முட்டாளுக்கான வரையறை

ஏப்ரல் முதல் தேதி உலகின் பல கலாச்சாரங்களில் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது, நகைச்சுவைகள் செய்து, வேடிக்கையான தோற்றங்கள் அமைத்து‌ மகிழ்கின்றனர். இதன் தோற்றம் பற்றிய பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. வேதாகமம் ஒரு முட்டாளை இப்படியாக வரையறுக்கிறது; "மனதில் 'தேவன் இல்லை' என்று சொல்லுகிறவனே முட்டாளாக இருக்கிறான்" (சங்கீதம் 14:1).

கடவுள் மறுப்பு:
முதலாவது, மனதில் "தேவன் இல்லை" என்று கூறுபவன் முட்டாளாக இருப்பதற்குக் காரணம், அவன் தெளிவாகவும் வெளிப்படையாகவும் உள்ள ஒன்றை மறுப்பதால் ஆகும். இரண்டாவது, இந்த உலகம் ஒரு நோக்கத்தால் உருவாக்கப்பட்டதாகவும், அதற்குப் பின்னால் ஒரு வடிவமைப்பு இருப்பதாகவும் நம்புவதற்குத் தேவையான நம்பிக்கை, தேவனை மறுப்பதற்குக் காட்டிலும் ஆழமானது. ஏனென்றால், ஒவ்வொரு விளைவிற்கும் ஒரு காரணம் இருக்கிறது, ஒவ்வொரு படைப்பிற்கும் ஒரு படைப்பாளர் இருக்கிறார் என்பது அடிப்படை உண்மை. மூன்றாவது, ஒரு முட்டாள் பாவத்தில் வாழ விரும்புகிறான், அதனால் தான், இந்தப் பிரபஞ்சத்தின் அறநெறிப் பொறுப்பாளராக இருக்கும் தேவனை மறுக்கிறான். நான்காவது, முட்டாள்கள் தவறாக நினைப்பது என்னவென்றால், பரிசோதனை கூடத்தில் நிரூபிக்கப்படுவது மட்டுமே உண்மை என்று அவர்கள் கருதுகிறார்கள். உலகத்தின் தோற்றத்தையோ, மனிதர்களின் ஆரம்பத்தையோ ஆய்வுக் கூடத்தில் நிரூபிக்க முடியுமா? ஐந்தாவது, பிறரின் வார்த்தைகளை கேட்காதவர்களும், குறிப்பாக காரணத்தை உணர முடியாதவர்களும் முட்டாள்கள். விவாதங்களால் முட்டாள்களுக்கு விளங்க வைக்க முடியாது.

சுயமாக இருக்கும் கடவுள்:
தேவனின் எல்லா வல்லமையும், கண்ணுக்கு தெரியாத தன்மைகளும், தெய்வீக இயல்பும், படைப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன (ரோமர் 1:20). முதலாவது, மெய்யியல் வாதம் (Cosmological Argument), கண்கூடாக காணக்கூடிய ஒரு படைப்பு இருந்தால், அதற்குப் பின்னால் ஒரு திட்டவாளர், கட்டுப்பாளர், பராமரிப்பாளர்; அதாவது, ஒரு படைப்பாளர் இருக்க வேண்டும். இரண்டாவது, குறிக்கோள் வாதம் (Teleological Argument); பிரபஞ்சத்தின் மிகச் சிறிய பொருளிலும் வடிவமைப்பின் சான்றுகள் உள்ளன. ஒரு மலரின் இதழ்களின் நிறம், வடிவம், அமைப்பு, ஒரு இலை, பூச்சி, ஊர்வன அல்லது பாலூட்டியின் தோற்றம்,  எல்லாம் ஒரு புத்திசாலியான கலைஞனாகிய படைப்பாளியை நோக்கி சுட்டிக்காட்டுகின்றன. மூன்றாவது, மனிதவியல் வாதம் (Anthropological Argument); மனிதர்கள் உறவுகளை விரும்புகிறார்கள், ஒருவருடன் ஒருவர் உரையாட விரும்புகிறார்கள். ஆகவே, அவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு உறவுமிக்க தேவன் இருக்க வேண்டும். நான்காவது, நீதி வாதம் (Moral Argument); நன்மை மற்றும் தீமைக்கான அறிவு மனித இயல்பிலேயே பதியப்பட்டுள்ளது. இந்த ஒழுங்கு மற்றும் நீதிக்கான உணர்வு, இந்த பிரபஞ்சத்தின் நீதிமிக்க தேவன் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. ஐந்தாவது, மத வாதம் (Religious Argument); அனைத்து கலாச்சாரங்களிலும் வழிபாட்டிற்கான ஆர்வம் காணப்படுகிறது. பல மதங்கள், பல வழிபாட்டு இடங்கள், படைப்பாளியின் உண்மையைத் தேடும் மனிதனின் தேடலை பிரதிபலிக்கின்றன. ஆறாவது, கோடிக்கணக்கான மக்கள் தேவனுடைய குமாரனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவுடன் தனிப்பட்ட சந்திப்பு பெற்றதை சாட்சியாக அறிவிக்கிறார்கள்.

படைப்பாளரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவை நான் நம்புகிறேனா?

Rev. Dr. J.N. Manokaran