ஒரு கிறிஸ்தவ அமைப்பின் தலைவர், தன்னுடைய தலைமையின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து நேர்மையான கருத்துகளை அறிய விரும்பினார். அதற்காக ஒரு சிறு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் ஒருவர், “தலைவர்கள் எங்களை நண்பர்களைப் போல நடத்த வேண்டும்” என்று எழுதினார். அந்த பதில் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உடனே அந்த ஊழியர் யார் என்பதை கண்டறிந்து, அவரை பணியில் இருந்து நீக்கிவிட்டார். ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும்; “இனி நான் உங்களை வேலைக்காரன் என்று அழைப்பதில்லை. ஏனெனில் வேலைக்காரன் தன் எஜமானன் செய்வதை அறியமாட்டான். நான் இப்பொழுது உங்களை நண்பர்கள் என்றே அழைக்கிறேன். ஏனென்றால் என் பிதா எனக்குச் சொன்னவற்றையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்” (யோவான் 15:15). கர்த்தரின் இந்த முன்மாதிரியை எல்லா கிறிஸ்தவர்களும் பின்பற்ற வேண்டியது மிக முக்கியம்.
முதலாளியா அல்லது நண்பனா?:
பண்டைய இஸ்ரவேலின் கண்ணோட்டத்திலும், ரபி மற்றும் சீஷர்களின் யூத பாரம்பரியத்திலும், சீஷர்கள் கர்த்தரை முதலாளியாகக் (அதிகாரமுடையவராக) கருதினர். கர்த்தராகிய இயேசு, தேவனுடைய குமாரனாகவும், வானத்திலும் பூமியிலும் முழு அதிகாரமுடையவராகவும், நித்திய பிதாவாகவும், அதிசய ஆலோசகராகவும், சர்வ வல்லமையுள்ள தேவனாக இருந்த போதிலும் தம்முடைய சீஷர்களை நண்பர்கள் என்று அழைத்தார்.
பயமா அல்லது பயபக்தியா?:
இந்தக் கிறிஸ்தவ தலைவருக்குத் தன் ஊழியர்கள் தன்னைக் கண்டு பயப்பட வேண்டும் என்பது தான் எதிர்பார்ப்பு. இதன் அர்த்தம், அவர்கள் எப்போதும் மன அழுத்தத்திலும், உணர்ச்சி கலக்கத்திலும் வாழவேண்டும் என்பதே ஆகும். ஆனால், கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்கள் தம்மை அன்புடன் நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். அத்தகைய அன்பு, உண்மையான பரிசுத்த பக்தியையும் மரியாதையையும் உருவாக்குகிறது. ஆனால் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தக் கிறிஸ்தவ தலைவர், அச்சமூட்டும் பயத்துக்கும், தெய்வீக மரியாதைக்குரிய பக்திக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளவில்லை. ஆமாம், இந்த உலகத்தார் தலைமை வகிக்கும் போது, அவர்கள் பலரையும் அச்சத்திலேயே வைத்துக் கொண்டு, மற்றவர்களை அடக்கியாளும் பழக்கத்துடன் இருக்கிறார்கள். ஆனால், மேய்ப்பனாக இருக்க வேண்டும் என்று அழைக்கப்பட்டுள்ள தலைவர்கள் அப்படிச் செய்ய முடியாது; செய்ய வேண்டியதும் இல்லை. 1 பேதுரு 5:3ல் பேதுரு கூறுவது போல, “சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள்”.
கட்டுப்படுத்துதலா அல்லது அதிகாரமளித்தலா?:
தலைவர்கள், தம் ஊழியர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் கட்டுப்படுத்த விரும்பினார். அதுபோல், பல திருச்சபைகளில் போதகர்கள் தங்கள் திருச்சபை உறுப்பினர்களின் வாழ்வையும் முழுமையாகக் கட்டுப்படுத்த முயல்கிறார்கள். அவர்கள் பறக்க முடியாத கூண்டுப் பறவைகள் போல, சுதந்திரமில்லாமல் வாழ்கிறார்கள். இவ்வாறான கட்டுப்பாடுகளில் வாழும் மக்கள், மகிழ்ச்சியும் அமைதியும் இழந்துபோய், அர்த்தமற்ற வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். ஆனால் ஆண்டவர், தமது சீஷர்களுக்கு அதிகாரமளித்து, மேலும் பெரிய செயல்களைச் செய்யத் தேவையான தைரியத்தையும் சுதந்திரத்தையும் வழங்கினார். இப்படியாக கூறுகிறது; “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், என்னில் நம்பிக்கை வைக்கிற எவனும் நான் செய்த அத்தகைய அற்புதங்களைச் செய்வான். என்னைவிட மேலான காரியங்களைக்கூட செய்வான். ஏனென்றால் நான் என் பிதாவிடம் செல்கிறேன்”.
குருட்டுக் கீழ்ப்படிதலா அல்லது பகுத்தறிவு கீழ்ப்படிதலா?:
ஒரு கிறிஸ்தவர் தலைவராக இருந்தாலும், அவர் தன் ஊழியர்களிடம் ஒரு குருட்டுக் கீழ்ப்படிதலையே எதிர்பார்த்தார். இந்த உலகத்தில் உள்ள தலைவர்கள் தங்கள் செயல்களின் நோக்கத்தையும், காரணத்தையும் தங்களுக்கு கீழ் இருப்பவர்களிடம் வெளிப்படுத்துவதில்லை, தெரிவிப்பதும் இல்லை. ஆனால், கர்த்தராகிய இயேசு, தம்முடைய சீஷர்களை நண்பர்கள் என்று அழைத்தார். ஏனெனில், அவர் தம்முடைய இருதயத்தையும், திட்டத்தையும், நோக்கத்தையும் அவர்களுடன் பகிர்ந்தார். இதனால், அவர்கள் தன்னிச்சையான, விருப்பமுள்ள கீழ்ப்படிதலுடன் இயேசுவைப் பின்பற்ற முடிந்தது.
ஆண்டவர் காண்பிக்கின்ற முன்மாதிரி, ஒரு தெரிவுக்கும் நெருக்கத்திற்குமான அழைப்பாகவும், பயத்தின் மூலம் ஏற்படும் கட்டுப்பாட்டை விட அன்பும் உணர்வும் அடிப்படையாக கொண்ட உறவுக்கான மாதிரியாகவும் தோற்றமளிக்கிறது.
நான் என் குடும்பம், சமூகம் மற்றும் பணியிடத்தில் கர்த்தரைப் போன்ற ஒரு முன்மாதிரியான தலைவரா? சிந்திப்போம்.
Rev. Dr. J.N. Manokaran