தாவீது தன் இருதயத்தில் கசப்புணர்வுக்கு இடங்கொடுக்கவில்லை

“வில்லின் பாட்டு” என்று அழைக்கப்படும் இந்தப் பாடலை தாவீது எழுதினார். கில்போவா மலையில் நடைபெற்ற போரில் சவுலும் யோனத்தானும் கொல்லப்பட்ட செய்தி தாவீதுக்குக் கிடைத்தபோது, சவுலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இப்பாடலைப் பாடினார் (2 சாமுவேல் 1:19–27).

சவுலினால் தாவீது அளவற்ற துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்தார். நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது; உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினார்; குகைகளில் தங்கினார்; அகதியைப்போல வாழ்ந்தார். தனது மனைவியையும் குடும்பத்தினரையும் பிரிந்து வாழ வேண்டியதாயிற்று. தாவீதின் குடும்பத்தினரும் துன்புறுத்தப்பட்டனர். தேசத்தின் எதிரியைப்போல அவர் வேட்டையாடப்பட்டார். தேவன் வாக்குப்பண்ணிய தேசத்தில்கூட அவரால் நிம்மதியாக வாழ முடியவில்லை. இவ்வளவு துன்பங்களை அனுபவித்தபோதிலும், தாவீது பழிவாங்கும் எண்ணத்திற்கோ, கசப்புணர்விற்கோ, வன்முறைக்கோ தன்னை ஒப்புக்கொடுக்கவில்லை. தேவனால் அபிஷேகம் செய்யப்பட்ட சவுலைத் தாக்கவோ, கொலை செய்யவோ அவர் மறுத்துவிட்டார் (1 சாமுவேல் 24:6).

அழகைக் காணும் மனப்பான்மை (Beauty): 
தாவீது தாராள மனமும் பெருந்தன்மையும் கொண்டவராக இருந்தார். சவுலைத் தனது வாளினால் மட்டுமல்ல, தனது கற்பனையிலோ இருதயத்திலோகூட கொல்ல அவர் விரும்பவில்லை. தன்னைத் தனது எதிரியாகவும், தனது குடும்பத்தின் எதிரியாகவும், தனது வம்சத்தின் எதிரியாகவும், தேசத்தின் எதிரியாகவும் கருதிய சவுலிடத்தில்கூட நல்லவற்றைக் காணும் உயர்ந்த மனப்பான்மை தாவீதிடம் இருந்தது. சவுல் தனக்குச் செய்த தீமைகளை மட்டுமே நினைத்துக்கொண்டிருக்காமல், அவருடைய நல்ல பண்புகளையும் நினைவுகூரத் தாவீதால் முடிந்தது.

மகிழ்ச்சியடையக்கூடாது (Do Not Rejoice): 
சவுலின் மரணத்தைக் கொண்டாடவோ, தனது விசுவாசமுள்ள படைவீரர்களும் பொதுமக்களும் அதைக் கொண்டாட அனுமதிக்கவோ தாவீது விரும்பவில்லை. சவுலினால் தாவீது அனுபவித்த துன்பங்களையும் துன்புறுத்தல்களையும் அவருடைய படைவீரர்கள் நன்கு அறிந்திருந்தனர். இருந்தபோதிலும், தாவீதின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, சவுலின் மரணத்தைக் குறித்து அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை.
தனக்குத் தீமை செய்தவருக்கு நேரிட்ட துன்பத்தைக்கூடக் கண்டு மகிழாத உயர்ந்த குணத்தைத் தாவீது வெளிப்படுத்தினார்.

அனைவரும் துக்கப்பட வேண்டும் (Everyone Should Mourn): 
சவுலின் மரணத்திற்காகத் துக்கப்படும்படி இஸ்ரவேல் மகள்களைத் தாவீது அழைத்தார்.
இஸ்ரவேல் தேசத்தின் உருவாக்கத்திற்கும் அதன் செழிப்பிற்கும் சவுல் ஆற்றிய நற்பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, அவரைப் புகழ்ந்து பேசும்படி அழைப்பு விடுத்தார்.
சவுலின் மரணத்திற்காக மலைகளும் வயல்வெளிகளும் துக்கப்படுவதாகத் தனது பாடலில் தாவீது குறிப்பிடுகிறார். தனக்குத் தீமை செய்த ஒருவருடைய மரணத்தைக்கூட மரியாதையுடனும் கண்ணியத்துடனும் அணுகிய தாவீதின் மனப்பான்மை நமக்கு ஒரு சிறந்த பாடமாகும்.

அன்புக்குரியவர்களும் இனிமையானவர்களும் (Beloved and Pleasant): 
சவுலும் யோனத்தானும் வாழ்ந்த காலத்திலும் மரித்த காலத்திலும் ஒன்றாக இருந்ததை நினைத்து தாவீது துக்கப்பட்டார். அவர்கள் இருவருடைய வீரத்தையும் போர்த்திறனையும் தனது இரங்கற்பாடலில் புகழ்ந்து பேசினார். குறிப்பாக, யோனத்தானின் நட்பையும் அன்பையும் தாவீது உயர்வாக நினைவுகூர்ந்தார். சவுலின் குடும்பத்தினரால் தனக்கு ஏற்பட்ட துன்பங்களைக் கடந்து, அவர்களுடைய நற்பண்புகளை நினைவுகூர்ந்தது தாவீதின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.

கிறிஸ்தவ சாட்சியம் (Christian Testimony): 
புதிய ஏற்பாட்டுக் கால விசுவாசிகளுக்கும் தாவீதின் வாழ்க்கை ஒரு சவாலாகவும் முன்மாதிரியாகவும் இருக்கிறது. மற்றவர்கள் இரக்கம் பெறத் தகுதியற்றவர்களாகத் தோன்றினாலும், அவர்கள்மீது வெறுப்பு, பொறாமை மற்றும் கசப்புணர்வு கொள்ளாமல் நமது இருதயத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். தாவீதிடம் அன்பு இருந்தது. சவுலைப் பற்றி நினைக்கும்போதுகூட அவர் தீமையைச் சிந்திக்கவில்லை. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பவுல் எழுதிய அன்பின் இலக்கணத்தின்படி தாவீதின் வாழ்க்கை அமைந்திருந்தது. “அன்பு... தீங்கு நினையாது.” (1 கொரிந்தியர் 13:5). பேதுரு விசுவாசிகளுக்கு அறிவுறுத்தியபடி, தாவீதிடம் தேவ அன்பும் தேவ சுபாவமும் வெளிப்பட்டன.
“எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்” (1 பேதுரு 4:8). சவுல் தனக்கு எதிராகச் செய்த எண்ணற்ற தீமைகளையும் குற்றங்களையும் தன்னுடைய அன்பினால் மூடி, அவற்றை மறந்து, பழிவாங்காமல் இருக்கத் தாவீதால் முடிந்தது. 

எனது இருதயத்திலும் சிந்தனையிலும் வேரூன்றியுள்ள கசப்புணர்வுகள் அனைத்தையும் நான் அகற்றிவிட்டேனா?
 

Rev. Dr. J.N. Manokaran