கிறிஸ்தவனின் பயணம் என்பது மிகக் கீழ்மட்டமான நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலையை அடைவதற்கான பயணமாகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்து, மனிதர்களை உயர்த்தி, அவர்களை பரலோக மகிமைக்கு அழைத்துச் செல்லவே வந்தார்.
விரக்தியின் குழி:
தாவீது எழுதுகிறபடி, மனிதர்கள் பாவிகளாகத் துன்பத்தின் குழியில் சிக்கி, சேற்றுக் களிமண்ணில் தவிக்கிறார்கள் (சங்கீதம் 40:2). அந்தக் குழி "பயங்கரமான குழி" என்றும் குறிப்பிடப்படுகிறது. அந்தப் படுகுழி ஆழமானது, செங்குத்தானது, துர்நாற்றம் வீசுகிறது, இருட்டாக இருக்கிறது, வழுக்கும். ஆழமான குழியில் இருக்கும் ஒரு பாவியால் செங்குத்தான, வழுக்கும் சரிவில் ஏறுவது சாத்தியமில்லை. அந்த ஆழமான பகுதிகளில் வெளிச்சமும் இருக்காது. எனவே, நம்பிக்கையைத் தரக்கூடிய ஒளியைப் பார்ப்பது கூட கடினமே. நம்பிக்கைக்குப் பதிலாக, கொடிய விரக்தி இருக்கிறது. இதுதான் எல்லா மனிதர்களின் தேவ காரியத்தின் நிலை.
சேற்றில் உள்ள களிமண்:
அந்த குழி சதுப்பானக் களிமண்ணால் நிரம்பியிருக்கிறது. அந்தக் களிமண் ஒட்டக்கூடியது; அது உள்ளே விழுந்தவரை மெதுவாக உறைந்துவிடச் செய்கிறது. ஒருவர் அதிலிருந்து வெளியே வர முயற்சிக்கிறபோது, அவர் இன்னும் ஆழமாகக் கீழே செல்வதைத் தாவீது விவரிக்கிறார். இதுவே மரணத்திற்கு வழிவகுக்கும் துன்பத்தின் குழியாகும், இறுதியில் அது மரணத்தையே ஏற்படுத்தும். பாவிகள், தங்கள் சொந்த முயற்சிகளால், தங்களை ஒருபோதும் காப்பாற்றிக் கொள்ள முடியாது, அது பலனளிக்காது. பாவத்திலிருந்து விடுதலை பெற, எந்தப் பெயரும், மதமும், மந்திரமும், மரபுகளும், தீர்த்தயாத்திரைகளும், தத்துவங்களும், மனிதர்களும் உதவ முடியாது. இரட்சிக்க மனிதருக்கு கொடுக்கப்பட்ட பெயர், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரைத் தவிர வேறு எதுவும் இல்லை (அப்போஸ்தலர் 4:12).
உயர்த்தப்படல்:
பாவியை தேவன் சேற்றிலிருந்து தூக்கி எழுப்பி, அகலமானதும், பாதுகாப்பானதும், நிலைத்ததும் ஆன ஒரு பாறையின் மேல் நிறுத்துகிறார். அந்த பாறை தேவனின் வாக்குத்தத்தங்களும், அடித்தளமும், உடன்படிக்கையும் ஆகும்; அதாவது தேவனுடைய வார்த்தையே அந்த பாறையாகும்.
பரலோகத்தில் ஓர் இடம்:
பவுல் மேலும் விளக்குகிறதாவது, பாவிகள் எழுப்பப்பட்டு, கிறிஸ்துவோடே சேர்த்து பரலோக இடங்களில் அமர்த்தப்படுகிறார்கள் (எபேசியர் 2:6). பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்த தாவீது இதனை காணவோ, உணரவோ முடியவில்லை. ஆனால், புதிய ஏற்பாட்டில் உள்ள பரிசுத்தர்களாகிய நம்பிக்கையாளர்கள், அனைவரும் அவரோடே அமரும் சிறப்பைப் பெற்றுள்ளனர். பாவிகளை நீதிமான்களாக மாற்றி, தேவனுடைய குமாரனுடன் அமரவைத்தது எவ்வளவு பெரிய கிருபை! எந்த ராஜாவும் தன் சிங்காசனத்தைப் பகிர்ந்துகொள்வானா? இல்லை. ஒருபோதும் இல்லை. ஆயினும், ராஜாதி ராஜாவாகிய ஆண்டவர் நம்மை உயரிய நிலையில் அமரவைக்கிறார் என்பது எவ்வளவு மேன்மை!
நான் அதல பாதாளத்திலிருந்து உச்சத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கிறேனா? சேற்றிலிருந்த என்னை தேவன் தூக்கி விட்டார் என்பதை உணருகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran