தாழ்மை என்பது ஒரு அவமானமா

ஒரு பணக்கார தொழிலதிபர், அவர் தாராளமான பரோபகாரர், நோயினால் ஏற்பட்ட சிறிய பாதிப்பில் மரித்துப் போனார்.  உலகமே அவருக்கு அஞ்சலி செலுத்தியது, மற்றும் சமூக ஊடகங்கள் அவரின் புகைப்படங்கள், அவரைக் குறித்ததான வீடியோக்கள் மற்றும் அவரது உன்னதமான குணத்தால் நிரப்பப்பட்டன.  மற்றொரு தொழிலதிபர் அவருடைய மனத்தாழ்மையைக் குறித்து பாராட்டினார், அடுத்த தலைமுறையில் தொழில்முனைவோர் இந்த நபரின் முன்மாதிரியை இழக்க நேரிடுமே என்றார்கள்.  அவர் பணிவானவர் என்பது பொருத்தமற்றது மற்றும் அவமரியாதைக்குரியது என்று கூறி இந்தப் பதிவிற்கு விமர்சனங்களும் குவிந்தன. 

மானக்கேடு:  
மானம் மற்றும் அவமான கலாச்சாரங்களில், தாழ்மையுடன் இருப்பது வெட்கக்கேடானதாகி விட்டது.   பணிவு பலவீனமாக கருதப்படுகிறது.   இத்தகைய கலாச்சாரங்களில், பெருமை என்பது கூட ஒரு நல்லொழுக்கமாகக்  கருதப்படுகிறது.   ஆனால் தேவன் பெருமையுள்ளவர்களை எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறார் என்று வேதாகமம் போதிக்கிறது (யாக்கோபு 4:6).‌ ஆம், மனத்தாழ்மையைத் தேவன் பாராட்டுகிறார், வெகுமதி அளிக்கிறார். 

ஆண்டவர் ஒரு நல்மாதிரி:  
தேவ மகனின் பிறப்பு ஒரு எளிய மாட்டுத் தொழுவத்தில் நடந்தது, பேரரசரின் அரண்மனையில் அல்ல.   அவர் இஸ்ரவேல் தேசத்திற்கு வெளிப்படுத்தப்படுவதற்கு முன்பு ஒரு கடின உழைப்பாளியாக ஒரு தச்சராக வேலை செய்தார். எருசலேமுக்குள் நுழையும் வெற்றிகரமான நிகழ்வில், கழுதையின் மீதேறி வந்து தாழ்மையை வெளிப்படுத்தினார்; போரையும் வன்முறையையும் குறிக்கும் குதிரையின் மீது அல்ல. மேலும் கர்த்தர் சீஷர்களின் பாதங்களைக் கழுவினார், அது அடிமட்ட வேலைக்காரனின் பணியாக இருந்தது (யோவான் 13:1-5). சிலுவையில், அவர் அனைத்து பொருளையும் உடைமைகளையும் இழந்தார். “தேவனுக்குக் கிறிஸ்து பணிந்தார். ஆகையால் தேவன் அவரை மிக முக்கியமான இடத்துக்கு உயர்த்திவிட்டார். தேவன் அவரது பெயரை மற்ற எல்லா பெயர்களையும் விட உயர்வாக்கினார். அனைவரும் இயேசுவின் பெயருக்கு முன்பு தலைகுனிந்தே இருக்க வேண்டும் என்பதற்காகவே தேவன் இதனைச் செய்தார். பரலோகத்திலும், பூலோகத்திலும், பூமிக்குக் கீழுள்ள உலகத்திலும் உள்ளவர்கள் அவரைப் பணிவார்கள். இயேசு கிறிஸ்துவே நமது கர்த்தர்” என்று அனைவரும் அறிக்கை செய்வர். அவர்கள் இதனைச் சொல்லும்போது பிதாவாகிய தேவனுக்கு மகிமை சேரும்” (பிலிப்பியர் 2:9-11).

இரட்சிப்பு: 
தாழ்மையுள்ளவர்களை தேவன் இரட்சிப்பால் அலங்கரிக்கிறார் என்று சங்கீதக்காரன் பாடுகிறான் (சங்கீதம் 149:4). ஒரு பெருமையுள்ள மனிதன் மனந்திரும்பி தன் பாவத்தை ஒப்புக்கொள்ள முடியாது. அவன் தனது பாவத்தை மறைப்பார் அல்லது சாக்குப்போக்கு சொல்லுவார் அல்லது நியாயப்படுத்துவார்.  இருப்பினும், தாழ்மையானவர் தன்னை ஒரு பாவி என்று தாழ்மையுடன் ஒப்புக்கொள்வார்.  நிச்சயமாக, அத்தகைய பாவிகள் தேவனின் சமூகத்தில் நீதிமான்களாகத் திரும்புகிறார்கள்.

கர்த்தர் விரும்புவது:  
மனிதர்களிடம் தேவனுக்கு முக்கியமான தேவைகளில் ஒன்று மனத்தாழ்மை (மீகா 6:8) என்பதை நாம் மறக்காதிருப்போம்.

உறவுகள்:  
 விசுவாசிகள் ஒருவரையொருவர் மனத்தாழ்மையுடன் நேசிக்கும்படி பவுல் அறிவுறுத்துகிறார் (பிலிப்பியர் 2:3-4).

மோசே தாழ்மையுடன் இருந்தார்: 
மோசே பூமியிலுள்ள எல்லா மனிதர்களிலும் மிகவும் தாழ்மையான நபர் (எண்ணாகமம் 12:3). அதாவது அவர் சாந்தமாகவும், கனிவாகவும், அமைதலுள்ளவராகவும் இருந்தார்.   ஆச்சரியப்படுவதற்கில்லை, அவர் மனித வரலாற்றில் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். 

தாழ்மை என்பது தேவனை மகிமைப்படுத்தும் மனநிலை என்பதை நான் உணர்கிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran