ஏலியும் சாமுவேலும்

சிலர் தேவனால் ஊக்கமுடன் அழைக்கப்பட்டு, அவரால் வல்லமையாக பயன்படுத்தப்பட்டும், தங்களுடைய தரிசனத்தை இழந்து வருந்தத்தக்க முடிவை சந்தித்தனர். தேவனுடைய கூடாரத்தில் ஆசாரியராக பணியாற்றிய ஏலி, எச்சரிக்கப்பட்டான், புறக்கணிக்கப்பட்டான், பின்னர் நியாயந்தீர்க்கப்பட்டான்.

புறக்கணிக்கப்படுதல்:
இஸ்ரவேல் தேசம் சுமார் நானூறு ஆண்டுகள் நியாயாதிபதிகளால் வழிநடத்தப்பட்டது. வழிபாடு, பலி, பண்டிகைகள், வருடாந்த யாத்திரைகள் நடந்தன. ஆனால், தேவனுடைய வார்த்தை அரிதாக இருந்தது; வெளிப்படையானத் தரிசனங்கள் இல்லை (1 சாமுவேல் 3:1). இந்த நியாயாதிபதிகளின் யுகம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. அன்னாளின் ஜெபத்தை தேவன் கேட்டுள்ளார் என்பதற்கான உறுதியைச் சொல்ல ஏலியை உபயோகித்தார் (1 சாமு. 1:17-18). இருந்தாலும், தேவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பலிகளை அவமதிக்க தனது மகன்களை அனுமதிப்பதன் மூலம் ஏலி தேவனை அவமதித்தான். ஏலிக்கு எச்சரிக்கை கூற தேவன் ஒரு சிறுவனான சாமுவேலைத் தேர்ந்தெடுத்து, அவன் வாயிலாக நீதியை அறிவித்தார்.

தேவனுக்கு செவிசாய்த்தல்: 
சாமுவேல் தேவனுடைய கூடாரத்தில் இருந்தபோதும், சுத்தம் செய்தல், பலிக்குத் துணைபுரிதல், கருவிகளை பராமரித்தல் ஆகிய வேலைகளை செய்திருந்தாலும், ஜீவனுள்ள தேவனுடைய குரலைக் கேட்பதில் பயிற்சி பெற்றவன் அல்ல. தேவன் சாமுவேலை அழைத்தபோது, அது தன்னுடைய ஆசானாகிய ஏலி அழைத்ததாக நினைத்து இருமுறை ஏலியிடம் ஓடிச் சென்றான். ஏலி அவனை மீண்டும் தூங்கச் சொன்னார். மூன்றாவது முறையில் தேவன் அழைத்தபோது, ஏலிக்கு பரிசுத்த தேவனுடைய குரல் எனத் தெரிந்து, சாமுவேலை தேவனுடைய குரலை எப்படிக் கேட்க வேண்டும் என்று கற்றுத் தந்தார் (1 சாமு. 3:4–14). அந்த செய்தி ஏலிக்கு எதிரானதாக இருந்தாலும், அதை ஏலி அறிந்து இருந்தபோதிலும், தேவன் சாமுவேலிடம் பேசத் தேர்ந்தெடுத்தார்.

குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தல்: 
ஏலி தன் மகன்களைக் தேவனின் குரலைக் கேட்கப் பழக்கப்படுத்தத் தவறினார். ஆனால், சாமுவேலைக் தேவனின் குரலுக்குப் பதிலளிக்கக் கற்றுத்தந்தார்: “பேசும் ஆண்டவரே, அடியேன் கேட்கிறேன்”. ஆம், பெற்றோர்களும் ஞாயிறு பள்ளி ஆசிரியர்களும், பிள்ளைகள் தேவனின் குரலைக் கேட்கும் பயிற்சியில் முக்கிய பொறுப்பாளர்களாக இருக்கின்றனர்.

ஏலி கடிந்துகொள்ளப்படல் மற்றும் தண்டிக்கப்படல்: 
கர்த்தர் ஏலிக்கு ஒரு மிகக் கடுமையான மற்றும் கனமான செய்தியைத் தெரிவித்தார். முதலில், மகன்கள் செய்த பாவங்களைத் தெரிந்தும் அவர்களைத் தடுக்காததற்காக, ஏலியையும் அவரது வழித்தோன்றலையும் தேவன் என்றென்றும் தண்டிக்கிறார். இரண்டாவது, அவர்கள் தேவனை அவமதித்து, விரோதமாக நடந்துகொண்டார்கள். மூன்றாவது, இதன் விளைவாக, அவர்களின் இந்தக் குற்றத்திற்கு எந்தவொரு பலியாலும் அல்லது பரிகாரத்தாலும் மன்னிப்பு இல்லை.

நான் தேவனின் குரலைக் கேட்டு என் குழந்தைகளுக்கும் கற்பிக்கிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran