பொய்யை அல்ல, சத்தியத்தைப் பின்பற்றுங்கள்

சுவிசேஷகர் ஒருவர், ஒரு நாட்டின் அதிபரை நிகழ்ச்சி ஒன்றில் சந்திக்க நேர்ந்தது.  அப்போது அவர் அதிபரை அணுகி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புவதாகக் கூறினார்.  உடனடியாக அந்த அதிபர் எழுந்து நின்றார்.  அதற்கு சுவிசேஷகர்; "ஐயா, நீங்கள் தாராளமாக அமர்ந்திருந்தே நான் சொல்வதை கேட்கலாம்" என்றார். அதற்கு அந்த அதிபர்; "நீங்கள் யாரைப் பற்றி பேசப் போகிறீர்களோ அந்த கடவுளை மதிக்க நான் எழுந்து நிற்கிறேன்" எனப் பதிலளித்தார்.  ஆம், அவர் எழுந்து நின்று மரியாதையுடனே சுவிசேஷ செய்தியைக் கேட்டார்.‌ இருப்பினும், அவர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.  இதைதான் கர்த்தராகிய ஆண்டவர் "இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது" (மத்தேயு 15:8-9) என்கிறார்.‌

உயர்ந்த கருத்து:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் கொண்ட ஒரு குருவின் கூற்று என்னவென்றால்;   "நான் மாத்திரம் இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாட்களில் எருசலேமில் இருந்திருந்தால், என் இதயத்தைப் பிழிந்து அவருடைய பாதங்களை இரத்தத்தால் கழுவியிருப்பேன்" என்பதாகும். ஆனால் அவர் கர்த்தராகிய இயேசு, தேவனுடைய குமாரன் என்பதை ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை. ஆக, அவர் தனது வார்த்தைகளால் பக்தியை வெளிப்படுத்தினாரே ஒழிய, ஆனால் அவரைப் பின்பற்றவில்லை அல்லது விசுவாசத்தோடு  ஏற்றுக்கொள்ளவில்லை.

உயர்ந்த நிலை:
பல கல்வி நிறுவனங்களை நடத்தும் ஒருவர், மற்ற தத்துவஞானிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் இணைத்து ஆண்டவர் இயேசுவையும் முக்கியமானவர்களில் ஒருவராக காட்டியுள்ளார்.  அவரைப் பொறுத்தவரையில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகின் மிகப்பெரிய ஆசிரியராக இருந்தார், ஆனால் உலக இரட்சகர் அல்ல.

 உயர்ந்த புரிதல்:
 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பூமிக்குரிய ஊழியத்தின் போது வேதபாரகர்களில் ஒருவன் அவருடைய போதனைகளை தெளிவாக சுருக்கமாகக் கூறினான்.  தேவனை நேசிப்பதும் அண்டை வீட்டாரை நேசிப்பதும் தேவ ராஜ்யத்தின் சாராம்சம்  என்றும்; அது பலிகளை விட மேலானது என்றும் கூறினான். அதற்கு ஆண்டவர் அவன் ராஜ்யத்திலிருந்து தூரமானவன் அல்ல என்று பதிலளித்தார் (மாற்கு 12:28-34). பலர் அவருடைய போதனைகளில் சிலவற்றை நேசிக்கிறார்கள், புரிந்துகொள்கிறார்கள் மற்றும் பின்பற்றுகிறார்கள், ஆனால் தேவ ராஜ்யத்தில் நுழையவில்லை.  துரதிர்ஷ்டவசமாக, இன்னும் சிலர் தாங்கள் தேவ ராஜ்யத்தில் இருப்பதாக கற்பனை செய்து கொள்கிறார்கள்.

உயர்ந்த பக்தி:
தேவாலயக் கட்டிடத்தைக் கடக்கும்போதோ அல்லது வேதாகமத்தைக் காணும் போதோ  கைகளைக் கூப்பி வணங்குகின்றனர்,  சிலர் சிலுவை அடையாளத்தை இடுகின்றனர்.  ஆனாலும், அவர்கள் அவரைப் பின்பற்றுவதில்லை.

உயர்ந்த அறியாமை:
தேவன் இயற்கையிலும், வேதாகமத்திலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகவும் தம்மை வெளிப்படுத்தினார்.  யாரேனும் சத்தியத்தை அடையவில்லை என்றாலோ அல்லது சத்தியத்தை பொய்யாக மாற்றினாலோ, அது மன்னிக்க முடியாது.‌ "தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்" (ரோமர் 1:25).  

அவரைப் பற்றி எனக்கு விசுவாசமும், அன்பும், அறிவும் இருக்கிறதா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்