நற்பண்பு வளர்த்தல்

பல அமைப்புகளும் நிறுவனங்களும் தாங்கள் நற்பண்பு வளர்ப்பில் ஈடுபடுவதாகக் கூறுகின்றன. ஆனால் சிலர் வெறுப்பை விதைத்துக்கொண்டே, அதையே நற்பண்பும், தேசத்தைக் கட்டியெழுப்பும் வழியெனச் சித்தரிக்கிறார்கள். சங்கீதம் 15-ல் தாவீது கூறுவது போல, உண்மையான நற்பண்பின் சுருக்கம்  தேவனுடன் நேர்மையான உறவிலிருக்கிறதில்தான் உள்ளது.

கூடாரம் மற்றும் மலை:
தாவீது, தேவனின் பரிசுத்த ஆலயத்திற்குள் வரவேற்கப்பட்டவனாக இருக்க விரும்பினான். அவன் விரும்பியது சாதாரண விருந்தினராக மட்டுமல்ல, அங்கு நிலையாக வாசமாக இருக்கவேண்டும் என்பதே. அது பகைவர்களிடம் இருந்து தற்காப்பு பெறும் இடமாக மட்டும் இல்லாமல், செழிப்பான பரிசுகளும் ஆனந்தகரமான ஐக்கியமும் உள்ள இடமாகும். எகிப்திலிருந்து வெளியேறும் போது, வனாந்தரத்தில் இருந்த நாட்களில் தேவன் மோசேயை கூடாரத்தில் சந்தித்தார் (யாத்திராகமம் 25–31). தாவீது எப்போதும் தேவனின் சமூகத்தில் இருக்க விரும்பினான். பின்னாளில், அந்த கூடாரம் கிபெயோனில் இருந்து எருசலேமுக்கு மாற்றப்பட்டது, பின்னர் மோரியா மலையில் சாலொமோனால் ஆலயம் கட்டப்பட்டது (1 நாளாகமம் 16:39; 21:29; 2 சாமுவேல் 6:17; 24:18–21).

நடையில் நேர்மை:
மிகவும் முக்கியமானது நேர்மையான வாழ்கையே. அதாவது, நம்முடைய நடை இருளில் இல்லாமலும், பாவிகள் தரும் கெட்ட ஆலோசனைகளைப் பின்பற்றாமலும் இருக்க வேண்டும் (1 யோவான் 1:6; சங்கீதம் 1:1).

வாக்கில் நேர்மை:
இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் (மத்தேயு 12:34). ஆம், உண்மையானவன், வெளியில் மட்டும் அல்ல, உள்ளத்திலிருந்தே நேர்மையாய் பேசுகிறான். அவன் வார்த்தைகள் தூய்மையும் நம்பிக்கையும் தரும். குற்றம் பேசுபவன் அல்லது தீங்கை பரப்புபவன்; அவன் ஒரு பொய்யான திருடன், பயந்தாங்கொள்ளி, காரணமின்றி கடிக்கும் பைத்தியமான நாய் போன்றவன். அவன் மற்றவரின் நற்பெயரையும், மதிப்பையும் திருடுகிறான். அந்த நபரின் முன்னிலையில் பேச தைரியம் இல்லாமல், அவரின் பின்னாலேயே குற்றம் சாட்டுகிறான். அவனின் வார்த்தைகள், நாயின் கடி போல், ஒரு நபரை காயப்படுத்தி, அழிக்கக்கூடியவை. ஆனால் வாக்குறுதியளிக்கிறவன்; 
தனக்கு துன்பமாக இருந்தாலும், சொன்னதை நிறைவேற்றுகிறவன் தான் உண்மையான நபர்.
 
வேலையில் நேர்மை: 
தேவபக்தியுள்ளவர்களின் வேலை தீயதல்ல. அத்தகைய நபர்கள் மற்றவர்களின் பலவீனங்களையோ அல்லது துரதிர்ஷ்டத்தையோ பயன்படுத்திக் கொள்ள மறுக்கிறார்கள் (உபாகமம் 23:19). நேர்மையானவர்கள், பிறர் மீது சுரண்டல் செய்யும் வட்டியை ஏற்க மாட்டார்கள். அதேபோல், தீயவர்களுக்கு ஆதரவாக ஊழல் செய்யும் காரியத்திலும் ஈடுபட மாட்டார்கள். அவர்களது நீதியான உள்ளம், நியாயத்தையும் தேவபக்தியையும் பிரதிபலிக்கிறது.

தீமைக்கு எதிரான நேர்மை: 
ஒரு நல்ல மனிதன் தீமையை வெறுக்கிறான், தீமையை எதிர்க்கிறான் (நீதிமொழிகள் 8:13). அவன் போக்கு சமாதானம் செய்தல் அல்ல, சகிப்பதும் அல்ல, மௌனமாக இருப்பதும் அல்ல. அவன் உண்மைக்கு துணை நிற்கிறான், அநியாயத்தை கண்டு பொறுத்து போவதில்லை; அவன் தீங்கான காரியங்களோடு சமரசம் செய்வதில்லை அல்லது அமைதியாக இருப்பதும் இல்லை. 

தேவ ஜனங்களின் நேர்மை: 
தேவனுக்குப் பயந்து, அவர்களை நேசித்து, அவர்களுடன் ஐக்கியம் கொள்பவர்களை அவன் மதிக்கிறான். 

 தாவீது விவரித்த இந்த நற்குணங்கள் என்னிடத்தில் உள்ளனவா? 

Rev. Dr. J.N. Manokaran