தாயாரம்மாள் ஒரு சாதாரண பெண்ணாக இருந்தாலும், ஆண்டவருக்கு தன்னை முழுவதும் அர்ப்பணித்த சீஷராக இருந்தார். அவர் தானத்தின் மூலம் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்து, அது ஒரு பெரிய நிதி திரட்டும் இயக்கமாகவும், பலருக்கு ஆசீர்வாதத்தின் மூலமாகவும் மாறியது.
ஏலம்:
1829ஆம் ஆண்டில், ஒரு ஞாயிற்றுக்கிழமை, சாத்தான்குளம் தேவாலயத்தில் தேவனுடைய ஜனங்கள் முட்டை, கோழி, ஆட்டுக்குட்டி, அரிசி, காய்கறிகள் மற்றும் பழங்களை காணிக்கையாகக் கொண்டு வந்தார்கள். அந்த நேரத்தில் ஆசாரியராக இருந்தவர், அந்தப் பகுதியிலே பல திருச்சபைகளை நிறுவிய ரெவ. ரேனியஸின் கூட்டாளரான ரெவ. ஸ்மித் ஆவார். ஏலம் நடத்தப்படும் போது, சுமார் 75 கிலோ எடையுள்ள இரண்டு மூட்டைகள் அரிசி இருந்தன; அவற்றை ஒரு வியாபாரி சந்தை விலையில் எடுத்துக்கொண்டார்.
புதுமையான கொடுத்தல் முறை:
தாயாரம்மாள் தேவனுக்காக கொடுப்பது பற்றி ஆழ்ந்த ஆசையைக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு யோசனை தோன்றியது: குடும்பத்திற்காக தினமும் சமைக்கும் போது, முதற்கை அரிசியைப் பிரித்துவைக்க வேண்டும் என்று. அந்த முதற்கை அரிசியை தனியாக ஒரு மூட்டையில் சேமித்தார். நாட்கள் கடந்தபோது, ஒரு மூட்டை நிரம்பியது; அடுத்து இன்னொரு மூட்டையும் நிரம்பியது. மற்றவர்களைப் போலவே அவரும் இந்த இரண்டு அரிசி மூட்டைகளையும் தேவனுடைய ராஜ்யத்திற்காக அளிக்க முடிவு செய்தார்.
*வியப்பூட்டும் யோசனை:
தாயாரம்மாள் தான் இந்த அளவு அரிசியை வழங்கியவர் என்பதை ரெவ. ஸ்மித் அறிந்தபோது, இத்தனை அரிசியை அவர் எப்படி கொண்டு வந்தார் என்று ஆச்சரியப்பட்டார். அதற்கு அவரின் பதில்; “போதகரே, நான் தினமும் முதற்கை அரிசியை எடுத்து தனியாக வைத்துவிடுகிறேன். அவ்வாறு சேர்த்துப் பெருமளவு ஆனபோது அதை திருச்சபைக்குக் கொண்டு வருகிறேன்” என்ற அவருடைய பதில் அவரை மேலும் அதிசயிக்கச் செய்தது.
சுற்றறிக்கை:
ரெவ. ஸ்மித் இந்த செய்தியை ரெவ. ரேனியஸுடன் பகிர்ந்தார். ஒவ்வொரு பெண்களும் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்று, தேவனிடமிருந்து ஆசீர்வாதம் பெறக்கூடிய மிகச் சிறந்த வழி இது என்பதை ரெவ. ரேனியஸ் உணர்ந்தார். ஆகையால், எல்லா சபைகளிலும் பெண்கள் சமையல் செய்யும் முன் ஒரு கை அரிசியை ஆண்டவருக்காக பிரித்துவைக்க வேண்டும் என்று போதிக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை அவர் அனுப்பினார்.
காணிக்கை:
இந்த நடைமுறை சி.எம்.எஸ். திருச்சபை அனைத்திற்கும் பரவியது. மற்ற அனைத்து மிஷன் அமைப்புகளும் இந்த முறையை ஏற்றுக்கொண்டன. இது இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், பர்மா, இலங்கை, ஜப்பான் போன்ற பிற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய விசுவாசிகள் நமது ஆண்டவர் கற்றுத்தந்த மகத்தான போதனையை அறிந்தார்கள்; ஆம் “பெறுவதைக் காட்டிலும் கொடுப்பதே பாக்கியம்” (அப்போ. 20:35). இத்தகைய காணிக்கை கோடிக்கணக்கான உயிர்களையும் தொட்டது.
நான் தேவனுக்காக புதுமையான முறையில் ஏதாவது செய்கிறேனா? என் கொடுத்தல் முறை எப்படிப்பட்டது?
Rev. Dr. J.N. Manokaran