பொருளாசை: ஒரு கைப்பேசிக்காகத் தற்கொலையா

ஐபோன் வாங்கித் தர வேண்டும் என்று பெற்றோரிடம் வற்புறுத்திய ஒரு சிறுவன், அது கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினான். ஒரு குன்றின் உச்சிக்குச் சென்ற அவன், பெற்றோரும் ஊர் மக்களும் கூறிய அறிவுரைகளைக் கேட்க மறுத்தான். அவனைச் சமாதானப்படுத்தி, பாதுகாப்பாக மீட்டுக்கொண்டு வருவதற்காக அவனது தந்தை குன்றின் மீது ஏறினார். அப்போது இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தனர். தனது கணவர் இறந்ததைக் கண்ணெதிரே கண்ட தாயும் தற்கொலை செய்துகொண்டார். இவ்வாறு, அந்த இளைஞன் ஆசைப்பட்ட ஓர் ஐபோனுக்காக மூன்று உயிர்கள் பலியாகின (India Today, ஆகஸ்ட் 21, 2026).

உயிர் புனிதமானது (Life is Sacred):
மனிதன் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டவன் (ஆதியாகமம் 1:27). தேவன் அருளிய உயிர் ஒரு புனிதமான பொக்கிஷம்; அதற்கு அளவற்ற உள்ளார்ந்த மதிப்பு உண்டு. ஒவ்வொரு மனிதனும் தனது முழு வாழ்க்கையையும் தேவன் அளித்த பொறுப்பாகக் கருதி, அதனைப் பாதுகாத்து வாழ வேண்டும்.

 பேராசை (Covetousness):
ஒரு பொருளைப் பார்ப்பது பாவமல்ல; ஆனால் அதை எப்படியாவது தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்ற பேராசை பாவமாகும் (யாத்திராகமம் 20:17). மதிப்புமிக்கவை, நல்லவை, பயனுள்ளவை எனப் பல பொருட்கள் உலகில் உள்ளன. ஆனால் அவற்றில் எதையும் சொந்தமாக்கிக்கொண்டால்தான் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும் என்பது அவசியமல்ல.

கொலை (Murder):
மனித உயிர் தேவன் அளித்த பரிசு. அந்த உயிரைப் பறிப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை (யாத்திராகமம் 20:13). பத்துக் கட்டளைகளில் தேவன் மனிதர்களைக் கொலை செய்யக்கூடாது என்று எச்சரிக்கிறார். இந்தக் கட்டளை தற்கொலைக்கும் பொருந்தும். நமது உயிரை நாமே அழித்துக்கொள்ளவும் நமக்கு உரிமை இல்லை.

பொருளாசையின் மாயை (The Illusion of Materialism):
ஓர் ஐபோனின் மதிப்பு மனித உயிருக்கு ஒருபோதும் ஈடாகாது. பொருட்களின் மீது அளவுகடந்த பற்று கொள்வது விக்கிரக ஆராதனைக்கு ஒப்பானது. ஏனெனில் அத்தகைய பொருட்கள், உறவுகள், மனநிறைவு, சமாதானம், வாழ்க்கையின் நோக்கம், ஆவிக்குரிய நலம் போன்ற முக்கியமானவற்றைவிட முதன்மையான இடத்தைப் பிடித்துவிடுகின்றன.

வாழ்க்கையின் அர்த்தம் (Meaning):
வாழ்க்கையின் அர்த்தம் எந்தவொரு நவீனக் கருவியாலும் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, அவருடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம், நம்மைப் படைத்த பிதாவாகிய தேவனுடன் நாம் கொண்டிருக்கும் உறவில்தான் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் அடங்கியுள்ளது.

பெற்றோரின் அன்பு (Parental Love):
பெற்றோர் தங்கள் மகனை நேசித்தார்கள். இளைய குமாரனைப் போல, தனக்குப் பிடித்தபடி வாழ முடியவில்லை என்பதால் அந்த இளைஞன் வீட்டைவிட்டு வெளியேறினான். மரணத்தின் விளிம்பில் இருந்த தனது மகனை மீட்டுக்கொண்டு வருவதற்காகத் தந்தை தனது உயிரையும் பணயம் வைத்தார். ஆனால் அந்த முயற்சியில் அவர் தன் உயிரை இழந்தார்; அந்தத் தாயும் உயிரிழந்தார். 

இச்சம்பவம், உலகத்தை மீட்டு இரட்சிப்பதற்காகத் தமது குமாரனை மரிக்கும்படி அனுப்பிய பரமபிதாவின் அன்பை எனக்கு நினைவூட்டுகிறது. மனிதர்கள்மீது தேவன் கொண்ட அன்பு எவ்வளவு மகத்தானது என்பதை இது சிந்திக்க வைக்கிறது.

எனது வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தமும் நோக்கமும் இருக்கிறதா? நான் எதின் மீது பற்றுறுதி கொண்டு உள்ளேன்? சிந்திப்போம். 

Rev. Dr. C. Rajasekaran