துறவிகளின் அப்பம்

அபேயில் வாழும் டிராப்பிஸ்ட் துறவிகளின் துறவு வாழ்க்கையில் கைவேலை அல்லது உடல் உழைப்பு (manual work) ஒரு அங்கமாக உள்ளது. தங்களுடைய தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்ய, அவர்கள் தயாரிப்புகளை உருவாக்கி விற்பனை செய்கிறார்கள். இதனால் அவர்கள் ஜெபம், தியானம் மற்றும் ஊழியத்தில் முழுமையாக கவனம் செலுத்த முடிகிறது. சில நகரங்களில், அவர்கள் பேக்கரி (அப்பச்சாலை) நடத்தி, தங்களின் பணியை ஆதரிப்பதோடு, சமூகத்திற்கும் சேவை செய்கிறார்கள். இவ்வாறு, அவர்களின் வாழ்க்கை பலருக்குப் பேராசீர்வாதமாக விளங்குகிறது. ஒரு மதத்தில், அதன் மதத் தலைவர்கள் பிச்சை எடுத்து வாழ வேண்டும் என்று போதிக்கப்படுகிறது. அங்கே உழைப்பிற்கும் உழைப்பாளிக்கும் மரியாதை இல்லை. அதனால் தொழில்நுட்ப முன்னேற்றமும் இல்லை. ஆனால், அப்போஸ்தலனாகிய பவுல் தெளிவாக எச்சரிக்கிறார்;
“ஒரு மனிதன் வேலை செய்யாவிடில் அவன் உண்ணக்கூடாது” (2 தெசலோனிக்கேயர் 3:10).

வரலாற்றுப் பின்னணி:
பேதுருவும் யோவானும், “வெள்ளியும் பொன்னும் எங்களிடத்தில் இல்லை; ஆனால் இயேசு கிறிஸ்துவின் நாமம் எங்களிடம் உள்ளது” என்று கூறி,
ஊனமுற்ற மனிதனை நடக்கச் செய்தார்கள் (அப்போஸ்தலர் 3:6).
ஆனால், சபை அதிகாரமும் செல்வாக்கும் பெற்றபோது, சடங்குகள், பாரம்பரியங்கள், மற்றும் ஊழல் வளர்ந்தது. இதனால் மனம் நொந்த பக்தியுள்ள கிறிஸ்தவர்கள் நகரங்களை விட்டு விலகி, தனிமையான இடங்களில் மடங்களை (Monasteries) அமைத்தார்கள். அங்கே அவர்கள் ஜெபித்தார்கள், வேதவாக்கியங்களை நகலெடுத்தார்கள், தங்களிடம் வந்த குழந்தைகள் மற்றும் நோயாளிகளை கவனித்து சேவை செய்தார்கள்.

விவசாயம்:
துறவிகள், இயற்கை தேவனின் சிருஷ்டி என்றும், அது சிருஷ்டிகரின் சட்டங்களால் தாங்கப்படுகிறது என்றும் நம்பினார்கள். அதனால், இயற்கையை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி முன்னேற்றம் காண முடியும் என்று எண்ணினர். அவர்கள் கடுமையாக உழைத்தார்கள், புதுமைகள் செய்தார்கள், புதிய கருவிகளை உருவாக்கினார்கள்.
அணைகள் கட்டினார்கள், சதுப்பு நிலங்களை விவசாய நிலமாக மாற்றினார்கள், ஐரோப்பா முழுவதும் விவசாயத்தைப் பரப்பினார்கள். முதல் கனரக உழவு (Heavy Plough) அவர்களுடைய கண்டுபிடிப்பாகும்.

சுகாதாரச் சேவை:
நோயாளிகள், ஏழைகள், முதியவர்கள் ஆகியோருக்காக
அவர்கள் மருந்துகள், களிம்புகள் (ointment) மற்றும் மருத்துவப் பொருட்களை தயாரித்து சுகாதார சேவை செய்தார்கள்.

கண்டுபிடிப்பாளர்கள்:
சிஸ்டர்சியன் (Cistercians) என்ற ஒரு துறவுக் குழு; நீர்கடிகாரம், கண் கண்ணாடி, கணக்கியல் (Accounting)
பர்மசான் சீஸ் ஆகியவற்றை கண்டுபிடித்தது. டிராப்பிஸ்ட் துறவிகள், குடிநீர் மாசுபட்டிருந்த காலத்தில், தினசரி தேவையாக இருந்ததால் பீர் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தினார்கள்.

திராட்சைத் தோட்டங்கள் (Wine Making):
தினமும் பரிசுத்த திருவிருந்தை (Eucharist) கொண்டாடுவதற்கு, திராட்சை மதுவின் நிலையான விநியோகம் தேவைப்பட்டது.
அதனால், திராட்சை வளர்ப்பு மற்றும் சேமிப்பிற்கான தொழில்நுட்பங்களை அவர்கள் உருவாக்கினார்கள்.

அடிமைத்தனத்தின் ஒழிப்பு:
துறவிகளுடன் சேர்ந்து அனைவரும் நிலத்தில் உழைத்தார்கள், கடினமான வேலைகளை செய்தார்கள், திரிகைக்கற்களை இயக்கினார்கள். முன்பு இவ்வேலைகள் இழிவானவை என்று கருதப்பட்டு, அடிமைகள் மட்டுமே செய்தனர். ஆனால் இப்போது, அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது, மக்கள் உற்பத்தித்திறன் மிக்கவர்களாக மாறினார்கள்.

நான் உழைப்பின் அர்த்தத்தை உணர்கிறேனா? நான் பயனுள்ள, உற்பத்தி தரும் வேலையை செய்கிறேனா?
 

Rev. Dr. J.N. Manokaran