மத்திய கிழக்கில் ஒரு கதை உண்டு.
ஒரு ஏழை பெண் தன் சொத்துகளை இழந்ததால் இழப்பீடு தருமாறு சுல்தானிடம் வேண்டினாள். சுல்தான் கேட்டான்: “அதை எப்படித் தொலைத்தாய்?” அவள் பதிலளித்தாள்: “நான் உறங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு திருடன் என் வீட்டுக்குள் நுழைந்து அதைத் திருடிச்சென்றான்.” சுல்தான் கோபமடைந்து, “நீ ஏன் தூங்கினாய்?” என்று கேட்டான். அவள் நயமாகப் பதிலளித்தாள்: “நீ எங்களை காக்க விழித்திருக்கிறாய் என்ற நம்பிக்கையால்தான் நான் உறங்கினேன்.” அந்த பதில் சுல்தானை மகிழ்ச்சியடையச் செய்தது. அவள் கேட்டதை எல்லாம் அவனிடமிருந்து பெற்றாள். “இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை”
(சங்கீதம் 121:4).
அன்பான தேவன்:
பரிசுத்த வேதாகமம், தன் ஜனங்களை அக்கறையுடன் காக்கும் உண்மையான தேவனை விவரிக்கிறது. விசுவாசிகள் தங்கள் கவலைகளையும், உளவுத்திணறல்களையும் அல்லது பதட்டங்களையும் மற்றும் மனஅழுத்தங்களையும் தேவனிடத்தில் கொடுத்து விடும்படி கூறுகிறது. “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1 பேதுரு 5:7). ஒரு தாயார் தன் பிள்ளை நோயுற்றிருக்கும் பொழுது, மிகுந்த சோர்வுடன் இருந்தாலும் தூங்கமாட்டார்கள். தாயின் அந்த அளவு அக்கறையையும் காட்டிலும், தேவனுடைய அக்கறை எந்தத் தாயின், தந்தையின், அல்லது துணைவனின் அக்கறையையும் விஞ்சியது. மனித பராமரிப்பாளர்கள் சோர்வடைந்து களைப்படையலாம்; ஆனால் தேவன் ஒருபோதும் சோர்வடைவதில்லை.
உடன்படிக்கையை காத்து நிற்கும் தேவன்:
இஸ்ரவேல் ஜனத்தை உலகிலுள்ள அனைத்து ஜாதிகளிலும் இருந்து தம்முடைய சிறப்பான சொத்தாக தேவன் தேர்ந்தெடுத்தார் (யாத்திராகமம் 19:5-8). சீனாய் மலையில், மோசேயின் மூலம், தேவன் ஜனத்தோடு உடன்படிக்கை செய்தார் (யாத்திராகமம் 20:1-20; உபாகமம் 5:6-21). மக்கள் உடன்படிக்கையை மீறினாலும், தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதன் மூலம் தேவன் உண்மையுள்ளவராக இருந்து நிறைவேற்றினார். தேவன் எச்சரித்து, தண்டித்து, நியாயந்தீர்ப்பினால் இஸ்ரவேலைச் சந்தித்தார்; இருந்தாலும் உடன்படிக்கையை நிறைவேற்றினார். மனிதர்கள் தங்களின் கிரியைகளால் இரட்சிப்பைப் பெறவோ, அடையவோ முடியாது; எனவே தேவன் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அந்த உடன்படிக்கையின் மூலம், தேவனுடைய குமாரன் மனித குமாரனாகி, மனித குலத்தை இரட்சித்தார்.
ஆற்றலுள்ள தேவன்:
எந்த மனிதனாலும் எதையாவது அல்லது எவரையாவது பகலும் இரவும் காக்க முடியுமா? முக்கியஸ்தர்களை காக்கும் படைவீரர்கள் பணி மாறி மாறி செய்கின்றனர்; ஏனெனில் ஒரே குழுவால் இரவெங்கும், பகலெங்கும் காக்க முடியாது. சவுலின் துணைவியாரான ஆயாவின் மகள் ரிஸ்பா, தனது மகன்களின் சடலங்களை ஐந்து மாதங்கள் (அறுவடை ஆரம்பத்திலிருந்து மழை பெய்யும் வரையிலும்) மலைப்பகுதியில் பறவைகளிடமிருந்து காக்க முயன்றாள். (2 சாமுவேல் 21:10) படைத்த தேவன் ஒருபோதும் களைப்படைவதில்லை; அவருக்கு தூக்கம் அல்லது ஓய்வு தேவையில்லை; அவர் ஒருவேளை தூங்குவதோ அல்லது உறங்குவதோ இல்லை.
அவருடைய பராமரிப்பில் நான் பாதுகாப்பாக இருக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran