தும், நஞ்சளித்தும், அல்லது குப்பைத்தொட்டிகளில், பொது இடங்களில், ரயில் பாதைகளில் கூட எறியப்படுகின்றனர். இத்தகைய கொடூர நிலைகளில், சில குழந்தைகள் போலீசாருக்கு நேரத்தில் வந்த தகவலால் மீட்கப்படுகின்றனர். பின்னர் அவர்கள் சபை அமைப்புகள் அல்லது அரசு நடத்தும் இல்லங்களில் வளர்க்கப்படுகிறார்கள். பெண் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக, தமிழ்நாடு அரசு “தொட்டில் திட்டம்” மூலம் சில இடங்களில் சிறப்பு தொட்டில்களை அமைத்துள்ளது; பெற்றோர் விரும்பாத குழந்தைகளை அங்கே பாதுகாப்பாக வைக்கலாம்.
பாகுபாடு:
பெண் குழந்தை உயிர் தப்பி வளர்ந்தாலும், பல குடும்பங்களில் அவர்கள் இன்னமும் பாகுபாட்டுக்குள்ளாகிறார்கள்.
அவர்களின் தேவைகள் உதாசீனப்படுத்தப்படுகின்றன; சில நேரங்களில் அவர்கள் அன்பு, கவனம் மற்றும் வாய்ப்புகள் என புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்த பாகுபாடு அவர்களின் மனதிலும் எதிர்காலத்திலும் ஆழ்ந்த காயங்களை ஏற்படுத்துகிறது.
நான் பெண் குழந்தைகளைக் கொண்டாடுகிறேனா அல்லது அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran