தானியேலும் எண்மின் யுகமும்

தீர்க்கதரிசி தானியேலுக்கு தேவன் இந்த எண்மின் (டிஜிட்டல்) யுகத்தைப் பற்றி வெளிப்படுத்தினார்; “அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போகும்” (தானியேல் 12 : 4). இன்றைய நிலையில், மக்கள் இணையத்தின் தகவல் நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டே, வலைத்தளத்திலிருந்து வலைத்தளத்திற்கு தேடி, அறிந்து, கண்டுபிடிக்கின்றனர்.
துரதிருஷ்டவசமாக, பலர் தரவுகளின் அடிமைகளாக மாறிவருகின்றனர்.

எண்மின் (Digital) பூர்வீகவாசிகள்:
இன்று உலகம் டிஜிட்டல் பிளவு அனுபவிக்கிறது. 1985-க்கு முன்னர் பிறந்தவர்கள் எண்மின் குடியேரிகள் (Digital Immigrants) என்று அழைக்கப்படுகிறார்கள்; 1985-க்கு பின் பிறந்தவர்கள் எண்மின் பூர்வீக வாசிகள் (Digital Natives) எனப்படுகிறார்கள். இன்று உலகில் வாழும் பெரும்பாலானோர் பூர்வீக வாசிகளே. திரைகள், கணினிகள், மானிட்டர்கள், மைக்ரோசிப் ஆகியவற்றால் நிரம்பிய எண்மின் உலகில் பிறந்தது, நல்லதா கெட்டதா என்பதைக் கடந்து, அது இன்றைய இளைஞர்களின் பிறப்புரிமையாகும். எண்மின் குடியேறிகள், இந்த டிஜிட்டல் சகாப்தத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்து, இளம் தலைமுறையின் உதவியை நாடுகின்றனர்.

எண்மின் உணவு:
பெற்றோரும் குழந்தைகளும் ஆரோக்கியமான டிஜிட்டல் ஊட்டச்சத்து மற்றும் தொடர்பை உருவாக்க சில வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். உணவு போலவே திரைகளும் நவீன வாழ்விற்கு இன்றியமையாதவையாகிவிட்டன. மேலும், அந்த திரைகள் நமது உறவுகளை மாற்றிக்கொள்ளும் சக்தியை நமக்குக் கொடுக்கின்றன; இதன் மூலம் சுறுசுறுப்பான, ஆரோக்கியமான ஆன்லைன் தொடர்புகளை நாம் உருவாக்க முடியும்.

டிஜிட்டல் (எண்மின்) ஊட்டச்சத்து:
இன்றைய இளைஞர்களுக்கு ஆரோக்கியமான டிஜிட்டல் ஊட்டச்சத்து மிகவும் அவசியம். உடல் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படும் அவர்கள் ஜிம்மிற்குச் செல்வதிலும், உணவு கட்டுப்பாட்டிலும் அதிக அக்கறை காட்டினாலும், டிஜிட்டல் பயன்பாட்டில் அத்தனை கவனம் செலுத்துவதில்லை. ஸ்மார்ட்போன் நேஷன் (Smartphone Nation) என்ற புத்தகத்தை எழுதிய கேட்லின் ரெகர் (Kaitlyn Reghr) குறிப்பிடுகிறார்:
“இளைஞர்களை உண்மையாக ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமென்றால், பிரச்சினை ஏற்பட்ட பின் தீர்வு காண்பதை விட, முன்னெச்சரிக்கையாக அவர்கள் டிஜிட்டல் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு டிஜிட்டல் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது”

டிஜிட்டல் (எண்மின்) ஊட்டச்சத்திற்கான படிகள்:
ஒரு சமநிலையான டிஜிட்டல் உணவுக் கட்டுப்பாடு நம் “feeds” க்காக அவசியம். கேட்லின் ரெகர் (Kaitlyn) தனது “Digital Nutrition” வழிகாட்டுதலில் ஆறு முக்கிய படிகளை வழங்குகிறார்:; முதலில் அளவை நிர்ணயிக்கவும்;  ஒவ்வொரு செயலிக்கும் (app) உங்களின் அதிகபட்ச பயன்பாட்டு வரைமுறையை நிர்ணயிக்கவும். 
இரண்டாவதாக அறிவித்தல்களை (notifications) நிறுத்தி வைக்க வேண்டும். இவை அத்தியாவசியமற்ற விஷயங்களில் கூடுதல் நேரத்தை செலவிட வைக்கும். 
மூன்றாவதாக, திரையை மந்தமாக்கவும்; உங்கள் கைபேசியை Grayscale முறையில் மாற்றி, அதிக பிரகாசத்தை குறையச் செய்யுங்கள். நான்காவதாக முகப்பு திரையை சுத்தப்படுத்தவும்  மிக அவசியமான செயலிகளை மட்டும் வைத்திருங்கள். ஐந்தாவதாக திரையற்ற நேரத்தை நிர்ணயிக்கவும் – குறிப்பிட்ட நேரங்களிலும் இடங்களிலும் திரையிலிருந்து விலகுங்கள். (உதாரணம்: இரவு உணவு நேரம்)
ஆறாவது செயலிகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், ஒவ்வொரு செயலியின் பயன்பாட்டிற்கும் எல்லையை நிர்ணயியுங்கள்.

எண்மின் (Digital) யுகத்தில் நான் இறைவனின் கவனமுள்ள சீஷனா?

Rev. Dr. J.N. Manokaran