எருசலேமுக்கு அளிக்கப்பட்ட தண்டனையானது, சோதோமின் மீதான நியாயத்தீர்ப்பை விடக் கடுமையானது என்று தீர்க்கதரிசியாகிய எரேமியா கூறினார் (புலம்பல் 4:6). இரக்கமற்ற பாபிலோனியர்களால் பாழாக்கப்பட்ட எருசலேம் எனும் மகிமைமிக்க நகரத்தை எரேமியா கண்டிருந்தார். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அந்த நகரத்திற்காக அவர் புலம்பினார். எருசலேம் மற்றும் சோதோம் ஆகியவற்றின் அழிவை ஒப்பிட்டுப் பார்ப்பது, தேவன் தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் மீது செலுத்திய நியாயத்தீர்ப்பின் தீவிரத்தன்மையை வெளிப்படுத்துகிறது. இஸ்ரவேலர்கள் தேவனுக்கு மிகவும் அருமையான சொத்தாக இருந்தபோதிலும், அவர் அவர்களுக்குச் சலுகை காட்டவில்லை; மாறாக, அவர்களிடத்தில் அவர் இன்னும் கடுமையாகவே நடந்துகொண்டார் (யாத்திராகமம் 19:15; ரோமர் 2:11).
விரைவான அழிவு:
சோதோம் மற்றும் கொமோரா ஆகிய நகரங்கள் மிக விரைவாக அழிக்கப்பட்டன. இதில் மனிதர்களின் கைங்கர்யம் ஏதுமில்லை. வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் பொழிந்ததால் அந்நகரங்கள் அழிந்தன. மக்கள் ஒரு கணப்பொழுதில் மரித்தனர்; நீடித்த வேதனையோ, கண்ணீரோ, புலம்பலோ இருக்கவில்லை. நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டன, அனைத்துக் குடிகளும் மரித்தனர், மேலும் அப்பகுதி முழுவதும் பாழடைந்த இடமாக மாறியது (ஆதியாகமம் 19).
எருசலேமின் நீண்டகாலத் துன்பம்:
இதற்கு நேர்மாறாக, எருசலேமின் துன்பம் நீண்ட காலத்திற்கு நீடித்தது. தேவனுடைய மக்கள் உடன்படிக்கை, வாக்குத்தத்தங்கள், நியாயப்பிரமாணம், ஆலயம், பலிகள் மற்றும் நியாயப்பிரமாண போதகர்கள் ஆகியவற்றைத் தங்களுக்குச் சொந்தமாகக் கொண்டிருந்தனர். ஆயினும், அவர்கள் பிடிவாதக்காரர்களாக மாறினர்; அவர்களின் இருதயங்கள் கடினப்பட்டன. இதனால், அவர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பை வருவித்துக்கொண்டனர்.
பாபிலோனிய படையெடுப்பில் அநேகர் கொல்லப்பட்டனர்; சிலர் காயமடைந்தனர்; பலர் அடிமைகளாக அந்நிய நாட்டிற்கு சிறைபிடித்துச் செல்லப்பட்டனர். பின்னர் பஞ்சம், கைவிடப்பட்ட நிலை, மரியாதையின்மை, அவமானம் மற்றும் எழுபது ஆண்டுகள் பாபிலோன் சிறைவாசம் ஆகிய துன்பங்களையும் அனுபவித்தனர். தேவனுடைய வழியை விட்டு விலகுதல், ஆவிக்குரிய விபச்சாரம், தேவனுடைய வார்த்தையை நிராகரித்தல், வன்முறை மற்றும் அநீதியான வாழ்க்கை ஆகியவையே இந்த நியாயத்தீர்ப்பிற்குக் காரணம் என்பதை எரேமியா ஒப்புக்கொள்கிறார்.
கிறிஸ்தவர்களுக்கான எச்சரிக்கை:
அறியாமையினால் பாவம் செய்கிறவர்கள் குறைந்த அளவே தண்டிக்கப்படுவார்கள். ஆனால் சத்தியத்தை அறிந்தவர்கள் நிதானத்துடனும் உணர்வுள்ளவர்களாகவும், தங்களுக்குக் கிடைத்த வெளிச்சத்திற்கு ஏற்பவும் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில், அவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாவார்கள் (லூக்கா 12:47-48).
சுவிசேஷத்தையும் தேவனுடைய வார்த்தையையும் அறிந்த கிறிஸ்தவர்கள் உலகிற்கு முன்மாதிரியாகவும் போதிப்பவர்களாகவும் இருக்க அழைக்கப்பட்டுள்ளனர். ஆகையால் அவர்கள் பாவத்தில் வாழ்ந்தால், தேவனை அறியாதவர்களைவிடக் கடுமையான நியாயத்தீர்ப்பைச் சந்திப்பார்கள் (யாக்கோபு 3:1).
பரிசுத்தமான தேவன் பாரபட்சமின்றி, நீதியின்படி நியாயந்தீர்க்கிறார் என்பதை நான் உணர்ந்து வாழ்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran