“உம்முடைய கைகளின் கிரியைகளை விட்டு விடாதிரும்” (சங்கீதம் 138:8) என்பதாக தாவீது ஜெபிக்கின்றான். அவருடைய சீஷர்கள், அவருடைய கைகளின் கிரியைகளே. பவுலும், விசுவாசிகள் தேவனுடைய கிரியைகள் அல்லது கரங்களால் உருவாக்கப்பட்டவர்கள் என்று எழுதுகிறார் (எபேசியர் 2:10). தேவன் ஆவியானவர்; மற்றும் மனிதர்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழி, சொற்கள், உருவகங்களைக் கொண்டு வேதாகமம் எழுதப்பட்டுள்ளது (யோவான் 4:24). அதனால், “கைகள்” என்ற சொல், தேவனுடைய கிரியைகளையும், வல்லமையான செயல்களையும் விளக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
உருவாக்கும் கைகள்:
தேவன் ஆதாமை மண்ணிலிருந்து உருவாக்கி, அவனை வடிவமைத்து, அவன் நாசியில் உயிர் மூச்சை ஊதினார் (ஆதியாகமம் 2:7). அவருடைய அதிகாரத்திற்குள், ஒவ்வொரு குழந்தையும் கர்ப்பத்தில் உருவாகி, வளர்ந்து, இவ்வுலகில் பிறக்கிறது (சங்கீதம் 139:13–16). மனிதரை வடிவமைக்கும், வரையறுக்கும், உருவாக்கும் தேவனுடைய படைப்புத் திறமை சொல்லிமுடியாததும், வரையறுக்கப்பட்ட மனித மனதுக்குப் புரியாததுமானது.
வல்லமைமிகு கைகள்:
எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேல் மக்கள், தேவனுடைய வல்லமைமிகு கையினால் வெளியே கொண்டுவரப்பட்டார்கள். அடையாளங்களாலும் அற்புதங்களாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தினார் (உபாகமம் 26:8; யாத்திராகமம் 6:6; எரேமியா 32:17). இஸ்ரவேலின் வரலாற்றில் தேவனுடைய இடையறாத பாதுகாப்பும் வழிநடத்தலும் ஆச்சரியமூட்டுவதாகும்.
வலது கை:
தேவனுடைய வலது கை, காணப்படும் மற்றும் காணப்படாத அனைத்தையும்; முழு பிரபஞ்சத்தையும் உருவாக்கியது (ஏசாயா 48:13). தேவன் தமது இடது கையால் தம்முடைய சத்துருக்களை தாக்கி, தமது வலது கையால் தம்முடைய பிள்ளைகளை பாதுகாப்பார் (சங்கீதம் 138:7-8).
ஆணி குத்தப்பட்ட கைகள்:
மனிதகுலத்தின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டபோது, அவருடைய கைகளில் ஆணிகள் குத்தப்பட்டன. அவர் மரணதண்டனையைத் தமக்கே ஏற்று, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்தார். சீஷர்கள் ஒரே அறையில் பூட்டிக்கொண்டு இருந்தபோது, தோமா அங்கே இல்லாத சமயத்தில், அவர் அவர்களுக்கு தோன்றினார். பின்னர், தோமா இருந்தபோது மீண்டும் அவர்களுக்கு ஆண்டவர் தோன்றி, “உன் கையைக் கொண்டு என் ஆணி குத்தப்பட்ட கைகளைக் தொட்டு, உன் ஐயங்களை நீக்கு” என்று கூறினார் (யோவான் 20:27).
மகிமைமிகு கைகள்:
தேவனுடைய கைகள் வல்லமையிலும் ஆற்றலிலும் மகிமை மிகுந்தவையாகும் (யாத்திராகமம் 15:6).
ஞானமிகு கைகள்:
தரவு இணைப்புடன் கூடிய ஒரு ஸ்மார்ட்போனில் பலரின் தொடர்பு விவரங்கள் சேமிக்கப்படலாம்; ஆனால், ஆதாமிலிருந்து பூமியின் முடிவுவரை உள்ள ஒவ்வொரு மனிதரின் விவரங்களையும் தேவனுடைய ஞானமிகு கரம் தாங்குகிறது. ஒரு தாய் தன் குழந்தையை மறந்துவிடக்கூடும்; ஆனால், ஆண்டவர் தம்முடைய பிள்ளைகளை ஒருபோதும் மறக்கமாட்டார் (ஏசாயா 49:15-16).
அவருடைய உள்ளங்கைகளில் பொறிக்கப்பட்டுள்ளேன் என்பதையும், அவருடைய வலதுகையால் நான் பாதுகாக்கப்படுகிறேன் என்பதை உணர்ந்த நபராக மதித்து மகிழ்கிறேனா? போற்றிக் கொண்டாடுகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran