உலகின் முதல் நிலை கோல்ஃப் வீரர் ஸ்காட்டி ஷெஃப்ளர் என்பவர்; “வெற்றி அல்லது சாம்பியன் ஆகுவது என் இதயத்தின் ஆழ்ந்த ஆசைகளை பூர்த்தி செய்யாது” என்றார். கையில் ஒரு கோப்பையுடன் கிறிஸ்தவ கோல்ஃப் வீரர், செய்தியாளர்களிடம் கூறினார், "நான் இதற்கு நன்றியுள்ளவனா? நான் அதை ரசிக்கிறேனா? ஐயோ, ஆமாம், இது ஒரு அருமையான உணர்வு. வீட்டிற்குச் சென்று இந்த சாம்பியன்ஷிப்பை எனக்கு உதவிய மக்களுடன் கொண்டாட நான் காத்திருக்க முடியாது. ஆனால் நாளின் இறுதியில், அது என் இதயத்தின் ஆழமான ஆசைகளை நிறைவேற்றாது. இது சில நிமிடங்கள், சில நாட்கள் மகிழ்ச்சியளிக்கலாம். நான் கோல்ஃப் விளையாடுவது தேவனை மகிமைப்படுத்துவதற்காகத்தான். என் அடையாளம் கோல்ஃப்பிலும் கோப்பைகளிலும் இல்லை; என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில்தான் உள்ளது.”
(பிரீமியர் கிறிஸ்தியன் நியூஸ், ஜூலை 21, 2025)
மாயையும் வீணும்:
“மாயை” என்றால் நீராவி அல்லது மூச்சு என்று பொருள்; அதேசமயம் அதற்கு “அர்த்தமற்றது, காலியானது, பயனற்றது, நோக்கமற்றது, ஒன்றுமில்லாதது” என்ற அர்த்தங்களும் உள்ளன. மேலும் “மாயை” என்பது தாற்காலிகம் அல்லது நிலையற்றது என்பதையும் குறிக்கிறது. அதன் உதாரணங்களாக உடல் அழகு, செல்வம், புகழ், இத்துடன் வாழ்க்கை கூட நித்தியத்துடன் ஒப்பிடும்போது தற்காலிகமானவையாகும். அப்போஸ்தலனாகிய பவுல் இப்படி எழுதுகிறார்; “அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது (ரோமர் 8 : 21)”. ஆதாமும் ஏவாளும் வீழ்ந்ததினால், தேவனின் சாபத்தினால், அனைத்து படைப்பும் “மாயையைக்கு உட்படுத்தப்பட்டது.” ஆனால் இறுதியில் அந்த படைப்பும் அந்த சாபத்திலிருந்து விடுதலை பெறும். மனிதர்களில் “மாயை” பெருமை, பொறாமை, சண்டை, அகந்தை, கொடூரம், பழிவாங்கும் மனம் ஆகிய வடிவங்களில் வெளிப்படுகிறது. தன்னையே மறந்து, தன் சுயத்தை மரணப்படுத்துவோர்களே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாகி, வாழ்க்கையில் உண்மையான அர்த்தத்தையும் நோக்கத்தையும் அனுபவிக்க முடியும்.
சத்தியமும் நித்தியமும்:
ஒருவர் முழு உலகத்தையும் அடைந்தாலும், தன் ஆத்துமாவை இழந்துவிட்டால் அதனால் எந்த லாபமும் இல்லை (மத்தேயு 16:26). நித்தியமானதைத் தேடுவதற்காக தேவன் மனிதர்களின் இருதயங்களில் நித்தியத்தை வைத்துள்ளார் (பிரசங்கி 3:11). ஆனால் பெரும்பாலானோர் இந்நேரத்தின் அழுத்தங்களிலும் இன்பங்களிலும் சிக்கிக் கொண்டு, தங்களின் ஆசைகளை உடனடியாக நிறைவேற்ற நினைக்கிறார்கள். மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றிய அறிவோ, ஆசையோ, ஏக்கமோ அவர்களுக்கில்லை. கர்த்தரின் சீஷர்கள், பவுல் போன்றவர்கள், இந்த சரீரத்தில் இருந்து பிரிந்திருந்து, கர்த்தருடனே இருப்பதையே விரும்புகிறார்கள் (2 கொரிந்தியர் 5:8).
நான் நித்திய வெகுமதிகளையும், கர்த்தரிடமிருந்து வாடாத ஜீவ கிரீடத்தையும் பெற ஏங்குகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran