சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தனது நண்பருடன் கான்பூரின் நான் மௌ காட் பகுதியில் உள்ள கங்கை நதிக்கு சென்றார். அவர் ஒரு ஆழமான பகுதிக்குள் மாட்டிக் கொண்டார். அவரது நண்பர் அவரை மீட்பதற்காக முக்குளிப்பவரை அணுகினார், ஆனால் அவர்கள் காப்பாற்றும் சேவையை செய்வதற்கு முன் ஒரு குறிப்பிட்ட தொகையை தங்கள் கணக்கிற்கு மாற்றுமாறு கோரினர். பணம் மாற்றப்பட்ட பிறகே, அவர்கள் நீரில் மூழ்கியவரை மீட்க முயன்றனர், ஆனால் பலத்த தோல்வியே மிஞ்சியது, அதிலும் சடலம் கூட கிடைக்கவில்லை. அவரது மனைவி மகாராஷ்டிரா அரசாங்கத்தில் நீதிபதியாகவும், அவரது சகோதரர் பீகார் அரசாங்கத்தில் மூத்த அதிகாரியாகவும் உள்ளார்கள் (NDTV , செப்டம்பர் 6, 2024). நல்லதைச் செய்யும் ஆற்றலும் வாய்ப்பும் இவர்களுக்கு இருந்தபோதும், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர். ஆக, அவர்கள் தேவனுக்கும் மனிதகுலத்துக்கும் எதிராக பாவம் செய்தார்கள். “ஒருவனுக்கு நன்மை செய்யத் தெரிந்திருந்தும் அதைச் செய்யாமல் போனால், அவன் ஒரு பாவியாகிறான்” (யாக்கோபு 4:17).
சுரண்டல்:
சக மனிதர்களிடம் சுரண்டுவதற்கு எதிராக வேதாகமம் எச்சரிக்கிறது. “நீங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்குக் கொடுக்கும் கடனுக்கு அடமானமாக அவர்களது மாவு அரைக்கும் திரிகையின் அடிக்கல்லையாவது மேற்கல்லையாவது வாங்கக்கூடாது. ஏனென்றால் அது அவர்களின் உணவையே அவர்களிடமிருந்து எடுத்துப் போடுவதற்கு சமமாகும்” ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு ஒரு எந்திரக்கல் இன்றியமையாததாக இருந்தது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான உத்தரவாதமாக அத்தியாவசியமற்ற பொருட்களை வேண்டுமானால் அடமானமாக எடுத்துக் கொள்ளலாம்.
தேவனுடைய அக்கறை:
ஒரு ஆடு கூட ஓய்வுநாளில் கைவிடப்பட்ட நிலையில் இறப்பதை தேவன் விரும்பவில்லை. கர்த்தராகிய இயேசு விமர்சித்த நபர்களிடம் இப்படியாக கூறினார்; “உங்களில் யாருக்கேனும், ஓர் ஆடு இருந்து அது ஓய்வு நாளில் ஒரு குழியில் விழுந்தால், நீங்கள் அதைக் குழியில் இருந்து தூக்கி எடுப்பீர்கள் அல்லவா?” (மத்தேயு 12:11). ஓய்வுநாளில் ஒரு ஆட்டை மரணத்திலிருந்து காப்பாற்ற தேவன் எதிர்பார்த்திருந்தால், சக மனிதர்களுக்கு எவ்வளவாய் உதவி செய்ய வேண்டும் என்று அவர் யோசிப்பார்?
நல்ல சமாரியன்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நல்ல சமாரியன் உவமையைப் போதித்தார் (லூக்கா 10:25-37). தேவையில் இருந்த மனிதன் மரண ஆபத்தில் இருந்ததால் வேறு எந்த வகையிலிருந்தும் எந்த உதவியும் பெற முடியவில்லை. மதத் தலைவர்கள் அந்த நபரைப் புறக்கணித்தபோது, சமாரியன் சரியான நேரத்தில் உதவி செய்தார். தயக்கமின்றி, அவர் தனது பொருள்கள், பணம் மற்றும் வளங்களைப் பயன்படுத்தி உதவினார். நல்ல சமாரியன் ஆதரவற்ற அந்த மனிதனிடம் பணமோ அல்லது திரும்ப தர வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கவில்லை.
மரண வியாபாரிகள்:
நீரில் மூழ்கும் மனிதனுக்கு உதவுவதற்கு நேரம், ஆற்றல், திறமை மற்றும் வாய்ப்பு இருந்தும் முக்குளிப்பவர்கள் பணத்திற்காக பேரம் பேசினார்கள்.
நான் நல்லதை ஆவலுடனும், உடனடியாகவும், சரியான நேரத்திலும் செய்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran