அபராதம் விதிக்கப்பட்டது: அறியாமை ஒரு சாக்குப்போக்கு அல்ல

மலையாள நடிகை நவ்யா நாயர், மெல்போர்ன் விமான நிலையத்தில் தனது கைப்பைக்குள் சுமார் 15 சென்டிமீட்டர் நீளமுள்ள மல்லிகைப் பூச்சரத்தை வைத்திருந்ததைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு 1,980 ஆஸ்திரேலிய டாலர் (சுமார் ₹1.14 லட்சம்) அபராதம் விதித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது சட்டவிரோதம் என்பதைக் அவர் ஒப்புக்கொண்டு, “அறியாமல் செய்த தவறு” என குறிப்பிட்டார். அதே நேரத்தில், “அறியாமை ஒரு காரணமல்ல” என்றும் அவர் கூறினார் (Hindustan Times, 7 செப்டம்பர் 2025). காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் வேறு சில பொருட்களை சர்வதேச இடங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இதுபோலவே, உண்மையான தேவன், அவருடைய நித்திய வல்லமை மற்றும் தெய்வீக குணாதிசயங்களை அறியாமலிருப்பதும் காரணமாகாது என்று அப்போஸ்தலன் பவுல் எழுதுகிறார் (ரோமர் 1:20).

சிருஷ்டியில் வெளிப்பாடு:
தேவன் சிருஷ்டிகர்; காணப்படும் அனைத்துச் சிருஷ்டியும் தேவனைப்பற்றிய சாட்சியையும் ஆதாரத்தையும் வெளிப்படுத்துகிறது. தலைமுறைகளாக நிலைத்து நிற்கும் இந்தச் சிருஷ்டி, தேவனுடைய நித்திய வல்லமையை அறிவிக்கிறது. ஆகாயமும் விண்வெளியும், வானமும் தேவனுடைய மகிமையை அறிவிக்கின்றன. அவை நாள்தோறும் தேவனுடைய நித்திய வல்லமை, குணங்கள் மற்றும் மகிமையை அறிவித்துக் கொண்டே இருக்கின்றன (சங்கீதம் 19:1–2).
ஆனால், சிலர் சிருஷ்டியால் கவரப்பட்டு, சிருஷ்டிகரை விட்டு சிருஷ்டியையே வணங்குகின்றனர். சிலருக்கு “பூமித்தாய் ” தெய்வமாகிறது; மற்றவர்களுக்கு சூரியனும் கோள்களும் தெய்வங்களாக மாறுகின்றன.

நியாயப்பிரமாணத்தில் வெளிப்பாடு:
பணக்காரன் மற்றும் லாசரு பற்றிய உவமையில், நரக வேதனையில் இருந்த பணக்காரன், தன் ஐந்து சகோதரர்களை எச்சரிக்க லாசருவை உலகத்திற்கு அனுப்புமாறு ஆபிரகாமிடம் வேண்டினான். அவர்கள் மனந்திரும்பி, அந்த நித்திய அழிவிற்குச் செல்லாமல் இருக்கவே அவன் இதைக் கேட்டான்.
ஆனால் ஆபிரகாம், “மோசேயின் நியமத்தையும் தீர்க்கதரிசிகளையும் அவர்கள் கேட்கவில்லை என்றால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து சொன்னாலும் அவர்கள் நம்பமாட்டார்கள்” என்று கூறினார் (லூக்கா 16:19–31). தேவன், உலகத்திற்கு தமது நியமத்தை போதிக்க இஸ்ரவேல் தேசத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அவர்கள் தாமே நியமத்தைக் கடைப்பிடிக்கவில்லை; அதை உலகத்திற்கு அறிவிக்கவும் தவறினர்.

இயேசுவில் வெளிப்பாடு:
தேவன், பல்வேறு முறைகளில் மனிதர்களோடு பேசினார்; இறுதியாகத் தமது குமாரனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவின்மூலம் பேசினார் என்று வேதாகமம் அறிவிக்கிறது (எபிரெயர் 1:1–2).
ஆகையால், எல்லா சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கவும் போதிக்கவும் சபைக்கு கட்டளை அளிக்கப்பட்டுள்ளது (மத்தேயு 28:18–20).

தேவனுடைய நியமத்தையும் இரட்சிப்புக்கான அவருடைய ஏற்பாட்டையும் அறியாதிருப்பது ஒரு சாக்குப்போக்கு அல்ல என்பதை நான் உணர்ந்திருக்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran