“I’m OK, You’re OK” (நான் நன்றாக இருக்கிறேன், நீயும் நன்றாக இருக்கிறாய்) என்ற வாழ்க்கை நிலைப்பாடு, மனிதர்கள் தங்களைப் பற்றியும், பிறரைப் பற்றியும் எப்படிப் பார்ப்பார்கள் என்பதை விளக்கும் நான்கு நிலைப்பாடுகளில் ஒன்றாக, 1967ல் வெளியான தாமஸ் ஆண்டனி ஹாரிஸ் அவர்களின் எழுத்தில் கூறப்பட்டுள்ளது. இது மனித உறவுகள் குறித்து சில உளவியல் கருத்துகளை வழங்குகிறது. ஆனால், வேதாகமம் எதை வலியுறுத்துகிறது என்றால்:
ஒரு மனிதன் கர்த்தராகிய தேவனோடு சரியான உறவை ஏற்படுத்திக் கொண்டால்,
அதன் பயனாக
தன் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், அருகிலிருப்போர்,
அத்துடன் அந்நியரோடும்
அன்பும் அமைதியும் உள்ள உறவில் வாழ முடியும். “உன் தேவனாகிய கர்த்தரை நேசிக்க வேண்டும். முழு இதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும் அவரை நேசிக்க வேண்டும். இது தான் முதலாவது மிக முக்கியமானதுமான கட்டளை. இரண்டாவது கட்டளையும் முதலாவது கட்டளைப் போன்றதே ‘நீ உன்னை நேசிப்பதைப்போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்’ (மத்தேயு 22:37-39) என்பதே இயேசு கிறிஸ்துவின் கட்டளை.
I’m OK, You’re OK — நான் நன்றாக இருக்கிறேன், நீயும் நன்றாக இருக்கிறாய்
ஒரு மனிதன் தன்னை ஏற்றுக்கொண்டு, பிறரையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பான். அவன் மனிதர்களின் கண்ணியத்தையும் மதிப்பையும் உணர்கிறான்;
பிறரை மதித்து, நேசித்து, மரியாதையாக நடந்து கொள்கிறான். அத்தகைய நபர்,
பிறருக்கும் அவர்களுக்கு என் சொந்த உரிமைகள், தீர்மானங்கள், விருப்பங்கள், ஆசைகள், மதிப்புகள், இலக்குகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்கிறான். எனவே,
பிறரை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் அன்புடனும் நடத்துகிறான். அவர்கள் ஆரோக்கியமான, விரும்பத்தக்க, மகிழ்ச்சியான உறவுகளை அனுபவிக்கிறார்கள். கிறிஸ்தவ பார்வையில்,
தேவன் ஒவ்வொருவரையும் தன் சாயலிலும் ரூபத்திலும் படைத்தார் என்பதே இந்த அணுகுமுறைக்கு அடித்தளம்.
அதனால், ஒருவரை நான் மதிப்பது என்பது
தேவனுடைய படைப்பை மதிப்பதே.
I’m OK, You’re Not OK — நான் சரி, நீ சரியில்லை
இந்த மனப்பான்மை கொண்டவர், தான் மற்ற அனைவரையும் விட மேலானவர் என்று நினைப்பார். பிறரைக் கேட்க விருப்பமில்லை; ஆணையிடவும், கட்டளையிடவும், மற்றவர்களை ஆளவும் முயல்வார். இத்தகைய அணுகுமுறை காரணமாக,
அவர்களுடைய உறவுகளில் முறிவுகள், விவாதங்கள், சச்சரவுகள் ஏற்படும். இவர்கள் மேன்மை உணர்வு கொண்டு,
அகங்காரத்துடன் நடந்து கொண்டு, பிறரை துன்புறுத்தவும் தாழ்த்திப் பேசவும் செய்கிறார்கள். ஆனால் வேதாகமம்,
“பிறரை தம்மைவிட மேலானவர்களாக எண்ணுங்கள்” (பிலிப்பியர் 2:3) என்று கற்பிக்கிறது.
I’m Not OK, You’re OK - நான் சரியில்லை, நீயே சரி (தன்னம்பிக்கை குறைவு, தாழ்வு மனப்பான்மை, பிறரைச் சார்ந்த நிலை)
இந்த மனநிலையில் உள்ளவர்கள், தாங்கள் போதியவர்களல்ல, திறமையற்றவர்கள் என எண்ணுகிறார்கள். பிறரை பொறாமையுடனும், மனக்கசப்புடனும் பார்க்கிறார்கள். தம்மிடம் நல்லது எதுவும் இல்லை என நினைப்பதால், கற்றுக்கொள்ளவும், வளரவும் அவர்களுக்கு கடினம். இதனால் அவர்கள் தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை இழப்பு, பிறரை சார்ந்து வாழ்தல் எனும் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். இவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி,
மற்றவர்கள் அவர்களை சுரண்டலாம், உணர்ச்சியால் கட்டுப்படுத்தவும், தவறாக நடத்தவும் வாய்ப்பு அதிகம் மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்படலாம்.
I’m Not OK, You’re Not OK - நானும் சரியில்லை, நீயும் சரியில்லை
இத்தகைய நிலையில் உள்ளவர்கள், தங்களையும் பிறரையும் வெறுப்பும் கோபத்துடனும் பார்க்கிறார்கள். அதனால், வாழ்க்கையில் முன்னேற்றம், எதிர்காலம் குறித்து எந்த அக்கறையும் வைக்கமாட்டார்கள். அவர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் இல்லை, உரையாடல் விருப்பம் குறைவு, செயல்திறன் மிகவும் குறைவு, பிறரையும் மனச்சோர்விற்கு தள்ளுவார்கள். தெளிவான பார்வை, இலக்கு இல்லாததால், அவர்கள் மனச்சோர்வு, எதிர்மறை மனோபாவம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். உறவை விலக்கிக் கொண்டு,
எந்த முயற்சியும் எடுக்காமல் பின்வாங்கி வாழ்வார்கள்.
தேவன் மாற்றத்தைத் தருகிறார்:
தாழ்மையுடன் அவரிடத்தில் வருபவர்களுக்கு, அவர்மேல் நம்பிக்கை வைத்து, அவர் வடிவமைப்புக்கு இணங்கி, வலி மற்றும் சோதனைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்து, வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வளர வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களை, தேவன் கிருபையால் மாற்றுகிறார். கிறிஸ்தவர்கள்,
தம்மைச் சூழவுள்ளவர்களுடன் ஆரோக்கியமான உறவுகளை வளர்க்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஆம், அன்பு, சமாதானம், மன்னிப்பு, அக்கறை ஆகியவற்றின் மூலம்
தேவனின் குணத்தை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
என் உறவுகள் ஆரோக்கியமானவையா, இனிமையானவையா, சமாதானமுடையவையா?
Rev. Dr. J.N. Manokaran