ஜெபங்களுக்கு நீதியான பதில்கள்

ஒரு திருச்சபையில், ஒரு அறிவிப்பு பலகை இப்படியாக இருந்தது; “தொலைபேசி, பை, பணப்பை, கைப்பை ஆகியவற்றை கவனமின்றி விட்டு விடாதீர்கள்; வேறு யாரோ அதைத் தங்களுடைய ஜெபத்திற்கு விடையென நினைத்து விடலாம்.”
ஆம், சிலர் தேவனையும், அவருடைய பண்புகளையும் நீதியையும் தவறாக புரிந்து கொள்கிறார்கள். "அவர் தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்" (சங்கீதம் 23:3) என தாவீது மிகத் தெளிவாக எழுதியுள்ளார்.

பரிசுத்த தேவன்: 
தேவன் பரிசுத்தமானவர்; அதேபோல், அவர் தம்முடைய ஜனங்களும் பரிசுத்த வாழ்கையை நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறார். மனிதர்கள் நீதியான வாழ்க்கையை நடத்த உதவ, அவர் பத்துக் கட்டளைகளையும் (யாத்திராகமம் 20:1-17), அவற்றின் நடைமுறை விதிகளையும் கொடுத்திருக்கிறார். பரிசுத்த தேவன் பாவத்துடன் ஒத்திசைந்திருக்க மாட்டார். அவருடைய செயல்முறைகள் பரிசுத்தமானவை, மேலும் அவை அவரது பிரமாணத்தின் அடிப்படையில் நடக்கின்றன.

பிறரிடம் இருந்து திருடுவது?
பிறரிடம் இருந்து திருடுவது என்றால், தமக்குச் சொந்தமல்லாத ஒரு பொருளை எடுத்துக் கொள்வதாகும். எந்தொரு பொருளும் தவற விட்டதாகக் காணப்பட்டால், அது உரிமையாளருக்கே மீண்டும் கொடுக்கப்பட வேண்டும். உரிமையாளரை கண்டுபிடிக்க முடியாவிடில், அரசு அல்லது பொது அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். அதிகாரபூர்வமாக சொந்தமல்லாததை வன்முறையால், மிரட்டலால், பொய் வாக்குறுதிகள், பொய்கள், மோசடி, பதிவுகளை முறைக்கேடாக மாற்றுவது, சான்றுகளை தவறாகக் கையாளுதல் என இவை அனைத்தும் தேவனுடைய கட்டளைகளுக்கு விரோதமான செயல்களாகும். 

நீதியுள்ள தேவன்: 
தம்முடைய நீதியும் நியாயமும் படி தேவன் ஜெபங்களுக்கு உத்தரவு அல்லது பதில் அளிக்கிறார். தவறான முறைகள் மூலம் தேவன் ஜெபங்களுக்கு விடையளிக்க மாட்டார். திருடுவது, கொள்ளை அடிப்பது, அல்லது சுரண்டுவது போன்ற வழிகளால் ஏற்படும் காரியங்கள் எல்லாம் பாவமாகும். ஒரு நபரின் தேவையோ, ஆசையோ, பேராசையோ நிறைவேற வேண்டும் என்பதற்காக அவரைத் திருடச் செய்ய வாய்ப்பு கொடுப்பது தேவனுடைய முறை அல்ல. தேவனுடைய வழிகள் நீதியால் நிரம்பியவை. தமது பரிசுத்த நாமத்தின் நிமித்தமாக, தம்முடைய பிள்ளைகளை அந்த பரிசுத்தமான மற்றும் நீதியான பாதைகளிலேயே அவர் வழிநடத்துகிறார்.

தேவ  அனுமானம் அல்லது விருப்பம்: 
தம்முடைய பிரமாணங்களை மீறி தேவன் ஜெபங்களுக்கு விடையளிப்பார் என நினைப்பது மூடத்தனமாகும். இது விசுவாசமல்ல, இது குருட்டு விசுவாசமுமேயாகும். தேவனுடைய சித்தம் மனமகிழ்ச்சி தருவது, ஏற்கத்தக்கது, மேலும் பரிபூரணமானது (ரோமர் 12:2).
தேவனுடைய திட்டம் தேவனை பிரியப்படுத்தும்போது, அவரை நேசிக்கும் சீஷர்களையும் அது மகிழ்விக்கிறது. தேவனுடைய சித்தம் ஏற்றுக்கொள்ளத்தக்கது, ஏனெனில் அது அமைதியையும் மனநிறைவையும் அளிக்கிறது. திருடுவது அல்லது அநீதியானதைச் செய்வது தேவனுடைய சித்தமல்ல. அதற்குப் பதிலாக, தேவன் ஆசீர்வதிக்கும் நேரத்திற்காக காத்திருப்பதும், அவரது திட்டத்தில் இல்லாததை விட்டுவிடத் தயாராக இருப்பதும் தேவனுடைய சித்தம் ஆகும். அவருடைய திட்டம், குறிக்கோள் மற்றும் சித்தம் என்பது அவரது சீஷர்களுக்கு எப்போதும் பூரணமானதாகும் மற்றும் நன்மையானதாகும்.

 என் மீதான தேவ சித்தத்தை அறிய எனக்கு ஆவிக்குரிய பகுத்தறிவு இருக்கிறதா அல்லது வெறும் அனுமானமா??? 

Rev. Dr. J.N. Manokaran