நீதியுள்ள சீஷர்கள்

தீர்க்கதரிசியாகிய மீகா, தேவனுடைய மக்களாகிய நாம் நீதியும் நேர்மையும் நிறைந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அழைக்கிறார். ஒரு கிறிஸ்துவின் சீஷருடைய வாழ்க்கையை வழிநடத்த வேண்டிய மூன்று முக்கியமான நியமங்களை அவர் எடுத்துரைக்கிறார் (மீகா 6:8).

தேவனை அறிந்துகொள்ளுதல் (Knowing God):
கர்த்தருடைய சீஷர்கள் என்பவர்கள் தேவனை அறிந்தவர்கள், அவரைத் தங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டவர்கள், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உலகம் கிறிஸ்துவின் சீஷர்களை இயேசு கிறிஸ்துவோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறது. எனவே, சீஷர்கள் அவரோடு நெருங்கிய ஐக்கியத்தில் வாழ வேண்டும். அதாவது, அவரையே சார்ந்திருக்க வேண்டும்; அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்க வேண்டும்; அவருடைய பரிசுத்தமும் நீதியுமான வழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். எனவே, அவர்கள் வேதவசனங்களை நேசிக்கிறவர்களாகவும், வேதத்தை ஆர்வத்துடன் ஆராய்கிறவர்களாகவும், இரவும் பகலும் அதனைத் தியானிக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையையே தங்கள் வாழ்க்கையின் அஸ்திவாரமாகக் கொள்ள வேண்டும். கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் தேவனுக்கு முன்பாகவும், பிற மனிதர்களுக்கு முன்பாகவும் தாழ்மையுடன் வாழ வேண்டும்.

மனிதர்களை நேசித்தல் (Loving People):
கர்த்தருடைய சீஷர்கள் அவரை நேசிக்கிறார்கள்; ஆகவே, மற்றவர்களையும் நேசிக்கிறார்கள். தேவ அன்பைத் தங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கும்போது, அந்த அன்பு அவர்களுடைய இருதயத்தையும் சிந்தையையும் நிரப்புகிறது. பின்னர், அந்த அன்பு மற்றவர்களுடைய தேவைகளையும் வெறுமையையும் சந்திக்கும் வகையில் அவர்களிடமிருந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்த்தரைப் பின்பற்றுவதன் மூலம், மற்றவர்கள்மீது தேவனுக்குரிய இரக்கமும் மனதுருக்கமும் அவர்களுக்குள் உருவாகிறது. எனவே, தங்கள் வாழ்க்கைக்கான தேவ அழைப்பை உணர்ந்து, மக்களுக்கு ஊக்கத்துடன் சேவை செய்கிறார்கள். தேவன் தங்களுக்குக் கொடுத்துள்ள திறமைகளையும் வரங்களையும் அறிந்து, திருச்சபை, சமுதாயம் மற்றும் தேசத்தின் நலன், வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்காக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
அவர்கள் மற்றவர்களிடம் மரியாதையுடனும், பணிவுடனும், கனிவாகவும் நடந்துகொள்கிறார்கள். ஞானமான மற்றும் உற்சாகமூட்டும் வார்த்தைகளைப் பேசுகிறார்கள். மற்றவர்களை மன்னித்து, வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறத் தயாராக இருக்கிறார்கள். பகிர்ந்து கொள்வதும், பிறர்மீது அக்கறை செலுத்துவதும் அவர்களுடைய இயல்பான பண்புகளாக மாறுகின்றன.

உலகில் மாற்றத்தை ஏற்படுத்துதல் (Impacting Your World):
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, மனந்திரும்பி, தாம் நிறைவேற்றிய மீட்பின் கிரியையை விசுவாசிக்கிற பாவியை நீதிமானாகத் தீர்ப்பளிக்கிறார். அத்தகையவர்கள் கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டிகளாக மாறி, தேவ சுபாவத்தில் பங்குபெற்றவர்களாகிறார்கள். எனவே, அவர்கள் நீதியான வாழ்க்கையை வாழ வேண்டும்; நியாயமானவற்றைப் பேசுவதோடு, சமுதாயத்தில் நீதி நிலைநாட்டப்படுவதற்கும் பாடுபட வேண்டும் (2 கொரிந்தியர் 5:17; 2 பேதுரு 1:4). இதன் பொருள், அனைவரிடமும் பாரபட்சமின்றி நியாயமாக நடந்துகொள்வதாகும். யாரையும் சுரண்டவோ, ஒடுக்கவோ, துன்புறுத்தவோ கூடாது.
கிறிஸ்தவர்கள் எப்போதும், எல்லா இடங்களிலும், யாரும் தங்களைக் கவனிக்காத நேரத்திலும்கூட சரியானதையே செய்ய வேண்டும். அது வெளிப்படையான இடமாக இருந்தாலும், மூடிய கதவுகளுக்குப் பின்னால் அல்லது இரகசியமான சூழ்நிலையாக இருந்தாலும், அவர்களுடைய செயல்கள் நீதியும் நேர்மையும் நிறைந்ததாக இருக்க வேண்டும். நல்ல சமாரியனைப் போல, காயப்பட்டவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள், ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கியவர்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் வலிமையற்றவர்கள் ஆகியோருக்கு கிறிஸ்தவர்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும். உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை என்பது வார்த்தைகளில் மட்டும் நீதியைப் பேசுவதல்ல; நம்முடைய செயல்களின் மூலம் நீதியை வெளிப்படுத்துவதாகும். 

நான் உண்மையிலேயே நீதியுள்ள கிறிஸ்துவின் சீஷனாக வாழ்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran