ஒரு ரஷ்ய பழமொழி இப்படியாக உள்ளது; ‘தேனீக்கள் பூக்களில் நறுமணத்தை தேடுகின்றன, ஈக்கள் அசுத்தத்தைத் தேடுகின்றன’; நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்பது நீங்கள் யார் என்பதைப் பொறுத்தது. கெட்ட ஜனங்களிடமிருந்தே கெட்டவை வருகின்றன என்று வேதாகமம் கூறுகிறது (1 சாமுவேல் 24:13). உள்ளத்தில் இருந்து வெளியே வருவதுதான் அவனைத் தீட்டுப்படுத்தும் என மாற்கு 7:15ல் வாசிக்கிறோம். சுற்றுச்சூழலின் காரணமாக அல்லது மற்றவர்களின் நிர்ப்பந்தத்தால் ஒருவர் பாவம் செய்கிறார் என்று பலர் நம்புகிறார்கள். இருப்பினும், மக்களனைவரும் பாவம் செய்து தேவனுடைய மகிமையைப் பெறத் தகுதியில்லாதவராகிவிட்டனர் (ரோமர் 3:23) என வேதாகமம் தெளிவாக கூறுகிறது.
தேனீக்கள்:
தேனீக்கள், பூக்களிலிருந்து சேகரிக்கும் போது, அவை பயிர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. பாலும் தேனும் ஓடும் தேசத்திற்கு இஸ்ரவேலர்களை அழைத்துச் செல்வதாக தேவன் வாக்குறுதி அளித்தார் (யாத்திராகமம் 3:8; 17). உண்மையில், தேன் தேவனிடமிருந்து கிடைத்த நல்ல பரிசு அல்லது ஒரு நல்ல உணவு (நீதிமொழிகள் 16:24; 24:13) எனலாம். தேன் மிகவும் மதிப்புமிக்க பொருளாகவும், இனிமையாகவும், வலிமையளிக்க கூடியதாகவும் மற்றும் ஞானத்தின் மூலமாகவும் கருதப்படுகிறது (எசேக்கியேல் 27:17; சங்கீதம் 19:10; 1 சாமுவேல் 14:27-29). மரித்த சிங்கத்தின் உடலில் தேனீக் கூட்டத்தைக் கண்டதையும், அந்த தேனை எடுத்து சிம்சோன் சுவைத்ததையும் நாம் நியாயாதிபதிகள் 14ல் வாசிக்கிறோம்.
ஈக்கள்:
எகிப்து தேசத்தை தேவன் நியாயந்தீர்த்த மூன்றாவது வாதை ஈக்கள் (யாத்திராகமம் 8:20-32). குப்பைக் கிடங்கு இருந்தால் ஈக்கள் இருக்கும். துர்நாற்றம் அல்லது அசுத்தம் ஈக்களை ஈர்க்கிறது. ஒரு தோட்டத்தில், குப்பைகள் ஒரு மூலையில் இருக்கலாம், அங்கு ஈக்கள் ஒன்றாக மொய்க்கும். இதற்கு நேர்மாறாக, தேனீக்கள் பூக்களின் இனிமையான வாசனையிலிருந்து தேனை சேகரிக்க பரவுகின்றன.
ஈர்ப்பு:
அசுத்தம் ஈக்களை ஈர்க்கிறது. அவ்வாறே, பாவிகளும் பாவம், தீமை, அக்கிரமம் என்ற அசுத்தத்தால் ஈர்க்கப்படுகிறார்கள். பாவம் செய்தவர்களால் பாவத்தை எதிர்த்து, அதிலிருந்து மேற்கொள்ள முடியாது. தேனீக்கள் பூக்களின் வாசனையாலும், தேனின் இனிமையாலும் ஈர்க்கப்படுகின்றன. கர்த்தருடைய சீஷர்கள் சத்தியம், நீதி மற்றும் தேவனுடைய வார்த்தையில் ஈர்க்கப்படுகிறார்கள்.
தெரிவுகள்:
தெரிவு செய்யும் சுதந்திரத்தை தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார். விசுவாசிகள் தேவ வார்த்தையால் ஈர்க்கப்பட்ட தேனீக்களைப் போல இருக்க வேண்டும் மற்றும் கனிக்கொடுக்கும் ஆவிக்குரிய செயல்முறையை முன்னெடுக்க வேண்டும். முதிர்ச்சியற்ற மற்றும் சோம்பேறி சீஷர்கள், ஈக்களைப் போல, உலகின் அழுக்கு, பாவம், அநீதி மற்றும் தீமை ஆகியவற்றில் ஈர்க்கப்பட்டு இரையாவார்கள்.
நான் தேனீயைப் போல நறுமணத்தைச் சேகரித்து பரிசுத்தமான வாழ்க்கை வாழ்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran