தவறவிட்ட வாக்குறுதிகள்

தேவன், இஸ்ரவேல் ஜனங்களை வாக்‌குத்தத்த தேசத்திற்குக் கொண்டு செல்ல யோசுவாவை தலைவராக நியமித்தார். எனினும், யோசுவாவிற்கு எல்லா மக்களிடமிருந்தும் உற்சாகமான ஆதரவு கிடைக்காமல் இருந்திருக்கலாம். அதனால் விரக்தியடைந்த அவர், அவர்களை கண்டித்தார்:
“இஸ்ரவேல் புத்திரரே, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு அளித்த தேசத்தை அடையப் போவதற்கு நீங்கள் இன்னும் எத்தனை நாள்வரை தள்ளிப் போடுவீர்கள்?” என்று யோசுவா மக்களிடம் கூறினார் (யோசுவா 18:3). இன்றும் கிறிஸ்தவர்கள் உலகமெங்கும் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும் என்ற மாபெரும் ஆணையை (மத்தேயு 28:18–20) நிறைவேற்ற முடியாமல் அல்லது தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் 

1) மறந்து போதல்:
இஸ்ரவேல் ஜனங்கள், வாக்‌குத்தத்த தேசத்தையும் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றும் தேவனையும் மறந்துபோனார்கள். அவர்கள் நிகழ்கால வாழ்க்கையில் முழுமையாக மூழ்கி, எதிர்காலத்தை மறந்தார்கள். அன்றாட வாழ்க்கையின் பரபரப்பான ஓட்டத்தில், மகிமையான எதிர்காலம், நித்தியம், தேவனுடைய வாக்குத்தத்தங்கள், முன்னுரிமைகள் மற்றும் தேவனுடைய ராஜ்யம் அனைத்தும் மறக்கப்படுகின்றன.

2) அறியாமை:
வனாந்தரத்தில் பிறந்த புதிய தலைமுறை, தங்கள் பிதாக்கள் அனுபவித்தவற்றை அறிந்திருக்கவில்லை; அதாவது எகிப்திய அடிமைத்தனம், தேவனுடைய மகிமையான வல்லமையையும் விடுதலையையும், வாக்குத்தத்தங்களையும், உடன்படிக்கையையும், பிரமாணத்தையும்,  அதிகாரமுள்ள தேவன் அவர்களுக்கு அளித்த தேசம் குறித்ததான வாக்குத்தத்தம் பற்றிய அறிவும் இல்லை.

3) அலட்சியம்:
இஸ்ரவேல் மக்கள் அலட்சியமாக இருந்தனர். அதாவது, அவர்கள் வெறும் வாழ்வாதாரத்திற்காக மட்டுமே வாழ்ந்து, தங்கள் வாழ்க்கையில் தேவன் அளித்த அழைப்பின் நோக்கத்தையும் அர்த்தத்தையும் புரிந்துகொள்ளவில்லை. அதைப் போலவே, பல கிறிஸ்தவர்கள் இன்றைய உலகில் பொருளாதார செழிப்பு மற்றும் நுகர்வுவாதத்தில் மூழ்கி, தங்கள் வாழ்க்கையில் தேவனுடைய சித்தத்தை அறியவோ, புரிந்துகொள்ளவோ முயலவில்லை.

4) திறமையின்மை:
ஆபிரகாம், ஈசாக், யாக்கோபின் சந்ததியினர், இரும்பு ரதங்களைக் கொண்டிருந்த கானானியரை விரட்டியடிக்கத் தகுதியும் தன்னம்பிக்கையும் தமக்கில்லை என்று நினைத்தனர் (யோசுவா 17:16). புதிய சூழலுக்கு ஏற்ப புதிய திறமைகளை கற்றுக்கொண்டு சவால்களை எதிர்கொள்ளாமல், அவர்கள் பிறரின் உதவியை நாட விரும்பினர். ஆனால், யோசுவா அவர்களிடம் மென்மையாக நடந்துக் கொள்ளாமல், “நீங்கள் போய் வெற்றிப் பெற்று தேசத்தை அடையுங்கள்” என்று கட்டளையிட்டார்.

5) சோம்பேறித்தனம்:
“உழைப்பில்லாமல் ஊதியமில்லை” என்பது ஒரு பொதுவான பழமொழி. விழிப்புணர்வும் வேகமும் கொண்டவர்கள், கடினமாக உழைக்கத் தயாராக இருப்பவர்கள், நிறைவேற்றும் மனப்பான்மையுடையவர்கள் மட்டுமே தேவனுடைய வாக்குத்தத்தங்களை அடைய முடியும்.

6) காரணங்கள் கூறுதல்:
தமக்குள் இருக்கும் திறனால் செய்யக்கூடியதைச் செய்யாமல் இருப்பதற்கு மனிதர்கள் எப்போதும் ஏதோ ஒரு காரணத்தை அல்லது சாக்குபோக்கு கூறுவார்கள்.

நான் தேவனுடைய அழைப்பையும் வாக்குத்தத்தங்களையும் அலட்சியப்படுத்தி மறந்துவிட்ட ஒரு நபரா?
 

Rev. Dr. J.N. Manokaran