கண்களுக்கு கலிக்கம்

பத்மு தீவில் ,யோவானுக்கு ஆண்டவர் வெளிப்படுத்திய சத்தியங்களை வெளிப்படுத்தின விசேஷத்தில் பார்க்கிறோம் .அதில் இரண்டு மற்றும் மூன்றாவது அதிகாரங்களில் ஏழு சபைகளுக்கும் ஆண்டவர் சொல்லிய  காரியங்கள் தரப்பட்டிருக்கிறது. ஆவியானவர் சபைகளுக்கு சொல்வதை காதுள்ளவன் கேட்கக்கடவன் என்கிற வார்த்தையை நாம் பார்க்கிறோம். இந்த நாளின் தியானத்துக்கு நாம் எடுத்திருக்கிற வார்த்தை  வெளிப்படுத்தின விசேஷம் 3 :17 & 18.இது லவோதிக்கேயா சபைக்கு சொல்லப்பட்டது.நீ உன்னிடத்தில் எல்லாம் இருக்கிறது என்று நினைக்கிறாய் ஆனால் எதுவுமே இல்லை. நீ மாய்மாலமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்று குறிப்பிடுகிறார் .
17 மற்றும் 18  வசனங்களில், நீ ஐசுவரியவானாய் இருப்பதாக நினைக்கிறாய் ஆனால் தரித்திரனாய் இருக்கிறாய்,என்னிடம் வந்து பொன் ஆபரணங்களை வாங்கிக்கொள் .நீ நிர்வாணியாக இருக்கிறாய்.. என்னிடத்தில் வந்து வெண் வஸ்திரங்களை வாங்கிக்கொள் ,நீ குருடனாய் இருக்கிறாய் ,உன் கண்களுக்கு கலிக்கத்தை வாங்கிக் கொள் என்று குறிப்பிடுகிறார். கலிக்கம் என்பது நாம் பயன்படுத்துகிற களிம்பு  ஆகும். இந்தக்  களிம்பு   கண்களை சுகப்படுத்தும் ஒரு பொருளாக இருக்கிறது. அந்த நாட்களிலே லவோதிக்கேயா பட்டணம் இந்த கலிக்கங்களை தயாரிப்பதிலே பெயர் பெற்றது. நீங்கள் தயாரிக்கிற கலிக்கங்களைக் கொண்டு உங்கள் கண்களை சுத்தப்படுத்த முடியாது .என்னிடத்தில் நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஆண்டவர் உவமையாக சொல்கிறார்.  

 நம்முடைய பக்தி அவர் விரும்புகிறபடி இல்லை .நம்முடைய வாழ்க்கை மாய்மாலமாய் இருக்கிறது. நம்முடைய செயல்பாடுகள் உண்மை இல்லாமல் இருக்கிறது .அதைத்தான் இந்த லவோதிக்கேயா  சபைக்குஆண்டவர் சொல்கிறார்..  'நீ அனலுமின்றி குளிருமின்றி இருக்கிறாய்..உன்னை வாந்தி பண்ணிப் போடுவேன்'  என்று (வெளி 3:16)

ஏசாயா தீர்க்கதரிசி ஆண்டவருடைய பிரசன்னத்திலே  நிற்கும் போது அந்த அக்கினி மயமான குரடுகள் போன்ற ஒன்று வந்து இவரைத் தொடும்போது சொன்ன காரியம் என்ன? ஐயோ! "நான் அசுத்த உதடுகள் உள்ள மனுஷன்" என்று சொல்கிறான். தன் நிலையை அவன் உணர்ந்து கொள்கிறான். பரிசேயனும் ஆயக்காரனும் ஜெபிக்கும் போது பரிசேயன் தன்  பெருமைகளை அள்ளி விடுகிறான் .ஆனால் ஆயக்காரன் தன் கண்களை வானத்திற்கு ஏறெடுக்கத்  துணியாமல் ..அவன் ஜெபித்ததை நாம் பார்க்கிறோம் .அவனல்ல இவனே நீதிமானாக்கப்பட்டான் என்று வசனம் சொல்கிறது. 

நீங்களும் நானும் சுகமாக, நம் ஆவிக்குரிய குருட்டுத்தன்மை மாற ,ஆண்டவர் நம் கண்களைத் தொட வேண்டியது அவசியம்.  அதை விட்டு வெளியே வர இந்த நாளிலே நம் கண்களுக்கு கலிக்கத்தைத்  தரும்படி ஆண்டவரை நோக்கிப் பார்ப்போமா? அவர் தொடும்போது நாம் நம்முடைய நிலையை உணர்வோம். அவரது மகத்துவங்களை உணர்வோம். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவோம். நம் கண்களுக்கு கலிக்கம் அவசியம்.அவரிடம் அதை வாங்கிக் கொள்வோம்.

Mrs.M.I.Jency Paul