மோசேயின் மாமனாரான எத்திரோ, தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதி தரங்களைக் கூறினார். அவற்றுள், பொருளாசையை (லஞ்சத்தை) வெறுப்பவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மிக முக்கியமானதாகும் (யாத்திராகமம் 18:21). அந்தப் பழங்காலத்திலேயே கூட, லஞ்சம் ஒரு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனையாக இருந்திருக்கிறது. லஞ்சத்தை வெறுக்காதவர்கள் பேராசைக்கு பலியாவார்கள் (யாத்திராகமம் 20:17). லஞ்சம் வாங்குபவர்கள் நிரபராதிகளுக்கு அநீதி இழைக்கக்கூடும். லஞ்சத்தை எதிர்பார்த்து, ஃபெலிக்ஸ் பவுலை விடுதலை செய்யவில்லையே (அப்போஸ்தலர் 24:26).
லஞ்சத்தை விரும்புதல்:
லஞ்சம் போன்ற தடைசெய்யப்பட்ட ஒன்றை விரும்புவது அல்லது அதன் மீது ஒரு ஈர்ப்பை உருவாக்குவதுதான் முதல் படி. அதை ஒரு பாவம் என்று கருதி அதிலிருந்து விலகி ஓடுவதற்குப் பதிலாக, அதை ஒரு நடுநிலையான விஷயமாக, அதனால் ஏற்றுக்கொள்ளத் தகுந்தது என்று அணுகுவது. ஒருவன் லஞ்சத்தை ஏற்றுக்கொள்ளும்போது, அது திருட்டுத் தண்ணீரைப் போலவும், இரகசியமாக உண்ணப்படும் அப்பத்தைப் போலவும் இனிமையாக இருக்கிறது (நீதிமொழிகள் 9:17). ஒருமுறை சுவைத்த பிறகு, அது ஒரு பழக்கமாகிவிடுகிறது.
லஞ்சத்தின் மீதான அன்பு:
அடுத்த நிலையில், லஞ்சத்தை நேசிக்கத் தொடங்குவார்கள். வெறுப்பு நேசமாக மாறி, மனந்திரும்பலும் வருத்தமும் இல்லாமல் போகும். லஞ்சத்தால் வரும் சுகவாழ்வு, சௌகரியம், என லெளகீக வாழ்க்கைக்கு பழகி விடுவார்கள். தங்களிடம் உள்ள அதிகாரத்தையும் சலுகைகளையும் தவறாகப் பயன்படுத்தி அநியாய இலாபம் தேடுவார்கள். ஆச்சரியமாக, அந்தத் தவறான இலாபமே இன்பம் அளிப்பதாகத் தோன்றும். அதிக லஞ்சம்; அதிக இன்பம். “பணத்தின்மேல் உள்ள ஆசை எல்லா தீமைகளுக்கும் வேர்” என்று பவுல் எழுதுகிறார் (1 தீமோத்தேயு 6:10).
லஞ்சத்தின் மீது மோகம்:
பாவம் மனிதனை கீழே இழுக்கும் சதுப்பு மண்ணைப் போன்றது. இப்போது அநியாயமாகச் சேர்த்த செல்வமும் சொத்துகளும் வாழ்க்கையின் இலக்காகி விடுகின்றன. மேலும் மேலும் லஞ்சம் பெற வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். அது கானல் நீரைப் போன்றது; இது ஒரு மான் கானல் நீரைத் துரத்துவது போன்றது. அது எவ்வளவு வேகமாகத் துரத்துகிறதோ, அவ்வளவு தூரம் கானல் நீர் விலகிச் செல்லும்.
லஞ்சமாகவே வாழ்தல்:
இறுதியில், வாழ்க்கையே லஞ்சத்தைச் சுற்றி மையமாகி விடுகிறது. அவர்கள் சுவாசிப்பதும், சாப்பிடுவதும், சிந்திப்பதும், தேடுவதும் லஞ்சமே. பணமும் பொருளாதாரமும் அவர்களின் விக்கிரங்களாகி விடுகின்றன. தினமும் அதிகம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு; கிடைக்காவிட்டால் கவலை. என்றென்றும் செல்வந்தராக வாழ விரும்புகிறார்கள்; ஆனால் மரணத்தின் போது எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்ற சத்தியத்தை மறந்துவிடுகிறார்கள்
லேசான மனநிலையும் தேவபக்தியும்:
“போதும் என்கிற மனதுடன் கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” (1 தீமோத்தேயு 6:6). திருப்தி மற்றும் தேவபக்தி ஆகிய ஆவிக்குரிய ஒழுக்கங்களின் கலவையானது இந்த உலகில் ஒரு பெரிய ஆதாயத்தையோ அல்லது ஆசீர்வாதத்தையோ வழங்குகிறது. நன்றியுணர்வே திருப்தியின் இரகசியம்.
என்னிடத்தில் திருப்தியுடன் கூடிய தேவபக்தி இருக்கிறதா?
Rev. Dr. J.N. Manokaran