கற்பனையான வலிமையில் வாழுதல்

ஒரு முதியவர் தனது பயணப்பெட்டியை ரயிலின் மேல் தட்டில் வைக்க முயன்றார். அதை தூக்க முயன்றபோது, அவருக்கு திடீரென தட்டு வழிவு (disc slip) ஏற்பட்டது; கடும் வலியால் அவர் தரையில் விழுந்தார். அவர் மனக்கசப்புடன் கூறினார்: “நான் இதுபோல நூற்றுக்கணக்கான முறை சுமைகள் தூக்கியிருக்கிறேன்; ஆனால் இதுபோல் ஒருபோதும் நடந்ததில்லை.” அதற்கு அருகில் இருந்த ஒரு இளைஞன் சொன்னான்; “அங்கிள், உங்களுக்கு வயதாகி விட்டது என்பதை உணர வேண்டும்”. எப்பிராயீமும் தன்னுடைய தலையில் இடையிடையே நரை முடிகள் வந்துவிட்டதை அறியாமல் இருந்தான் (ஓசியா 7:8-10).

திருப்பப்படாத அடை:
ஓசியா, எப்பிராயீமைக் ‘திருப்பப்படாத அடை’ என்று ஒப்பிட்டார். ஒரு பக்கத்தில் நன்றாக வெந்திருந்தாலும், மறுபக்கத்தில் வேகவில்லை. இப்படிப்பட்ட அரைவேக்காடு உணவுகள் எப்போதும் ஆபத்தானவை, வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்றவற்றை ஏற்படுத்தும். அதேபோல, அரசியல், பொருளாதார ரீதிகளில் எப்பிராயீம் வலிமையாகவும், முதிர்ச்சியாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால் அந்த வெற்றியின் மயக்கத்தில், அவர்கள் தங்கள் வேர் என்னும் இரட்சணியத்தின் பாறையை புறக்கணித்தனர். ஆகவே, ஆவிக்குரியவிஷயங்களில் அவர்கள் வளர்ச்சியற்றவர்களாக, பலவீனமாக, உற்சாகமின்றி இருந்தார்கள். இன்றைய பல ‘செல்வப்பிரசங்கிகள்’ மற்றும் செல்வத்தை விரும்புவோர் உலகப் பொருளாதாரத்தில் முன்னேறினாலும், ஆவிக்குரிய வாழ்க்கையில் தேய்ந்து, சிதைந்து போகிறார்கள்.

வலிமை விழுங்கப்பட்டது:
நம்பிக்கையற்ற அந்நியர்கள், எப்பிராயீமின் வலிமையையும் உறுதியையும் விழுங்கி விட்டார்கள். வேறு மதத்தாருடன் கலாச்சார சமரசம் செய்ததும், பொருளாதார செழிப்பில் ஆழ்ந்ததும், அவர்கள் மனங்களில் விக்கிரகங்களை உருவாக்க வைத்தது. தேவனைப் பற்றிய அறிவின் குறைவு, அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமானது. அவர்கள் தேவனுடைய வார்த்தையை அலட்சியம் செய்தும், நிராகரித்தும் விட்டார்கள். அதனால், தேவன் அவர்களின் பிள்ளைகளை மறந்து, அவர்களைத் தம்முடைய ஆசாரியர்களாக ஏற்காமல் நிராகரிப்பார் (ஓசியா 4:6).

அறியவில்லை:
முதியவரைப் போல, எப்பிராயீமும் தன்னுடைய வலிமை போய் விட்டதை உணரவில்லை. வலிமை கவரப்பட்டு, முதுமை ஏறி, பலகீனமடைந்து, தங்கள் அகங்காரம் தமக்கே விரோதமாகச் சாட்சியமாயிருந்தது; ஆனாலும் அவர்கள் அதைக் கண்டு அறியவில்லை. அவர்கள் நடப்பதைக் கவனித்து அறியும் ஆவிக்குரிய உணர்வை இழந்திருந்தனர். சிம்சோனும் கூட, கர்த்தர் தம்மைவிட்டு நீங்கிச் சென்றதை அறியாமல், தன் வலிமை போய்விட்டதை உணராமல் இருந்தான் அல்லவா (நியாயாதிபதிகள் 16:20).

திரும்பவில்லை:
இத்தனை எச்சரிக்கைகளும் உண்மைகளும் இருந்தபோதிலும், எப்பிராயீம் கர்த்தரிடத்தில் திரும்பவில்லை. அகங்காரம் அவர்களைத் தாழ்மைப்படாமல் தடுத்தது; செழிப்பு, அவர்களின் ஆவிக்குரிய குறைபாட்டை மறைத்தது; கடந்த காலத்தில் வாழ்ந்ததால், தங்கள் தற்போதைய பலகீனத்தையும் அபாயத்தையும் உணரவில்லை. சுறுசுறுப்பாக இல்லாமல், மந்தமாகவும் சோர்வுடனும் இருப்பது ஆபத்தானது.

நான் மந்தமாக இருக்கிறேனா அல்லது கர்த்தருக்காக தீவிரமான உற்சாகத்தோடு இருக்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran