வெற்றியின் மூலம் நியாயப்படுத்த முடியுமா

ஒரு போதகர் பல பாவங்களில், குறிப்பாக விபச்சாரம் மற்றும் பேராசையில் விழுந்தும், தன்னைப்பற்றி பொதுவாக தான் தவறு செய்யாத மனிதன் போல நியாயப்படுத்திக்கொண்டார். அவரது நியாயப்படுத்தலுக்கான காரணம், அவர் பெற்ற வெற்றி தான். அவர் சொன்ன சுவிசேஷத்தை கேட்க வந்த கூட்டம், நிகழ்ந்த அதிசயங்கள், மேலும் அவரது YouTube சேனல் மற்றும் பிற சமூக ஊடகங்களில் இருக்கும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை. மேலும் கிடைத்த புகழும், சாதனைகளும், அடைந்த வெற்றிகளும், கிடைத்த பலன்களும் தான் தனது பாவங்களைத் தூய்மையாக்கக் கூடியதாகக் கருதப்பட்டன.

சாலொமோனின் சாதனை:
சாலொமோன் செய்த மிகப் பெரிய சாதனை எருசலேமில் ஆலயத்தை கட்டியதே ஆகும் (1 இராஜாக்கள் 6:1). அது ஒரு ஆவிக்குரிய, அரசியல், சமூக, மத மற்றும் கலாச்சார சாதனையாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, சாலொமோன் முதிர்ந்து வந்தபோது, பிற ஜாதியினரான அவரது மனைவிகளில் சிலர் அவரை கர்த்தரிடமிருந்து விலக்கிச் சென்றனர். எபிரெயருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் காணப்படும் விசுவாச வீரர்கள் பட்டியலில் (எபிரெயர் 11) அவரது பெயர் இடம்பெறவில்லை.

அப்சாலோமின் பிரபலத்தன்மை:
தாவீதின் கலகக்கார மகன் இஸ்ரவேல் ஜாதியினரிடத்தில் பிரபலமானவன் (2 சாமுவேல் 14:25-26). அவன் வாழ்ந்த அந்த காலத்தில் மிஸ்டர் வேர்ல்ட் போலிருந்தான். அவனிடத்தில் வருபவர்களை அணைத்து முத்தம் செய்து என அவன் ஜனங்களை கவர்ந்துக் கொண்டான், தன்னைப் பின்பற்றவும் செய்தான் (2 சாமுவேல் 15:5-6). ஆகையால், அவன் சதித்திட்டத்தைச் செய்யத் துணிந்தான், தாவீது தன் தேசத் தலைநகரமான எருசலேமிலிருந்து ஓடிச் செல்ல வேண்டியதாயிற்று. போரில் அவன் தோற்கடிக்கப்பட்டு, ஒரு துயரமான மரணத்தைச் சந்தித்தான்.

சாதனைகள்:
இறுதிக் காலங்களில், சிலர் கர்த்தரிடத்தில் “நாங்கள் உமது நாமத்தில் நோயாளிகளை குணப்படுத்தினோம், பிசாசுகளை வெளியேற்றினோம், தீர்க்கதரிசனம்பண்ணினோம், பல வல்லமையான கிரியைகளைச் செய்தோம்” என்று கூறுவார்கள். ஆனால் கர்த்தர் அவர்களிடம், “நான் உங்களை ஒருபோதும் அறியேன்; அக்கிரமக்காரரே, என்னிடத்தில் இருந்து விலகிச் செல்லுங்கள்” என்று சொல்லுவார் (மத்தேயு 7:21-23). சாதனைகளாலும், வெற்றிகளாலும், எந்த மனிதனும் அல்லது பெண்மணியும் பரலோகத்தில் இடம்பிடிக்க முடியாது.

கீழ்ப்படிதலின் விளைவுகள்:
ராஜா சவுல் தாம் தேவனுக்குக் கீழ்ப்படிய, தேவன் கொடுத்த பணியை நிறைவேற்றினேன் என்று கூறினான். அமாலேக்கியரை அழிவுக்கு ஒப்படைத்ததாகவும், அவர்களின் ராஜாவான ஆகாகையும் சிறையிட்டதாகவும் தெரிவித்தான். ஆனால் சாமுவேல், சவுல் ஆடுகளை அழிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினான். அதற்குச் சவுல், அவற்றை பலி செலுத்த வைத்தேன் என்று காரணம் கூறினான். தேவன் பலியைக் காட்டிலும் கீழ்ப்படிதலையே சிறப்பாக மதிக்கிறார்; ஆகையால் சவுல் ராஜ்யத்திலிருந்து நிராகரிக்கப்பட்டான் (1 சாமுவேல் 15:20-23). போரில் வெளிப்படையான வெற்றி இருந்தாலும், ராஜா சவுலுக்கு ஆவிக்குரிய தோல்வி ஏற்பட்டது.

நான் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டுள்ளேனா? 

Rev. Dr. J.N. Manokaran