ஒரு சிறிய வாலிபக் குழு வேதாகம பயிற்சி வகுப்பில் இணைந்து யாக்கோபு புத்தகத்தை படித்தது. அவர்கள் அதை முடித்த பிறகு, “நான் என்னுடைய வகுப்பில் மிக முட்டாளாக இருந்தேன். என் பெற்றோர்களும் ஆசிரியர்களும் என்னைப் பற்றி நம்பிக்கை இழந்துவிட்டனர். ஆனால் இந்த வேதாகமப் பயிற்சியில் கலந்து கொண்டபோது, தேவனை நம்பும் நம்பிக்கையும், தேவனிடம் ஞானத்தை கேட்கும் தைரியமும் (யாக்கோபு 1:5) எனக்கு வந்தது. இப்போது என் ஆசிரியர்கள்: ‘நீ இவ்வளவு ஞானி எப்படி ஆனாய்?’ என்று ஆச்சரியப்படுகிறார்கள். என் பெற்றோரும் அப்படித்தான்” என்று ஒரு வாலிபன் சாட்சியமளித்தான். ஆம், தேவனுடைய வார்த்தை ஒரு எளியவனையும் அல்லது பேதையையும் ஞானியாக மாற்றக்கூடியதாய் உள்ளது
(சங்கீதம் 119:130-131).
வாக்குத்தத்தம்:
தேவன் பேதைகளான மக்களை அல்லது எளியவர்களை மறப்பதில்லை. தெய்வீக ஞானமும், இரட்சிப்பும், தேவனுடைய சித்தத்தைக் காணும் அறிவும் மனித புத்திக்கான விளைவு அல்ல, ஆனால் தேவனுடைய அருமையான வரங்கள். விசுவாசத்துடன் கேட்பவர்களுக்கு, பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் தேவன் அளிக்கிறார். உலகம் ஒருவனை ‘பேதை’ என்றும் ‘முட்டாள்’ என்றும் அழைக்கக்கூடும். ஆனால், அவர்களுக்கு வானத்திலிருந்து தம்முடைய ஞானத்தைத் தரும்போது தேவன் மகிழ்கிறார்.
ஆசீர்வாதம்:
தேவன் எளியவர்களை உதாசீனப்படுத்துவது இல்லை. எளியவர்கள் உட்பட, அனைத்து மக்களும் தேவ வார்த்தையைப் புரிந்து கொண்டு இரட்சிப்பைப் பெற முடியும்.
தீட்சை எடுத்தல், உடலை வேதனைப்படுத்தி பக்தியை வெளிப்படுத்தல் அல்லது புனித யாத்திரை செல்லல் ஆகியவை தேவையில்லை. ஒரு சிறு விசுவாசத்துடன், எளிய ஜெபம் செய்யும் எளியவர்கள், மகத்தான ஞானத்தைப் பெறுகிறார்கள். உலகத்தினுடைய ஞானிகளை வெட்கப்படுத்தும் விதமாக, தேவன் இந்த உலகத்தில் எளியவர்களையே தேர்ந்தெடுத்துள்ளார் என்று பவுலும் அறிவிக்கிறார் (1 கொரிந்தியர் 1:27-28).
வாய்ப்பு:
தம்முடைய வார்த்தையின் மூலம் எல்லாரும் ஞானமடைய தேவன் வாய்ப்பை அளிக்கிறார். வேதாகமம் மனித இனமனைத்திற்கும் உரியது.
அதனால் தான், உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் அதை மொழிபெயர்க்கும் பணி தேவனுடைய திருச்சபையால் செய்யப்பட்டுள்ளது. எல்லா மனிதர்களும் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, கவனித்து, வாசித்து, தியானித்து, தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி ஞானம் பெறும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கவேண்டும் என்பதே அதன் நோக்கம்.
பொறுப்பு:
தம்மிடம் சராசரி அறிவு, குறைந்த புத்திசாலித்தனம் அல்லது நுண்ணறிவு திறன் என காரணங்கள் சொல்லி எவரும் தங்களைச் சிறப்பாகக் காக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் தேவனுடைய வார்த்தையையும், சத்தியத்தையும் தேட வேண்டிய பொறுப்பு இருக்கிறது. வேதாகமத்தை ஒரு சிறு குழந்தைகூட புரிந்து கொள்ள முடியும்; நற்செய்தியை வாலிபர்களும் புரிந்து கொள்ள முடியும். ஆகையால், சத்தியத்தை அறியாதது ஒரு காரணமல்ல (ரோமர் 1:20). பெரெயா பட்டணத்தார் நல்ல உயர்ந்த பண்புடையவர்களாகக் கருதப்பட்டனர், ஏனெனில் அவர்கள் வேதாகமத்தை ஆர்வத்துடன் வாசித்து, தியானித்தனர்
(அப்போஸ்தலர் 17:11).
தினமும் வேதாகமத்தை தியானிப்பதன் மூலம் எனக்கு ஞானம் கிடைப்பதை உணர்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran