உணவுக்கு விசுவாசமா

ஒரு மாபெரும் காவியம் ஒரு வீரனைப் புகழ்கிறது. அவன் எவ்வளவு வலிமையானவனாக இருந்தான் என்றால், உடல் முழுவதும் அம்புகள் பாய்ந்தாலும் மூன்று நாட்கள் உயிருடன் இருந்தான். ஆனால் அவன் ஒரு துன்மார்க்க அரசருக்கு சேவை செய்தான். அந்த அரசன் பொதுமக்கள் முன் ஒரு பெண்ணின் மரியாதையைச் சிதைத்தான். அது தவறு, குற்றம், அநீதியான செயல் என்பதை அந்த வீரன் அறிவான். இருந்தும், உதவிக்கு எழுந்த அழைப்பை அவன் கேளாமல் இருந்தான். அதற்கு என்ன காரணமென்றால்;  “நான் என் அரசனின் வீட்டு உணவை உண்டேன்; அவன் வீட்டின் உப்பை உண்டேன். ஆகையால் அவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.” அதே நேரத்தில், இன்னொருவர் தைரியமாக தன் குரலை உயர்த்தி, ஒடுக்கப்பட்ட அந்தப் பெண்ணின் மரியாதையைப் பாதுகாத்தான். இதற்கு மாறாக, கிறிஸ்தவர்கள் சத்தியத்திற்கு சாட்சிகளாக இருந்து, தேவ ராஜ்யத்தின் நீதியின் மதிப்புகளை நிலைநாட்ட அழைக்கப்பட்டிருக்கிறோம் (அப்போஸ்தலர் 1:8; மத்தேயு 6:33).

போலி விசுவாசம் (Fake Loyalty):
பல பண்பாடுகள், துன்மார்க்கம், அநீதி, தீமை, சுரண்டல், ஒடுக்குமுறை செய்வோருக்குக் கூட கண்மூடித்தனமான விசுவாசத்தை ஊக்குவிக்கின்றன. வரலாற்றில், பல துன்மார்க்க அரசர்களும் தலைவர்களும் மக்களிடமிருந்து கடுமையான விசுவாசத்தைப் பெற்றிருந்தனர். அந்த மக்கள், அவர்களின் தீமைகளைப் புறக்கணித்து, கண் மூடித்தனமாக பின்தொடர்ந்தார்கள். இத்தகைய விவேகமற்ற சீடர்கள், தங்கள் தலைவர்களை இன்னும் கொடூரமாக நடக்க ஊக்குவிக்கிறார்கள்.

நீதி (Righteousness):
இத்தகைய குருட்டு சீடர்களுக்கு நீதியென்பது என்னவென்பதே தெரியாது. துரதிருஷ்டவசமாக, அவர்களுடைய தலைவரின் வார்த்தையே சட்டமாகிறது; அவர் செய்வதெல்லாம் சரி எனக் கருதப்படுகிறது. பெரும்பாலும், அந்தத் தலைவரின் நெறிமுறைகள் அர்த்தமற்றதும் துன்மார்க்கமுமானவையாக இருந்தாலும், அவர்களைத் தெய்வமாகக் கருதுகிறார்கள். ஆனால், நீதி என்றால் எப்போதும், எல்லா சூழ்நிலைகளிலும், தேவனுடைய பார்வையில் சரியானதைச் செய்வதுதான்.

சத்தியம் (Truth):
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார்; “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாக இருக்கிறேன்”(யோவான் 14:6). சத்தியத்தை அறிந்தவர்கள், தேவனை மதிப்பிழக்கச் செய்யும் பொய்கள், முரண்பட்ட மதிப்புகள், மரபுகள், போக்குகள், சடங்குகள், பழக்கங்கள் ஆகிய எல்லா அடிமைகளிலிருந்தும் விடுதலையடைகிறார்கள் (யோவான் 8:32). அவர்கள் சத்தியத்திற்கு முன் மட்டும் தலைவணங்குகிறார்கள்.

ஜீவனை ஆபத்திற்குள்ளாக்குதல் (Risking Life):
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, “சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றி வா” என்று தம்முடைய சீஷர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அதன் பொருள்; ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல், மரணத்திற்கே தயாராக விசுவாசத்தின் பாதையில் நடப்பது. ஷாத்ரக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்று இளைஞர்கள், நேபுகாத்நேசாரின் ஆணைக்கு கீழ்ப்படிய வேண்டியதை கட்டாயம் என எண்ணவில்லை (தானியேல் 3:16–28). “உனக்கு சாப்பாடு கொடுத்தவனுக்கு எப்படித் துரோகம் செய்வாய்? உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா? உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டும் அல்லவா? எப்படித் துரோகியாக இருப்பாய்?” என அவர்களைச் சுற்றியிருந்த சிலர் கேட்டிருக்கலாம்.  

நான் தேவனுக்கும், அவருடைய சத்தியத்துக்கும், நீதிக்கும் உண்மையான விசுவாசமும் நம்பிக்கையும் கொண்ட நபராக இருக்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran