ஒரு கிராமத்தில் ஊழியம் செய்யும் போதகர், காய்கறிகள் பயிரிட்டார், பால் கொடுக்கும் பசுவை வளர்த்தார், இப்படியாக தன் வாழ்வாதாரத்தைத் தானே பார்த்துக் கொண்டார். ஒரு நாள் ஒரு குடும்பம் பிசாசு பிடித்த ஒரு இளைஞனை அழைத்து வந்தது. அப்போது போதகர் அவனுக்காக ஜெபித்தார், அந்த மனிதர் அற்புதமாக குணமடைந்தார். அந்தக் குடும்பம் பின்னர் தேவ பிள்ளைகளாக மாறியது. ஆனால், மறுநாள் மாடு இறந்து கிடந்தது. அதன் இறப்புக்கு எந்த காரணமும் இல்லை. அப்போது தான் போதகர் உணர்ந்தார்; மனிதனை விட்டு வெளியேறிய அசுத்த ஆவி பசுவில் நுழைந்து அதைக் கொன்றது. ஆனால் இது போதகரின் குடும்பத்திற்கு ஒரு பெரிய இழப்பாக இருந்தது, இருப்பினும் சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்தும் இருளிலிருந்தும் தேவ ராஜ்யத்திற்கு மக்களை வழிநடத்தும் போது தான் துன்பப்படுவதற்கு அனுமதித்ததற்காக தேவனைப் போற்றிப்புகழ்ந்து மகிழ்ந்தார்.
இரண்டாயிரம் பன்றிகள்:
அசுத்த ஆவிகளின் படையால் பிடிக்கப்பட்ட மனிதன் விடுவிக்கப்பட்டான். இருப்பினும், அசுத்த ஆவிகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் பன்றிகளுக்குள் செல்ல அனுமதி கேட்டன. “அவ்வாறே போகும்படி இயேசு அனுமதி அளித்தார். அசுத்த ஆவிகள் அந்த மனிதனை விட்டு, விட்டு பன்றிகளுக்குள் புகுந்து கொண்டன. அப்பன்றிக் கூட்டம் மேட்டிலிருந்து ஓடி கடலுக்குள் பாய்ந்து கடலில் மூழ்கி இறந்தன. அவை ஏறக்குறைய 2,000 எண்ணிக்கை உடையதாக இருக்கும்” (மாற்கு 5:13).
அசுத்த ஆவிகள்:
அசுத்த ஆவிகள் அல்லது பேய்கள் லூசிபரின் கூட்டாளிகள், அவனோடு வீழ்ந்தவர்கள். அவைகள் பொல்லாதவைகள், கலகம் செய்பவைகள், அவைகளை மீட்க முடியாது. அவர்களுடைய எஜமானான சாத்தானைப் போலவே, அவைகளும் மனிதர்களைக் கொல்லவும், அழிக்கவும், கொள்ளையிடவுமே விரும்புகிறது.
அனுமதி எதற்கு?
ஆனாலும் அசுத்த ஆவிகள் தங்கள் விருப்பப்படி செயல்பட முடியாது. ஆண்டவர் அசுத்த ஆவிகள் பன்றிகளை துன்புறுத்த அனுமதித்தார், ஏனெனில், முதலில், இந்த அசுத்த ஆவிகள் அமைதியற்று, கோபத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் (மத்தேயு 12:43-44). இரண்டாவதாக, விலங்குகளை விட மனிதர்கள் அதிக மதிப்புமிக்கவர்கள், சிறப்பு வாய்ந்தவர்கள், தனித்துவமானவர்கள் (மத்தேயு 6:26; 12:12) ஆவார்கள்.
மனித ஆத்துமாவின் மதிப்பு:
சிலருக்கு விலங்குகள், பறவைகள், ஊர்வன, மீன்கள், புழுக்கள் மற்றும் பாக்டீரியாக்களின் உயிர்கள் கூட சமமான மதிப்புடையவை. ஆனால் இது ஒரு கட்டுக்கதை. தேவன் ஆதாமை தனது சாயலில் படைத்து, அவனது நாசியில் ஊதினார், அவன் உயிருள்ள ஆத்துமாவாக ஆனான் (ஆதியாகமம் 2:7). மிருகங்கள், பறவைகள், ஊர்வன மற்றும் மீன் ஆகியவை தேவ கட்டளையாலும் அல்லது வார்த்தையாலும் உருவாக்கப்பட்டன. மனிதர்களில் மட்டுமே தேவன் நித்திய ஆவியை வைக்கிறார், எனவே மனிதர்கள் படைப்பின் கிரீடம் என்பதை மறக்க கூடாது. “மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்! அவர்களை ஏறக்குறைய தேவர்களைப் போலவே உண்டாக்கினீர். மனிதரை மகிமையாலும், மேன்மையாலும் முடிசூட்டினீர்” (சங்கீதம் 8:5).
மனிதனாகிய நான் தேவ படைப்பின் கிரீடம் என்பதை உணர்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran