மனித வாழ்க்கை தேவனின் பரிசு

உயிரை உருவாக்குவது ஒரு தேடல்.
சில விஞ்ஞானிகளுக்கு உயிர் என்பது ஒரு விபத்தின் விளைவு; ஒரு (பெருவெடிப்பு) “பிக் பேங்க்”. சிலருக்கு அது வாழ்க்கையின் ஒரு கலை. மனித உடல் பூமியில் காணப்படும் பல்வேறு மூலப்பொருட்களின் சேர்க்கை மட்டுமே. துரதிர்ஷ்டவசமாக, இவ்வளவு அறிவாளிகள் எல்லாம் படைப்பாளியான தேவனின் அளவற்ற ஞானத்தைத் தேடுகிறார்கள்; ஆனால், அவர் தனது வார்த்தையின் மூலம் வெளிப்படுத்திய உண்மையை நம்ப மறுக்கிறார்கள். மனிதர்கள் அறிவின் தேடலால் படைப்பாளியை அறிந்துகொள்ள முடியுமா? அல்லது, தேவன் கொடுத்த வெளிப்பாட்டை நன்றியுடன் ஏற்க வேண்டுமா?

படைப்பின் வரலாறு:
வேதாகமமே உலகத்தையும் மனிதரையும் தேவன் எப்படி படைத்தார் என்பதைச் சொல்லும் உண்மையான மற்றும் நம்பத்தகுந்த ஒரே ஆதாரம் (ஆதியாகமம் 1). உலகின் பல கலாச்சாரங்களில் பல்வேறு படைப்பு கதைகள் உள்ளன; ஆனால் அவை அனைத்தும் முற்றிலும் ஒத்திசைவற்றவையும், தர்க்கங்களுக்கு பொருந்தாதவையும் ஆகும்.
அவை மனிதன் உருவாக்கிய கற்பனைக் கதைகள்; தெய்வீக வெளிப்பாடு அல்ல.

மிருகங்கள் மற்றும் பறவைகள்:
ஐந்தாம் மற்றும் ஆறாம் நாள்களில், தேவன் மிருகங்களையும், மீன்களையும், பறவைகளையும் படைத்தார் (ஆதியாகமம் 1:20–24).
தேவன் “உண்டாகக்கடவது” என்று கூறினார், அது உடனே உண்டாயிற்று. எந்த மூலப்பொருளும் தேவையில்லை;
தேவனின் வார்த்தையிலேயே உயிருடன் கூடிய எல்லா வகை இனங்களையும் உருவாக்கும் சக்தி இருந்தது. அனைத்து இனங்களும் ஒரே சமயத்தில் படைக்கப்பட்டன.

ஆதாமும் ஏவாளும்:  
தேவன் ஆதாமையும் ஏவாளையும் மிக விசேஷமான முறையில் படைத்தார். ஆதாமை மண் மூலம் தேவன் உருவாக்கினார். அவனுக்கு உயிரில்லாமல், ஒரு சிலை போல நிலத்தில் கிடந்தான். மீன்கள், மிருகங்கள், பறவைகள் படைக்கப்பட்ட அந்த நேரமே உயிருடனிருந்தன; ஆனால் மனிதனுக்கு உயிரில்லை. அப்போது, தேவன் ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்; மனுஷன் ஜீவத்துமாவானான் (ஆதியாகமம் 2:7). இதனால், மனிதனின் உயிர் மற்ற எல்லா பிராணிகளின் உயிரைப்போல் அல்ல; தேவனிடமிருந்து நேரடியாக வந்த தெய்வீக சுவாசம். பின்னர், ஆதாம் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது, தேவன் அவனது விலா எலும்பை எடுத்து ஏவாளை உருவாக்கினார் (ஆதியாகமம் 2:21–22).

படைப்பின் கிரீடம்; மனிதன்:
மனிதர்கள் தேவனின் படைப்பின் கிரீடம் ஆகும் (சங்கீதம் 8:5). முதலாவதாக, அவர்கள் நித்திய உயிர் பெற்றவர்கள். அவர்கள் விரும்பினால், தேவனோடு என்றென்றும் வாழத் தேர்ந்தெடுக்கலாம்; அல்லது, தேவனுடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நிராகரித்து என்றென்றும் அக்கினி கந்தகத்தில் வாழத் தேர்ந்தெடுக்கலாம்.

வாழ்க்கையை அல்லது என் ஜீவனை தேவனின் மாபெரும் பரிசு என உணர்ந்து கொண்டாடுகிறேனா?

Rev. Dr. J.N. Manokaran