முன்னுரிமைகளை அமைத்தல்

இந்திய பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் சமோசா குறித்து தீவிரமாக விவாதித்தார். முக்கோண வடிவிலான இந்த சிற்றுண்டி நாடு முழுவதும் பிரபலமானது; அதன் அளவு, வடிவம், பொருட்கள், விலை, சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்புகள் எல்லாம் மாறுபடுகின்றன. ஆனாலும், அந்த மதிப்பிற்குரிய உறுப்பினர், நாடு முழுவதும் ஒரே மாதிரியாக சமோசா தயாரிக்கும் நடைமுறை, பயன்படுத்தப்படும் பொருட்கள், ஊட்டச்சத்து விவரங்கள் மற்றும் விலைகள் குறித்து சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார் (News18,  ஜூலை 31, 2025). அவர் வறுமை, கல்வியின்மை, வேலைவாய்ப்பு குறைவு மற்றும் சுகாதார வசதியின்மை காரணமாக பின்தங்கியதாக கருதப்படும் பகுதியைச் சேர்ந்தவர். ஆனால், அரசாங்கத்தின் கவனத்திற்குத் தேவைப்படும் முக்கிய பிரச்சினையாக அவர் எடுத்துக்கொண்டது உணவாகிய சமோசா பற்றியது.

எது முக்கியம்?
வாழ்க்கையில் எது முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள, மனிதர்களும் நாடும் கல்வியால் விழிப்புணர்வு பெற வேண்டும். மக்களின் நிலைமை, அவர்கள் தினசரி சந்திக்கும் சிரமங்கள் ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும். ஆனால், இவ்வாறான வேர் அறியாத சிலர், தங்கள் மக்களின் தேவைகள், கனவுகள் பற்றி அறிந்துகொள்ள மறுக்கின்றனர். பாதுகாப்பு அதிகாரிகளால் சூழப்பட்டு, மக்களிடமிருந்து பிரிந்துவிட்டு, நிஜ உலகிலிருந்து விலகிய கனவுலகில் வாழும் இவர்களின் சிறுமனங்கள், நாட்டின் முக்கிய பிரச்சினைகளை விட சமோசா பற்றியே சிந்திக்க முடிகிறது.

நீங்கள் எதைத் நாடுகிறீர்கள்?
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் போது, அவர் பசியோடு இருந்தவர்களுக்கு உணவு வழங்கினார். அவரைத் தொடர்ந்து வந்த மக்கள், உழைப்பு இன்றியே அப்பம் கிடைக்கும் என நினைத்தனர். ஆனால் ஆண்டவர், அழியும் அப்பத்தைப் பற்றி அல்ல, நித்திய வாழ்வுக்கான ஜீவ அப்பத்தைப் பற்றிச் சிந்திக்கும்படி அவர்களை கடிந்துக் கொண்டார் (யோவான் 6:27). “மனுஷன் அப்பத்தினாலே மட்டுமல்ல, தேவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலே வாழ்வான்” (மத்தேயு 4:4). ஆனால், அந்த பாராளுமன்ற உறுப்பினருக்கோ, சமோசா போன்ற சிற்றுண்டிகளே அத்தியாவசியமானவை; அப்பத்தைவிடவும் மேலானவை; ஜீவ அப்பம் குறித்து அவருக்கு எந்த உணர்வும் இல்லை.

முன்னுரிமைகள்?
பணத்திற்காக சேவை செய்யத் தேர்ந்தெடுப்போருக்கு மாறாக, உண்மையான சீஷன் ஆண்டவராலும், தேவவார்த்தையாலும், தேவனுடைய ஆவியாலும் சரியான முன்னுரிமைகளைத் தேர்ந்தெடுக்கப் பழக்கப்படுகிறான் (மத்தேயு 6:33). முதலில், அவர்கள் தேவனுடைய இராஜ்யத்தைத் தேட அழைக்கப்பட்டவர்கள். அதாவது, தேவன் மனிதர்களின் இதயங்களில் ஆளுவது,  அது குடும்பங்கள், சமூகங்கள், சமுதாயம், பண்பாடு, பணியிடம், நிறுவனங்கள், மற்றும் தேசங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இரண்டாவதாக, அவர்களின் மதிப்புக் கொள்கை தேவனுடைய நீதியே ஆகும். அதாவது, எல்லா இடங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுடைய பார்வையில் சரியானதைச் செய்வதே அவர்களின் வாழ்வின் அடிப்படை ஆகும். 

ஒரு சீஷனாக, முக்கியமான மற்றும் முன்னுரிமையான விஷயங்களை நான் பகுத்தறிகிறேனா?

Rev. Dr. J.N. Manokaran