இந்தியாவின் ஒரு மாவட்டத்தில் ஒரு இளைஞரும் அவரது மனைவியும் ஆண்டவரை அறிந்துக் கொண்டனர். அவர்கள் ஆண்டவருடைய ஆர்வமிக்க சீஷர்களாக ஆனார்கள். மேலும், தங்கள் மக்களுக்கு நற்செய்தியின் வெளிச்சம் இல்லையே என்ற பாரத்தைப் பெற்றனர். அவர்கள் ஜெபம் செய்து, ஆண்டவரிடம் வழிகாட்டுதலை கேட்டார்கள். அவர்களின் ஜனங்கள் ஒரு சில கிராமங்களைச் சுற்றியுள்ள இடத்தில் வாழ்ந்து வந்தார்கள். அந்த கிராமங்களில் வேறு வேறு தினங்களில் வாரம் ஒருமுறை சந்தை நடக்கிறது. இந்தச் சந்தை அனைத்து கிராமங்களிலும் ஒவ்வொரு நாளாக ஒரு வாரத்தில் எல்லா கிராமங்களிலும் சுழற்சி முறையில் நடைபெறும். அந்தச் சந்தையில் செருப்புகளை விற்பதே அவரது தொழிலாக இருந்தது. அவர்கள் தங்கள் தொழிலை கர்த்தரிடம் ஒப்படைத்து, கர்த்தருடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர். வாரத்தில் நான்கு நாட்கள் அந்த நகரும் சந்தையில் கடை வைப்பதும், மூன்று நாட்கள் ஊழியம் செய்வதுமான ஏற்பாடாக இருந்தது. ஆச்சரியமாக, ஆண்டவர் அவர்களின் ஊழியத்தை ஆசீர்வதித்தார். அவர்களுடைய ஊழியத்தின் மூலம் 350 புதிய சீஷர்கள் ஆண்டவரை அறிந்துள்ளனர். அவர்களுடைய வாழ்க்கை இன்றைய பல கிறிஸ்தவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் சவாலாகவும் உள்ளது.
சீஷர்களை உருவாக்குதல்:
ஒரு கிறிஸ்தவ சீஷனின் மிக முக்கியமான பணி, மற்றவர்களையும் சீஷர்களாக உருவாக்குவதே ஆகும். ஆண்டவர் இயேசு கொடுத்துள்ள பிரதான கட்டளை (மத்தேயு 28:18-20) எல்லா விசுவாசிகளுக்கும் பொருந்தும். இது விருப்பத்திற்கோ, தெரிவிற்கோ உட்பட்டதல்ல; ஆனால் தேவனால் நமக்குக் கொடுக்கப்பட்ட ஒரு கட்டாய பணி மற்றும் ஆணையாகும். அந்த இளைஞர் தம்பதிகள், ஆண்டவரின் அற்புதமான வெளிச்சத்தை அறிந்த பிறகு, தங்களை முழுமையாக ஆண்டவரின் பணிக்கு அர்ப்பணித்தனர். அவர்கள் மற்றவர்களையும் ஆண்டவரின் சீஷர்களாக மாற்றுவது தாங்கள் கொண்ட முக்கியமான பொறுப்பாகவே பார்த்தார்கள்.
இராஜ்யத்தின் முன்னுரிமை:
அவர்கள் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் கூட அல்ல. ஏழையாக இருந்தாலும், போதும் என்ற மனதோடு வாழ்வது சாத்தியமே என்பதை அவர்கள் நிரூபித்தார்கள். இந்த தம்பதிகள், வாழ்க்கையில் சரியான முன்னுரிமைகளை அமைத்து, தங்கள் வருமானத்திற்கு உட்பட்டு வாழ்ந்து, திருப்தியுடன் இருந்து, ஒரு அர்த்தமுள்ள நோக்கமிக்க வாழ்க்கையை நடத்திக் காட்டினார்கள். அவர்கள் வாழ்க்கையின் முதன்மையான முன்னுரிமையாக தேவனுடைய ராஜ்யத்தையும் அவரது நீதியையும் தேடினர் (மத்தேயு 6:33). அனைத்தையும் பெற்றிருந்தாலும், சில சீஷர்கள் திருப்தியின்றி இருப்பதால், தங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் காணாமல், தொடர்ந்து தங்கள் பொருளாதார நிலையை உயர்த்தவே முயற்சி செய்கிறார்கள். ஆனால் இந்த தம்பதிகள், எளிமையான வாழ்க்கையையும், சரியான நோக்கத்தையும் கொண்டு, எவ்வாறு ஆண்டவருக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கலாம் என்பதை எடுத்துக் காட்டினார்கள்.
சிதறிய சீஷர்கள்:
கர்த்தர் தமது சீஷர்களுக்கு ஒரு முக்கியமான ஆணையைக் கொடுத்தார்: “நீங்கள் எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும், பூமியின் எல்லைகளிலும் எனக்கு சாட்சிகளாக இருக்க வேண்டும்” (அப்போ. 1:8) என்று. ஆனால் சீஷர்கள் சாமாரியாவிற்கும் பூமியின் எல்லைகளிற்கும் செல்லும் முனைப்பை காட்டவில்லை. அவர்கள் எருசலேமிலேயே இருந்துவிட்டார்கள். அதனால், தேவன் உபத்திரவத்தை அனுமதித்தார். அந்த உபத்திரவத்தின் காரணமாக சீஷர்கள் பல இடங்களுக்கு சிதறிப் போனார்கள் (அப்போஸ்தலர். 8:1). சிதறிப் போன சீஷர்கள் அங்கு நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் பிலிப்பைப் போல் நற்செய்தி ஊழியர்கள் மற்றும் திருச்சபை நிறுவும் ஊழியர்களாக மாறினார்கள். இவ்வாறு உபத்திரவத்தின் வாயிலாக தேவனுடைய திட்டம் நிறைவேறியது, நற்செய்தி உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது.
நான் என்னுடைய வாழ்க்கை, குடும்பத்தில், வேலை இடத்தில், நண்பர்களிடம், என எல்லா சூழ்நிலையிலும், நற்செய்தியின் ஒளியை பிறரிடம் பரப்புகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran