ஒருநாள் ஒரு மனிதன் இவ்வாறாக ஜெபிக்கத் தொடங்கினான்; “பரிசுத்த ஆவியானவரே, குட் மார்னிங் (காலை வணக்கம்). என்னுடைய நண்பராகிய இந்த நபர் மனந்திரும்பும் வரை அவரை விடாமல் துரத்திப் பிடியும்”. உண்மையைச் சொல்லப்போனால், இது ஒரு தவறான ஜெபமாகும். இது பரிசுத்த ஆவியின் இயல்பைத் தவறாகப் புரிந்துகொள்வது போலாகும்; அதுமட்டுமல்ல உலகத்தில் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகள் பற்றியும் தவறாக புரிந்து கொள்வதாகும். “அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.” (யோவான் 16:8) என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கற்பித்துள்ளார்.
குற்றம் சாட்டுதல்:
ஆவியானவரின் ஊழியம் கண்டித்து உணர்த்துவது மட்டுமே; துரத்தி வேட்டையாடுவதோ அல்லது, அச்சுறுத்தலோ அல்ல. "தண்டனைப் பெறச் செய்" என்பது சட்டவியல் சொல்லாகும். இது ஒரு தவறை வெளிப்படுத்துவது, அதை உணரச் செய்வது மற்றும் உறுதியாக வாதிப்பது என்பதைக் குறிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் ஒருவரைக் குற்றம்சாட்டி பின்தொடர்வதோ, நெருக்கடிக்கு உட்படுத்துவதோ, பயத்தை உண்டாக்குவதோ இல்லை. உண்மையான குற்ற உணர்வு ஒரு தீர்மானம் எடுக்க உதவுகிறது. பாவம் செய்யும் ஒருவர் மனந்திரும்பி சரியான முடிவெடுக்க வாய்ப்பு கிடைக்கிறது.
பாவம்:
மனித மனசாட்சியில், சிறிது ஒளிரும் ஒளி, குற்ற உணர்வின் சுவடு, சரியானது என்ன என்ற உணர்வின் சுவடு, நித்திய உணர்வின் சுவடு இருக்கும். ஆனால், தேவ ஆவியானவர் ஒருவரை கண்டித்து உணர்த்தாது விட்டால் பயனில்லாமல் போய் விடும். கண்டிப்புக்கு முந்தைய நிலையில் ஒருவர் கூறுவது: “நான் பரிபூரணமானவன் அல்ல, எனவே தவறுகள் செய்யும் சாத்தியம் உண்டு.” ஆனால், உணர்த்தப்படும் ஒருவர் கூறுவது: “நான் ஒரு பாவி; கடவுளுக்கு விரோதமானவன்; எனக்கு தேவனுடைய அன்பும் மன்னிப்பும் தேவை.” ஆக, பாவத்தின் இருதயத்தில் உள்ளது நம்பிக்கையின்மை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நிராகரிப்பவர்கள் ஏற்கனவே குற்றவாளிகள் ஆகிறார்கள்.
நீதி, நியாயம்:
பிதாவாகிய தேவன் தம் குமாரனை பாவத்திற்கு நிவாரண பலியாக இந்த உலகத்தில் அனுப்பினார். அந்த செயலானது நிறைவுற்ற பிறகு, அவர் பரமேறப்பட்டு தேவனுடைய வலது பக்கத்தில் அமர்ந்தார் (எபிரெயர் 12:2). தேவன் பரிசுத்தரும் நீதியுள்ளவரும் ஆவார். தேவன் மன்னிக்க இயல்வது, தம் குமாரனுடைய மரணம், அடக்கம், மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக மட்டுமே. பரிசுத்த ஆவி ஒருவருக்கு இவ்வாறாக போதிக்கின்றார்; மனிதருடைய நீதியெல்லாம் கடைசியில் எளிதில் கழிக்கப்படும் அழுக்கான கந்தையைப் போன்றதே; அதனால் தேவனிடமிருந்து நீதியின் ஆடையை நாம் நிச்சயம் பெற வேண்டியதாயுள்ளது (ஏசாயா 64:6; 61:10–11).
நியாயத்தீர்ப்பு:
சட்டரீதியாக, குற்றமறிதலுக்கு (conviction) பின்பு தீர்ப்பு (judgment) வரும். ஆனால், பரிசுத்த ஆவியின் ஊழியத்தில் ஒரு மத்திய நிலை உள்ளது; ஆம் அதுதான் மன்னிப்பு மற்றும் நீதி. இந்த தேவனுடைய பரிசை ஒருவர் நிராகரித்தால், அப்போது தான் தீர்ப்பு வரும். இது ஒரு நித்தியத் தீர்ப்பாகும். ஜீவனுள்ள ஆண்டவராகிய இயேசுவை நிராகரிக்கிறவர்கள், சாத்தானுடனும் அவன் தூதர்களுடனும் சேர்ந்து, இரண்டாவது மரணமாகிய நித்திய அக்கினியை அனுபவிக்க நேரிடும் (வெளிப்படுத்துதல் 21:8).
பரிசுத்த ஆவியானவரின் ஆள்தன்மையையும் ஊழியத்தையும் நான் புரிந்துகொள்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran