“கர்த்தாவே, என்னை விடுவித்தருளும்; கர்த்தாவே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்” (சங்கீதம் 40:13) என்பதாக தாவீது கர்த்தரிடத்தில் ஜெபிக்கிறான். இது ஆவிக்குரியத் தீவிரம், தாழ்மை, விசுவாசம், மேலும் தேவனின் வல்ல செயல்களுக்கான எதிர்பார்ப்பு நிறைந்த, சுருக்கமான இனிய ஜெபமாகும். இந்தக் கோட்பாட்டைப் பயன்படுத்தி, வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களிலும் மக்கள் ஜெபிக்கலாம்.
“கர்த்தாவே, என்னை விடுவிப்பது உமக்குப் பிரியமாய் இருக்கட்டும்”
தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் கிருபை அளிக்கிறார். நொறுங்கிய மனமும், உடைந்த இதயமும் கொண்டவர்களை தேவன் நோக்கிப் பார்க்கிறார் (ஏசாயா 66:2).
“கர்த்தாவே, என்னை மன்னிப்பது உமக்குப் பிரியமாய் இருக்கட்டும்”
ஒரு பாவி மனந்திரும்பி, தனது பாவங்களை ஒப்புக்கொண்டு, அவற்றை விட்டுவிட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தன் ரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, அதில் தேவனுக்கு மகிழ்ச்சி உண்டாகிறது.
“கர்த்தாவே, என்னைத் திருத்துவது உமக்குப் பிரியமாய் இருக்கட்டும்”
மனிதர்களின் இயல்பு ஆடுகளைப் போலத் தவறித் திரிவதே (எசாயா 53:6). தவறான வழியில் சென்றாலும், அலைந்து திரியும் தன் ஆடுகளைச் சரிசெய்து, தம்முடைய நாமத்திற்காக நீதியின் பாதையில் நடத்துவதில் கர்த்தர் கிருபையுள்ளவராக இருக்கிறார்.
“கர்த்தாவே, எனக்குத் தேவையானதை வழங்குவது உமக்குப் பிரியமாய் இருக்கட்டும்”
மனிதர்கள் எப்போதும் தேவையுள்ளவர்களாகவும் சார்ந்திருப்பவர்களும் இருக்கிறார்கள். அவர் தமது ஜனங்களுக்கு தினந்தோறும் அப்பத்தை அருளுகிறார் (மத்தேயு 6:11). அப்பம் என்பது மனிதர்களின் அனைத்து தேவைகளையும் குறிக்கிறது.
“கர்த்தாவே, என்னைக் காத்தருள உமக்குப் பிரியமாய் இருக்கட்டும்”
வீழ்ச்சியடைந்த, சாபத்துக்குட்பட்ட, குற்றங்களால் நிரம்பிய இந்த இருள்மிக்க உலகத்தில், தேவன் காக்காமல் எவரும் நிலைத்திர முடியாது, உயிர் வாழவே முடியாது.
“கர்த்தாவே, என்னைச் சுகப்படுத்துவது உமக்குப் பிரியமாய் இருக்கட்டும்”
தமது பிள்ளைகளைச் சுகப்படுத்த அவர் தமது வார்த்தையை அனுப்பும்படி தேவனுக்கு பிரியமாய் இருக்க வேண்டும். (சங்கீதம் 107:20)
“கர்த்தாவே, என்னை வழிநடத்துவது உமக்குப் பிரியமாய் இருக்கட்டும்”
தம்முடைய ஜனங்களை பசும்புல் மேய்ச்சலுக்கும், அமைதியான நீர்நிலைகளுக்கும் அழைத்துச் செல்ல தேவன் பிரியமாயிருந்தார். அவருடைய பிள்ளைகள் தேவனுடைய திட்டம், சித்தம், நோக்கம் ஆகியவற்றை அறியும்படி அவர்களை வழிநடத்துகிறார்.
“கர்த்தாவே, எனக்கு ஆறுதலளிப்பது உமக்குப் பிரியமாய் இருக்கட்டும்”
இந்த உலகம் மனச்சோர்வால் நிரம்பியுள்ளது. தினசரி சவால்களை எதிர்கொள்ள ஆறுதல், தேறுதல், தைரியம் அருளக்கூடியவர் தேவன் ஒருவரே.
“கர்த்தாவே, என்னை ஆசீர்வதிப்பது உமக்குப் பிரியமாய் இருக்கட்டும்”
மனித வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கும் சமாதானம் (Shalom) எனும் முழுமையான ஆசீர்வாதத்தை அருளக்கூடியவர் தேவன் ஒருவரே. தேவன் ஒருவரை நேசித்து, அவரில் மகிழும்போது, அவருடைய சத்துருக்களும் அவரோடு சமாதானமாக இருப்பார்கள் (நீதிமொழிகள் 16:7).
“கர்த்தாவே, என்னை உபயோகிப்பது உமக்குப் பிரியமாய் இருக்கட்டும்”
இவ்வுலகில் நீதியின் கருவிகளாகத் தமது ஜனங்களைப் பயன்படுத்துவதில் தேவன் பிரியமாயிருக்கிறார் (ரோமர் 6:13).
எல்லா ஆசீர்வாதங்களையும் எனக்கு வழங்க தேவன் பிரியமாக இருக்கிறாரா?
Rev. Dr. J.N. Manokaran