ஆறுகள் தேவனுடைய நகரத்தை மகிழ்ச்சியடையச் செய்கின்றன

சங்கீதக்காரன் எருசலேமில் ஒரு நதியின் மூலம் மிகுந்த தண்ணீர் இருப்பதை கற்பனை செய்து மகிழ்ந்தார் (சங்கீதம் 46:4). எருசலேமில் நதி இல்லை, சிறு ஓடைகள் மட்டுமே இருந்தன. ஆனால் அவர் எசேக்கியேல் தீர்க்கதரிசனம் உரைத்ததைப் போல ஆலயத்திலிருந்து பாயும் நதியை  நோக்கிப் பார்த்தார் (எசேக்கியேல் 47:12; வெளிப்படுத்துதல் 22:1). சங்கீதக்காரன் மேசியாவின் ஆயிரமாண்டு ஆட்சி நோக்கிப் பார்த்தார். இன்று விசுவாசிகள் பரிசுத்த ஆவியினால் ராஜ்யத்தினை அனுபவிக்கிறார்கள் (ரோமர் 14:17).

ஜீவன் தரும் தண்ணீர்:
உலர்ந்த நிலத்திற்கு ஜீவன் தரும் நீரை கொண்டு வருவதால் அந்த நதி நகரத்தை மகிழ்விக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து,  விசுவாசிப்பவர்களுக்குள் ஜீவத் தண்ணீர் இருக்கும் என்று விளக்கினார். அதாவது, பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் வாசம்பண்ணுவார் என்ற பொருளாகும் (யோவான் 14:27).

பல ஓடைகள்: 
சங்கீதக்காரன் பார்த்த அந்த நதியில் பல ஓடைகளைக் கண்டார். அது ஏதேன் தோட்டத்தைப் பாசனமிட்ட நதிகளைப்போலிருக்கிறது (ஆதியாகமம் 2:10-14).

சமாதானம்: 
நதி சமாதானத்தையும் குறிக்கிறது (எசாயா 48:18; 66:12). அந்த நகரம் சமாதானத்தின் நகரமாக இருக்கும். விசுவாசியிடம் உலகம் தரவும் முடியாத, எடுத்துக்கொள்ளவும் முடியாத சமாதானத்தை கர்த்தர் வாக்களித்தார் (யோவான் 14:27).

நீதி: 
ஆமோஸ், நீதி நதிபோல் பாய்ந்து, நியாயம் ஒருபோதும் வற்றாத நீரோடைப் போல் ஓட வேண்டும் என்று எழுதுகிறார் (ஆமோஸ் 5:24). தேவனுடைய நகரம் சத்தியம், நீதி, நியாயம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது.

சிறந்த பாதுகாப்பு: 
சத்துருக்கள் தாக்கும்போது, நதியைக் கொண்ட நகரத்திற்கு உறுதியான நீர் விநியோகம் இருக்கும். அதனால் எதிரிகளின் தாக்குதலை எதிர்த்து நிலைக்க முடியும். எதிலும் குறைவில்லாமல், முழுமையான பாதுகாப்பை அனுபவிக்கலாம்.

பரிசுத்தம்: 
அந்த நதிகள் நகரத்தை மகிழ்விக்கின்றன, ஏனெனில் அது பரிசுத்த நகரம்; அங்கே பரிசுத்தஸ்தலமும், உன்னதமானவரின் கூடாரமும் உள்ளது. ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தரும் பரிசுத்தத்திலே ஆட்சி செய்வார்.

தேவன் அதின் நடுவில் இருப்பவர் :
சங்கீதக்காரன், தேவன் நகரத்தின் நடுவிலே இருக்கிறார், ஆகையால் அது அசைக்கப்படாது என்று பாடுகிறார். தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் மேசியா ஆட்சி செய்து உலகை நியாயந்தீர்ப்பார்.

பிரகாசமான ஒளி:
அந்த நகரம் விடியற்காலையில் கர்த்தரின் பிரகாசமான ஒளியைக் கண்டு மகிழும். ஜாதிகள் கொந்தளித்தாலும், தேவன் அதை கவனிப்பதில்லை; பிதாவால் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட குமாரனை நிராகரித்ததற்காக அவர் அவர்களை நியாயந்தீர்ப்பார் (சங்கீதம் 2:10-12).

மகிழ்ச்சியை அளிக்கும் பரிசுத்த ஆவியின் வாசம்பண்ணுதலை நான் அனுபவிக்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran