பரலோகத்தில் பாவம் இருக்க முடியுமா?

வேதவாக்கியங்கள் கற்பிப்பது போல, பாவம் பரலோகத்திற்குள் நுழைய முடியாது, அநீதியானவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்க முடியாது (வெளிப்படுத்துதல் 21:27; 1 கொரிந்தியர் 6:9-11). எனவே, லூசிபர் பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்டான்.

லூசிபர்:
தேவன் லூசிபரை ஒரு சக்திவாய்ந்த, புத்திசாலி மற்றும் அழகானவனாக உருவாக்கினார்; உண்மையில், அவன் ஒரு சரியான தேவதூதனாக இருந்தான். லூசிபர் மூன்று முக்கிய தேவதூதர்களில் ஒருவனாகவும் இருந்தான். “லூசிபர்” என்ற பெயருக்கு “பிரகாசிப்பவன்” என்று பொருள். லூசிபருக்கு தானே தெரிவு செய்யும் சுதந்திரம் இருந்தது. அந்த சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, அவன் மதியீனம் மற்றும் தீமையைத் தேர்ந்தெடுத்தான் என்பது ஏசாயா மற்றும் எசேக்கியேல் நூல்களில் (ஏசாயா 14:12-14; எசேக்கியேல் 28:13-17) பதிவாகியுள்ளது. விசுவாசம், நன்றியுணர்வு, தாழ்மை மற்றும் மனநிறைவு இல்லாத இடத்தில்தான் பாவம் முளைக்கிறது.

விசுவாசமின்மை: 
லூசிபர் தன் பிரபஞ்ச வாழ்வை மகிழ்ச்சியுடன் அனுபவித்தான். தன்னை தேவன் படைத்துள்ளார் என்பது அவனுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்திருக்க வேண்டும். ஒரு படைக்கப்பட்டவனாக இருந்தாலும், அவனிடம் அதிகாரமும், சுதந்திரமும், அறிவும் இருந்தன. இருந்தாலும், அவன் தேவன் அல்ல – ஒரு படைப்பு மட்டுமே. இதை லூசிபர் ஏற்க முடியாமல் இருந்திருக்கலாம். தேவன் தன்னால் தானே இருப்பவர் போல, தானும் தன்னால் தானே தோன்றியவன் என லூசிபர் எண்ணியிருக்கலாம். தேவனையும் அவரது வசனத்தையும் நம்பும் விசுவாசம் லூசிபருக்கு இல்லை. தேவன் சமமானவர்களில் முதன்மை வாய்ந்தவர் என்பதை லூசிபர் ஏற்றுக்கொண்டிருந்தாலும், தன்னைவிட உயர்வானவர் என்று ஏற்கவில்லை. இதுவே சிலர் தாங்களே தங்களை உருவாக்கிக்கொண்டவர்கள் அல்லது பரிணாம வளர்ச்சியின் மூலமாக வந்தவர்கள் என்று எண்ணும் மனப்பான்மையை ஒத்திருப்பதாகும்.

நன்றியுணர்வு இல்லாமை: 
ஒரு சிறிய விசுவாசம் இருந்தாலே லூசிபருக்கு நன்றியுணர்வு வளர உதவியிருக்குமே. தன்னை ஒரு படைக்கப்பட்டவனாகவும், தேவதூதர்களில் ஒருவராகவும் ஏற்றுக்கொண்டிருந்தால், அவன் தேவனுக்கு நன்றியுடன் இருந்திருக்கலாம். நன்றியுணர்வின்மை, முணுமுணுப்பு, மனக்கசப்பு, ஆத்திரம் என எல்லாம் பழிவாங்கும் மனநிலைக்கே கொண்டு செல்லும். திருப்தியின்மை கூட நன்றியின்மையை விரைவில் வளரச்செய்யும் ஒரு அடிப்படை காரணமாகும். லூசிபர் தன்னை தேவனுடன் ஒப்பிட்டு, தேவனைப் போல ஆக விரும்பினான்; அதற்கு முக்கிய காரணமாக, மற்றவர்கள் தன்னை வழிபட வேண்டும் என்ற ஆசை இருந்தது.

மனத்தாழ்மை இல்லாமை: 
லூசிபர் தாழ்மையானவனாக இல்லாமல், பெருமை மற்றும் அகந்தையுடன் இருந்தான். தேவன் நிர்ணயித்த எல்லைகளை மீறி, அதிக ஆசைகள் அவனுக்கு இருந்தது. லூசிபருக்கு அதிகாரமும் சுதந்திரமும் இருந்தது. ஆனால், அந்த அதிகாரத்துக்கும் சுதந்திரத்துக்கும் ஒரு வரம்பு இருக்கிறது என்பதை அவன் புரிந்துக்கொள்ளவில்லை. தேவன் சர்வ வல்லமை உள்ளவர்; ஆனால் லூசிபர் அதிகபட்சமாக வலிமையானவர் மட்டுமே ஆக முடியும். லூசிபர் தேவனின் வழிபாட்டைப் போன்ற உரிமைகளை மீற முடியாது.

 நான் நன்றியுள்ள ஒரு நபராக, தாழ்மையுள்ள ஒரு நபராக பணிவான நபராக, தேவன் மீது நம்பிக்கை கொண்ட நபராக இருக்கிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran