கர்த்தராகிய இயேசு தேவாலயத்தில் மக்களுக்கு போதித்துக் கொண்டிருந்தார். ஆனால், சில மத தலைவர்கள் விவாதிக்க விரும்பினார்கள். அவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்க இயேசு தயாராகவே இருந்தார். கர்த்தர் அனனியா சந்தையை ஆலய வளாகத்திலிருந்து அகற்றியதை நேரில் கண்டிருந்த அந்த ஊழல் நிறைந்த மதத் தலைவர்கள், அவருடைய அதிகாரத்தைப்பற்றிக் கேள்வி எழுப்பினர் (மாற்கு 11:29–33).
மறுகேள்வி:
கர்த்தர் ஒரு மறுகேள்வியை எழுப்பினார். அது விவாதத்திலிருந்து திசைமாறச் செய்ய அல்ல, அவர்கள் சிந்திக்கச் செய்வதற்காகத்தான் அக்கேள்வி இருந்தது.
யோவான் ஸ்நானகன்:
மத தலைவர்கள் உண்மையை அறிய விருப்பமுள்ளவர்களாக இருந்திருந்தால், அவர்கள் யோவான் ஸ்நானகன் சொன்னதைக் கேட்டு நம்பியிருப்பார்கள். யோவான் ஒளிக்கு சாட்சியாகவே வந்தார், ஏனெனில் அந்த மத தலைவர்கள் ஆவிக்குரியக் குருடர்களாக இருந்ததால், ஒளியைப் பார்க்கவோ, அதனை உணரவோ முடியவில்லை. யோவான் இஸ்ரவேல் ஜனத்திற்கு மேசியாவை வெளிப்படையாக அடையாளம் காட்டி;
“இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவனுடைய ஆட்டுக்குட்டி!” (யோவான் 1:6–7; 29) என்று கூறினார். தேவனால் அனுப்பப்பட்ட யோவான் ஸ்நானகனை அவர்கள் நிராகரித்தால், அவர்கள் கர்த்தரையும் நிராகரிப்பார்கள்.
மக்கள் மீதான பயம்:
மதத் தலைவர்கள் தேவனுக்கும், அவருடைய வார்த்தைக்கும், அவருடைய தீர்க்கதரிசிகளுக்கும் பயப்படவில்லை. ஆனால், அவர்கள் மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதையே அதிகம் கவலைபட்டனர். பொதுமக்கள் யோவான் ஸ்நானகன் ஒரு தீர்க்கதரிசி என்று நம்பினார்கள். யோவான் ஒரு ஆசாரியனின் மகனாக இருந்தாலும், ஆலயத்தில் அல்லாமல், வனாந்தரத்தில் இருந்து அவருடைய பணியை செய்து வந்தார். அதே சமயத்தில், மத தலைவர்களின் அதிகாரம் ஆலயத்தில் இருந்தது. இதனால், பொதுமக்களுக்கு மத தலைவர்களைவிட ஆவிக்குரிய உணர்வு மற்றும் பகுத்தறிவு அதிகமாக இருந்தது.
நாம் அறியவில்லை:
மதத் தலைவர்கள் உண்மையை அறிய மறுத்தனர். அவர்கள் தேடுபவர்கள் அல்ல, ஆனால் உண்மையைத் திரிப்பவர்கள். அவர்கள் தேவனின் அதிகாரமிக்க மக்களாகக் காணப்படுவதை விரும்பினர், ஆனால் ஒருபோதும் தேவனை நேசித்ததில்லை அல்லது அவரது வார்த்தைக்கு செவிசாய்க்கவில்லை.
கடவுளுக்கு பயமா அல்லது மனிதனுக்கு பயமா?:
மதத் தலைவர்கள் தங்களை படைத்த ஜீவனுள்ள தேவனுக்கு பயப்படவில்லை, அவர்களுக்கு அறிவும் ஞானமும் இல்லை. ஏனென்றால், கர்த்தருக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம் (நீதிமொழிகள் 9:10) அல்லவா. பயபக்தி இல்லாமல், அவர்கள் திருச்சபையில் ஊழியம் அல்லது சேவையைச் செய்து, தோராவை மனப்பாடம் செய்து, மக்களுக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு, மக்கள், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், சுய பாதுகாப்பு பற்றிய பயம் என அதிகமாக இருந்தது. மனிதனுக்குப் பயப்படுவது ஒரு கண்ணி என்று வேதாகமம் எச்சரிக்கிறது (நீதிமொழிகள் 29:25). கர்த்தராகிய இயேசு அவர்களை மாய்மாலக்காரர்கள் என்று அம்பலப்படுத்தினார்.
வானத்தின் மீதும் பூமியின் மீதும் முழுமையான அதிகாரம் கொண்ட இயேசுவிற்கு நான் பயப்படுகிறேனா, அவரை உண்மையாய் நேசிக்கிறேனா, அவரை நம்புகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran