படைப்பு படைப்பாளியை வெளிப்படுத்துகிறது

மலைப்பகுதிகள், காடுகள், பாலைவனங்கள், தீவுகள், கடலுக்கு அடியில், போன்ற உலகின் பல பகுதிகளில் ஒரு துணிகர சாகசக்காரர் சுற்றித் திரிந்தார். அப்படி சுற்றித் திரியும் போது அட என்ன அழகான படைப்பு என்று ஆச்சரியப்பட்டார், படைப்பு அவரை ஈர்த்தது, ஆனால் படைத்தவரைப் பற்றி யோசிக்கவே இல்லை.   விஞ்ஞானிகள், வானியலாளர்கள், விண்வெளி வீரர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களும் அப்படித்தான்.   பரலோகம் தேவனுடைய மகிமையை அறிவிக்கிறது (சங்கீதம் 19:1) என்பதை மறக்காதிருப்போம்.

ஈர்ப்பு:  
அழகான மற்றும் மூச்சடைக்கக்கூடிய பரந்த விரிந்தக் காட்சிகள் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களாகும்.  இது கண்களுக்கு விருந்தாகவும், மனதிற்கு இதமளித்து, ஆத்துமாவையும் கூட ஆசுவாசப்படுத்துகிறது. 

மெச்சிக்கொள்ளல்:  
அந்த ஈர்ப்பு மெச்சிக்கொள்ள வழிவகுக்கிறது.  கன்னியாகுமரி அல்லது இமயமலைக்கு மத்தியில் இருக்கும் டார்ஜிலிங் போன்ற இடங்களில் சூரிய உதயத்தைப் பார்ப்பது என்பது அந்த அழகை ரசிக்க வைக்கிறது. 

அங்கீகாரம்:  
பெரும்பாலான மக்கள் அதில் ஈர்க்கப்படுகிறார்கள், ஆனால் இது ஒரு இயற்கை நிகழ்வு அல்லது தானாக இருக்கும் பூமி தானேன்று கடவுளின் அழகான படைப்பு என்று சொல்வதில் தயக்கம் காட்டுகிறார்கள்.  கடவுளை அறிவார்ந்த மற்றும் கலைப் படைப்பாளராகக் கருதுவதற்குப் பதிலாக, அவர்கள் ஆட்சார்பற்ற  இயற்கைக்கு மரியாதையைக் கொடுக்கிறார்கள். ஆனால் பவுல் எழுதுகிறார் “தேவனைப் பற்றிய பல உண்மைகள் மனிதர்களால் காண முடியாததாக உள்ளது. அவர் முடிவில்லாத வல்லமையும், தெய்வத்துவமும் கொண்டவர். ஆனால் உலகம் உண்டான நாள் முதல் மக்களால் அவரை அவரது படைப்புகள் மூலம் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலேயே இருக்கிறார். அதனால் மக்கள் தாங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு சாக்குப்போக்கு சொல்லித் தப்பித்துக்கொள்ள இயலாது” (ரோமர் 1:20).

ஏற்றுக்கொள்ளுதல்:  
இயற்கையின் மூலம் மக்கள் அவரை அறிந்து கொள்ளவும், அவரைத் தேடவும், ஏற்றுக் கொள்ளவும் எதிர்பார்க்கிறார்.  ஆனால் அவர்கள் முட்டாள்கள்.  அவர்கள் கடவுளை அறிந்திருந்தும், அவர்கள் அவரைக் கடவுளாக மதிக்கவில்லை, அவருக்கு நன்றி செலுத்தவில்லை, ஆனால் அவர்கள் தங்கள் சிந்தனையில் பயனற்றவர்களாகி, அவர்களின் முட்டாள்தனமான இதயங்கள் இருளடைந்தன (ரோமர் 1:21) என வேதாகமம் கூறுகிறது. படைப்பைக் கவனிக்கும் எல்லா மக்களுக்கும் படைப்பாளரைத் தெரியும், ஆனால் அவர்கள் அவரை மதிக்க மறுத்து அவரை ஏற்றுக்கொள்ள தவறுகிறார்கள் என்று பவுல் வலியுறுத்துகிறார்.  காரணம் நன்றியற்ற இதயம்.  மாறாக, அவர்கள் உலகத்தையும் முழு படைப்பையும் ஏதோ தங்களுக்காக வழங்கப்பட்டதுபோல் எடுத்துக்கொள்கிறார்கள்.  உண்மையில் அது வீண் சிந்தனையும் முட்டாள்தனமான இருண்ட இதயங்களும் அன்றி வேறில்லை. 

வழிபாடு: 
இயல்பாக இதை ஏற்றுக்கொள்வது வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் வழிவகுக்கிறது.  சத்தியத்திற்கு மதிப்பளிக்காத, பணிவு மற்றும் நன்றியில்லாத இதயம் படைப்பாளியை வணங்கவும், கனம் கொடுக்கவும் முடியாது.   வித்தியாசமாக, படைப்பாளியை வணங்குவதற்குப் பதிலாக, படைப்பை வணங்குகிறார்கள்.   தந்தையாகிய கடவுளை நிராகரிப்பவர்கள்  பூமி மாதாவைக் காப்பாற்ற ஆர்வலர்களாக மாறுகிறார்கள்.   சுமார் இருபத்தைந்து இஸ்ரவேலின் பெரியவர்கள் ஆலயத்திற்குத் திரும்பினர், ஆனால் சூரியனை வணங்கினர் (எசேக்கியேல் 8:16).  இயற்கையை வணங்குபவர்கள் தேவனுக்கு முதுகைக் காட்டுகிறார்கள்.      
படைப்பை நான் கவனிக்கும்போது அதை சிருஷ்டித்தவரை வணங்குகிறேனா?

Rev. Dr. J.N. Manokaran