பூடானில் ஒரு மத, கலாசார மரபு உள்ளது. இந்நாடு ஒரு புத்தமத நாடாகும். ஒரு லாமா (மதகுரு), அறுப்பதற்காக வைக்கப்பட்டுள்ள மிருகத்திற்கான பணத்தை அல்லது மீட்புத் தொகையை செலுத்தினால், அந்த மிருகத்தை கொல்ல முடியாது. அந்த மிருகம் விடுதலையாகி விட வேண்டும். அதை அறுக்கவும் முடியாது, வீட்டுக்குள் வளர்க்கவும் முடியாது. இவை “மீட்கப்பட்ட மிருகங்கள்” ஆகும்; அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட மீட்கப்பட்ட மிருகங்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள், சிறையில் அடைக்கப்படுவார்கள்.
மீட்பு (Ransom):
பணயக்கைதியாக இருக்கும் ஒருவரையோ அடிமையையோ விடுவிக்க கோரப்படும் விலையே மீட்பு. டிஜிட்டல் காலத்தில், ரான்சம்வேர் (Ransomware) எனப்படும் தீநுண்ணி மென்பொருளை சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தி, முக்கியமான தரவுகளைக் கொண்ட கணினிகளைத் தாக்குகின்றனர். அவர்களுக்குச் சொந்தமல்லாத அந்தத் தரவுகளை மீண்டும் திறக்க, குற்றவாளிகள் மீட்பு தொகை கேட்கிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அநேகரை மீட்பதற்காக தன்னை அர்ப்பணிக்க இவ்வுலகில் வந்தார் (மாற்கு 10:45). பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து, பாவத்தின் குற்ற உணர்ச்சியிலிருந்து, நரகத்தின் நித்திய தண்டனையிலிருந்து மனிதரை விடுவிக்க அந்த மீட்பு செலுத்தப்பட்டது. மனந்திரும்புகிற பாவிகளை கிறிஸ்துவின் இரத்தமே எல்லா பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்கிறது. அவர் மீது நம்பிக்கை கொள்ளும்வர்களின் அநியாயங்களையெல்லாம் மன்னித்து சுத்திகரிக்க தேவன் உண்மையுள்ளவரும் நீதியுமானவரும் ஆவார்(1 யோவான் 1:7,9).
மீட்கப்படுதல் (Redemption):
பூடானில், மீட்பு தொகை செலுத்தப்பட்டால் ஒரு மிருகம் விடுவிக்கப்படுகிறது அல்லது மீட்கப்படுகிறது; அதைப் போலவே, தேவகுமாரனாகிய கிறிஸ்து நமக்காக மீட்புத் தொகையை செலுத்தியதால், அவரை நம்புகிறவர்கள் அனைவரும் மீட்கப்பட்டவர்களாகிறார்கள். அவர்கள் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைகிறார்கள். சத்தியத்தை அறிந்து, தேவகுமாரனால் விடுதலையடையும் ஒருவர் உண்மையான சுதந்திரம் பெறுகிறார் (யோவான் 8:32, 36). விசுவாசிகள் பாவத்திலிருந்து, மரபு வழக்கங்களிலிருந்து, சடங்குகளிலிருந்து, உலகியலான கொள்கைகளிலிருந்து, கலாச்சார பழக்கவழக்கங்களிலிருந்தும் விடுதலையடைகிறார்கள். சீஷர்கள் விலைக்கு வாங்கப்பட்டவர்கள் எனப் பவுல் எழுதுகிறார் (1 கொரிந்தியர் 6:20)
மறுசீரமைப்பு (Restoration):
மனந்திரும்பி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறவர்களை, தேவன் தமது பிள்ளைகளாக மீண்டும் நிலைநிறுத்துகிறார் (யோவான் 1:12). மனந்திரும்பி வந்த மைந்தனை (கெட்ட குமாரன்) தந்தை அடிமையாகவோ அல்லது வேலைக்காரனாகவோ ஏற்காமல் மகனாகவே ஏற்றுக்கொண்டது போல, மனந்திரும்புகிற பாவியும் மகனாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறார். ஒரு சீஷன் நீதிமானாக அறிவிக்கப்படுகிறார்; மீட்கப்பட்ட அந்தச் சீஷனை எவரும் குற்றம் சாட்டவோ குறை சொல்லவோ முடியாது (ரோமர் 3:23-24).
நான் மீட்கப்பட்டதும், விடுதலையடைந்ததும், மீண்டும் நிலைநிறுத்தப்பட்டதும் குறித்து தேவனுக்கு நன்றி செலுத்துகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran