ரோமருக்கு எழுதிய நிருபத்தில் பவுல் 29 முதல் 36 நபர்களை குறிப்பிடுகிறார்; அவர்களுடைய குடும்பத்தினரும் இதில் அடங்குவர். வேத அறிஞர்களின் கணக்கீட்டின்படி, அவர்களில் சுமார் 27 ஆண்களும் 9 பெண்களும் இருந்திருக்கலாம். மனிதர்களை அடையாளம் கண்டு, அவர்களைப் பாராட்டி, உற்சாகப்படுத்தி, அவர்களின் பணியை அங்கீகரித்து, தகுந்த முறையில் ஊக்குவிப்பது, அவர்களின் வளர்ச்சிக்கும் மேலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கும் மிகவும் அவசியமானது. ஒவ்வொருவரும், “நான் பார்க்கப்படுகிறேன்; நான் மதிக்கப்படுகிறேன்; என் பணி அங்கீகரிக்கப்படுகிறது; நான் உற்சாகப்படுத்தப்படுகிறேன்” என்று உணர வேண்டும்.
நினைவுகூருதல்:
ரோமர் 16-ஆம் அதிகாரத்தில் பவுல் குறிப்பிட்ட அனைவரையும் நிச்சயமாக நினைவில் வைத்திருந்தார். அவர்களுக்காக ஜெபித்தார்; அவர்களுக்காக தேவனிடம் பரிந்துபேசினார்.
தொலைதூரங்களில் வாழும் பலருக்காகவும் அவர்களை நினைவுகூர்ந்து ஜெபித்து, அவர்களை ஆசீர்வதிக்கிறவர்களாக இருப்பது கிறிஸ்தவர்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய சிலாக்கியம்.
கண்ணியமும் மரியாதையும்:
கிறிஸ்தவர்கள் தேவனை நேசிப்பதும், பிறரை நேசிப்பதும் ஆகிய ராஜரீகப் பிரமாணத்தைப் பின்பற்றுகிறவர்கள். பேதுருவும், “எல்லாரையும் கனம்பண்ணுங்கள்” என்று விசுவாசிகளுக்கு அறிவுறுத்துகிறார் (1 பேதுரு 2:17).
நாம் பிறரிடமிருந்து எதிர்பார்க்கும் அதே விதத்தில், அவர்களையும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும், சாந்தத்துடனும், கனத்துடனும் நடத்த வேண்டும்.
மதிப்புமிக்க மனிதர்கள்:
தலைவர்கள் ஒவ்வொருவரிடமும் தேவன் வைத்துள்ள அழைப்பையும் ஆவிக்குரிய வரங்களையும் அறிந்து, அவர்கள் சேவை செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். சிறிய பணியாக இருந்தாலும் பெரிய பணியாக இருந்தாலும், உண்மையுடன் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுகிற அனைவரும் “உதவியாளர்கள்” அல்லது “ஊழியக்காரர்கள்” என்று மட்டும் கருதப்படாமல், உடன் ஊழியக்காரர்களாகவும், உடன் பணியாளர்களாகவும் மதிக்கப்பட வேண்டும் (1 பேதுரு 4:10). சில கிறிஸ்தவத் தலைவர்கள் தங்களுடன் பணிபுரிபவர்களை அடிமைகள் அல்லது வேலைக்காரர்களைப் போல நடத்துவது வருத்தத்திற்குரியது. சிலர் அவர்களைச் சுரண்டியும் ஒடுக்கியும் நடத்துகிறார்கள். ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது சீஷர்களை “ஊழியக்காரர்கள்” என்று அல்ல, “சிநேகிதர்கள்” என்று அழைத்தார் (யோவான் 15:15).
பாராட்டி உறுதிப்படுத்துதல்:
கர்த்தருக்கு ஊழியம் செய்கிற அனைவரையும் பாராட்டி, அவர்களின் சேவையை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம். அவர்கள் தேவனால் அழைக்கப்பட்டவர்கள் என்றும், பரிசுத்த ஆவியானவரால் ஊழியம் செய்வதற்கான வரங்களைப் பெற்றவர்கள் என்றும் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். பின்னணியில் இருந்து, பெரும்பாலும் யாருடைய கவனத்திற்கும் வராமல் உழைக்கிறவர்களின் விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் பொதுவாகப் பாராட்டலாம். அவர்கள் செய்யும் பணியை வெளிப்படையாக அங்கீகரிப்பது அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் பலத்தையும் அளிக்கும்.
வெகுமதிகள்:
உண்மையுடன் செய்யப்படும் தங்கள் ஊழியத்திற்காக தேவன் வாக்களித்துள்ள நித்திய வெகுமதிகளைப் பற்றி அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். தேவன் பரிசுத்தவான்கள் செய்த ஊழியத்தை மறந்துவிடுவதில்லை.
“தேவனுடைய நாமத்திற்காக நீங்கள் செய்த பணியையும்... நீங்கள் காண்பித்த அன்பின் பிரயாசத்தையும் மறந்துவிடுகிறவரல்லவே” (எபிரெயர் 6:10). ஒருவருக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுத்தாலும், அதற்கான பலனை அவர் இழக்கமாட்டார் என்று கர்த்தராகிய இயேசு கூறுகிறார் (மத்தேயு 10:42).
இதன் பொருள், தேவனுடைய ராஜ்யத்தில் அவர்கள் செய்யும் ஒவ்வொரு பணிக்கும் இந்த உலகத்திலேயே அவசியம் பொருளாதார வெகுமதி வழங்க வேண்டும் என்பதல்ல. இருப்பினும், தலைவர்கள் அவர்களை முன்கூட்டியே சிந்தித்து, படைப்பாற்றலுடனும் ஞானத்துடனும் ஊக்குவிப்பதற்கான வெகுமதிகளை வழங்க வேண்டும்.
அது பணமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. வாய்ப்புகளை ஏற்படுத்துதல், நல்ல புத்தகங்களை வழங்குதல், கருத்தரங்குகளில் கலந்துகொள்ள அவர்களுக்கு உதவுதல், அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு ஆதரவு அளித்தல் போன்ற பல வழிகளிலும் அவர்களை ஊக்குவிக்கலாம்.
*நான் மக்களை மதிக்கிறேனா?
அவர்களை நினைவுகூருகிறேனா? அவர்களின் சேவையை அங்கீகரிக்கிறேனா? அவர்களைப் பாராட்டி ஊக்குவிக்கிறேனா? அவர்களின் உண்மையான பணிக்குத் தகுந்த முறையில் வெகுமதி அளிக்கிறேனா?*
Rev. Dr. J.N. Manokaran