ஒரு கிராமத்தில் சில பெண்கள் எல்லாம் கூடி வேதாகம வசனங்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் அதிகமாகக் கல்வி கற்றவர்கள் அல்ல, ஆனாலும் சத்தியத்தை நன்கு புரிந்து கொண்டு அதன்படி வாழ முயன்றனர். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரியாள் மற்றும் மார்த்தாள் இருக்கும் வீட்டிற்கு வந்தது குறித்து படிக்கும் போது அவர்களை உற்சாகப்படுத்தியது (லூக்கா 10:38-42). அவர்கள் தோண்டிக் கண்டெடுத்த சில பொக்கிஷங்கள் இங்கே உள்ளன.
கிராமப் பயணம்:
செல்வாக்கு, அதிகார நிலை, கீர்த்தி, புகழ் ஆகியவற்றில் முக்கியமானவர்கள் பொதுவாக கிராமங்களுக்கு வருவதையே தவிர்க்கிறார்கள். ஆனால், ஆண்டவர் வித்தியாசமானவர்; அவர் பெத்தானியா கிராமத்திற்கு செல்லத் தேர்ந்தெடுத்தார்.
வீட்டிற்கு அழைப்பு:
பெத்தானியாவில் சில வீடுகள் மட்டுமே இருந்தன. கர்த்தரை தங்கள் வீட்டிற்கு அழைக்கவும் வரவேற்கவும் மார்த்தாள் முன்முயற்சி எடுத்தாள். ஆண்டவர் மகிழ்ச்சியுடன் அவர்களின் வீட்டிற்கு வந்தார். யார் செவிசாய்க்கிறார்களோ, அவர்கள் கதவைத் திறக்கிறார்கள், அவர்களுக்குள் திரிதேவனும் வாசம்பண்ணுவார் (வெளிப்படுத்துதல் 3:20).
கேட்டலும் கற்றலும்:
மரியாள் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டாள். அவள் அடக்கத்தோடு அவருடைய பாதங்களில் அமர்ந்தாள். ஒரே ஒருவரான மரியாளுக்குக் கூட ஆண்டவர் கிருபையோடு போதித்தார். சத்தியத்தின் தேவனிடமிருந்து சத்தியத்தை ஆர்வமுடன் மரியாள் கேட்டும் கற்றும் கொண்டாள். ஆனால், மார்த்தாள் அமர்ந்து கேட்பதைத் தேர்ந்தெடுக்காமல், விருந்தோம்பலின் ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தாள்.
விருந்தோம்பலில் மும்முரம்:
நடைமுறை சிந்தனை கொண்ட பெண்ணாகிய மார்த்தாள், உணவு தயார் செய்யப்பட வேண்டும், ஆண்டவருக்கும் பன்னிரண்டு சீஷர்களுக்கும் இரவு ஓய்விடமும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதை அறிந்திருந்தாள். அது மிகுந்த வேலை. அந்தச் செயல்களில் அவள் சோர்ந்துபோனாள். அதனால், ஆண்டவரிடத்தில் புலம்பி, மரியாளையும் தமக்கு உதவ அனுப்புமாறு கேட்டுக்கொண்டாள்.
ஆண்டவரின் அன்பு:
ஆண்டவர் மார்த்தாளை நேசித்ததினால், கனிவாக அவளை இருமுறை அழைத்தார். ஆண்டவர், தெரிவுகள் மற்றும் முன்னுரிமைகளின் முக்கியத்துவத்தை அவளுக்குப் போதித்தார். மார்த்தாள் பாவம் செய்யவில்லை, ஆம் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் திணறி இருந்தாள்.
சிறந்ததும் நன்றானதும்:
ஒரு பழமொழி உண்டு: “நல்லது என்பது சிறந்ததின் சத்துரு.” ஆண்டவருக்காக பிஸியாக இருப்பது நல்லது தான், ஆனால் அவருடைய பாதங்களில் அமர்ந்து கற்றுக்கொள்வது சாலச் சிறந்தது.
தெரிவுகள்:
மார்த்தாளின் தெரிவுகள் தற்போதையவற்றில் மையப்படுத்தப்பட்டிருந்தது, ஆனால் மரியாளின் தெரிவுகள் நித்தியமானவை; அவை அவளிடமிருந்து எவராலும் பறிக்கப்பட்டுவிட முடியாது.
ராஜ்ய முன்னுரிமை மற்றும் நித்திய கண்ணோட்டத்துடன் நான் சிறந்ததைத் தெரிந்தெடுக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran