மனிதர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்கு பயப்படுகிறார்கள். ஆதாம் மற்றும் ஏவாளின் வாழ்க்கையில் பாவம் நுழைந்தபோது, பயமும் நுழைந்தது. அவர்களுடன் ஒரு மாலை நேரத்தை ஐக்கியம் கொள்ள விரும்பிய நல்ல பரிசுத்த தேவனுக்கு அவர்கள் பயந்தார்கள் (ஆதியாகமம் 3:8-10). அன்றிலிருந்து எதிர்மறை உணர்ச்சி மனிதகுலத்தை வாட்டி வதைக்கிறது. ஒரு கணக்கெடுப்பின்படி, 1990 லிருந்து 2010 வரைக்கான ஒட்டுமொத்த தலைமுறைகள் , குறிப்பாக துக்கம் மற்றும் இழப்பு, குடும்ப மன அழுத்தம் அல்லது அதிர்ச்சி, நிதி மன அழுத்தம் மற்றும் கஷ்டம் போன்ற பகுதிகளில் கணிசமாக அதிக பயத்துடன் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. பயப்படாதே என்ற வார்த்தை கிங் ஜேம்ஸ் (king James version) பதிப்பில் 103 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ‘தேவனுக்கு மாத்திரம் பயப்படுங்கள்’, வேறு எதற்கும் பயப்பட வேண்டாம் என்பதைக் குறிக்கும் சொற்றொடர் பல முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
துக்கம் மற்றும் இழப்பு:
உலகில் உயிர், வாய்ப்புகள், பணம், நற்பெயர் மற்றும் ஆரோக்கியம் போன்ற காரியங்களில் ஏற்படும் இழப்பு என்பது ஒரு உறுதியான விஷயம். அப்படியிருக்கும்போது ஒரு நபர் தேவனைத் தவிர வேறு எதையும் அல்லது வேறு யாரையும் சார்ந்து இருக்கும்போது, பேரழிவு தரும் துக்கமும் இழப்பும் தாங்க முடியாத அளவு ஏற்படும். தேவனையும், அவருடைய வார்த்தையையும் அறிந்துகொண்டு அவரை நம்புவதைக் கற்றுக்கொள்வது இழப்பு குறித்த சாதாரண பயங்களை நீக்குகிறது.
குடும்ப மன அழுத்தம்:
ஈசாக்கு மற்றும் ரெபெக்காள் போன்று இன்றும் பல தம்பதிகள் குடும்பங்களுக்குள் பாரபட்சம் காட்டுகிறார்கள், அது குடும்பத்தில் பிரிவினையையும் மன அழுத்தத்தையும் உருவாக்குகிறது. யாக்கோபு இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தனது பெற்றோரிடமிருந்தும், சகோதரர் ஏசாவிடமிருந்தும் பிரிய வேண்டியிருந்தது. பொறாமை கொண்ட சகோதரர்கள் யோசேப்பை ஒரு அந்நிய நாட்டில் அடிமையாக விற்றனர். விவாகரத்து குழந்தைகளை வாழ்நாள் முழுவதும் பேரழிவிற்கு உட்படுத்தக்கூடும். பிதாவாகிய தேவனும், குடும்பமான சபையும், எந்தவொரு விசுவாசியையும் குடும்பத்தில் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து சமாளித்து வெளிவர ஒரு நபருக்கு உதவ முடியும்.
நிதி மன அழுத்தம்:
தேவ ராஜ்யத்திற்கும் அவருடைய நீதி நியாயத்திற்க்கும் முன்னுரிமை அளிக்க கர்த்தர் தம் சீஷர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அதனோடு எல்லாமே சேர்க்கப்படும் என்று கூறினார். துரதிர்ஷ்டவசமாக, பலர் எதிர்காலத்தைப் பற்றியும், உணவு மற்றும் உடையின் தேவையைப் பற்றியும் கவலைப்படுகிறார்கள். பரலோகத் தந்தை பறவைகளுக்கு உணவளித்து, புல்லுக்கு ஆடை அணிவித்தால், அவர் தனது பிள்ளைகளை எவ்வளவு அதிகமாகக் கவனித்துக்கொள்வார்? (மத்தேயு 6:25-33). அவர் தனது சீஷர்களுக்கு அவர்களின் அன்றாடத் தேவைகளுக்காக, நமது அன்றாட உணவுக்காக ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தார் (மத்தேயு 6:11).
பாடுகள்:
மனிதகுலத்தின் பாவத்திற்கான சாபமாக உலகம் முட்களாலும், நெறிஞ்சல்களாலும் நிறைந்துள்ளது. வாழ்க்கை எளிதாக இருக்கப்போவதில்லை. ஆனால் தேவன் எல்லா கஷ்டங்களையும் எதிர்கொள்ள பலத்தையும் உதவியையும் தருகிறார். ஆகையால் பயம் வேண்டாம்.
தேவனின் பரிபூரண அன்பு என் எல்லா பயங்களையும் நீக்கிவிட்டதா? (1 யோவான் 4:11)
Rev. Dr. J.N. Manokaran