தனிமை நிறைந்த உலகில் நட்புறவுச் சரிவு

ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ (Harvard Business Review) இதழில் வெளியான ஒரு கட்டுரையின்படி, உலகெங்கிலும் மக்களிடையே நட்பு வேகமாகக் குறைந்து வருகிறது. அதிகமானோர் தங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் சிலரே உள்ளனர் அல்லது நெருங்கிய நண்பர்களே இல்லை என்று தெரிவிக்கின்றனர். இது வெறும் சமூகப் பிரச்சினை மட்டுமல்ல; மனித உறவுகளில் ஏற்பட்டுள்ள ஆழமான பாதிப்பையும், ஆவிக்குரிய வாழ்வில் காணப்படும் ஆரோக்கியமற்ற நிலையையும் சுட்டிக்காட்டுகிறது. கிறிஸ்தவர்கள் அக்கறையுடனும், திட்டமிட்ட செயல்பாட்டுடனும், அன்புடனும் இதற்குப் பதிலளிக்க வேண்டிய சவாலாகவும் இது அமைந்துள்ளது. “அவர்கள் மேய்ப்பில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்து போனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தார்கள்” (மத்தேயு 9:36) என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மக்களைக் குறித்து இரக்கப்பட்டார். இன்றும் அநேகர் தங்களுக்குச் சொந்தமானவர்கள் யாருமில்லை என்ற உணர்வுடனும், உறவுகளின் ஆதரவின்றியும் வாழ்கின்றனர். 

புள்ளிவிவரங்கள் (Facts):
1990-ஆம் ஆண்டில், தங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை என்று தெரிவித்தவர்கள் 3 சதவீதமாக இருந்தனர். சமீபத்திய ஓர் ஆய்வில் இந்த எண்ணிக்கை 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேவேளையில், பத்து அல்லது அதற்கு மேற்பட்ட நெருங்கிய நண்பர்களைக் கொண்டவர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 30 கோடி மக்கள் தங்களுக்கு நண்பர்களே இல்லை என்று தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.
நட்புறவுகள் இவ்வாறு குறைந்து வருவதையே ‘நட்பின் வீழ்ச்சி’ (Friendship Recession) என்று அழைக்கின்றனர்.

மாறிவரும் உலகம் (Changed World):
டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகம் பெரிதும் மாறிவிட்டது. கைப்பேசித் திரைகளும், இணையப் பயன்பாடுகளும் மக்களின் நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்கின்றன. நேருக்கு நேர் அமர்ந்து பேசுவதற்குப் பதிலாக, உடனடிச் செய்திப் பரிமாற்றங்கள் இடம்பிடித்துள்ளன.
வீடும் பணியிடமும் அல்லாத, மக்கள் ஒன்றுகூடி உரையாடி உறவுகளை வளர்த்துக்கொள்ளும் மூன்றாவது இடங்களும் (Third Spaces) குறைந்து வருகின்றன. இதன் விளைவாக, நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவதற்கும் ஆழமான உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கும் கிடைக்கும் வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.

முன்மாதிரியான ஆண்டவர் இயேசு (Lord Jesus as Model):
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது சீஷர்களை நண்பர்கள் என்று அழைத்தார் (யோவான் 15:13–15). இது நட்பின் ஆழத்தையும், அன்பின் மேன்மையையும் வெளிப்படுத்துகிறது. உண்மையான நட்பு என்பது வெறுமனே பழகுவதோடு முடிந்துவிடுவதில்லை. வேதாகமம் உண்மையான நட்பின் சில முக்கியப் பண்புகளை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. எனவே, கிறிஸ்தவ நட்பு என்பது அன்பு, விசுவாசம், உண்மைத்தன்மை (நீதிமொழிகள் 17:17), அன்பான திருத்தம் (நீதிமொழிகள் 27:6), பரஸ்பர ஆதரவு (பிரசங்கி 4:9–10), 
 மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சி (நீதிமொழிகள் 27:17) 
ஆகியவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட வேண்டும். 

திருச்சபையின் பங்களிப்பு (Response of Church):
இன்றைய சூழலும், ஆண்டவர் இயேசுவின் முன்மாதிரியும், திருச்சபைக்கு ஊழியம் செய்வதற்கான ஒரு புதிய வாயிலைத் திறந்துள்ளன. தனிமையில் தவிக்கும் மக்களைச் சென்றடைந்து, அவர்களுக்கு அன்பான உறவுகளையும் ஆவிக்குரிய ஆதரவையும் வழங்குவது திருச்சபையின் முக்கியப் பொறுப்பாகும். 
1. சிறு குழுக்கள்: 4–8 பேர் கொண்ட குழுக்களை உருவாக்கி, அன்புடனும் அக்கறையுடனும் ஐக்கியத்தில் வளரச் செய்தல்.
2. வேதாகமப் படிப்பு: குடும்ப அல்லது ஆர்வக் குழுக்களை அமைத்து, வாரந்தோறும் வேதாகமம் படித்தல்.
3. புதியவர்களை இணைத்தல்: அனைவரும் எளிதில் இணைய வாய்ப்பளித்து, உறுப்பினர்கள் அதிகரிக்கும்போது குழுக்களைப் பிரித்தல்.
4. உபசரிப்பு ஊழியம்: உபசரிக்கும் வரம் பெற்றவர்கள் தங்கள் வீடுகளில் குழுக் கூட்டங்களை நடத்துதல்.
5. டிஜிட்டல் ஊடகம்: குழுக்களைத் தொடங்கவும், தொடர்பில் இருக்கவும், தொடர்ந்து செயல்படவும் டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்துதல்.
இப்படியாக, உறவுகள் குறைந்து வரும் இந்த உலகில், திருச்சபை அன்பும் ஐக்கியமும் நிறைந்த குடும்பமாகத் திகழ வேண்டும். தனிமையில் இருப்பவர்களைத் தேடிச் சென்று, அவர்களை அரவணைத்து, கிறிஸ்துவின் அன்பை நமது நட்பின் மூலம் வெளிப்படுத்துவோம்.

எனக்கு உண்மையான நண்பர்கள் இருக்கிறார்களா?
தேவபக்தியுள்ள சிலருக்கு நான் உண்மையான நட்புறவாக இருக்கிறேனா?

தனிமையில் தவிக்கும் மக்களுக்கு நாம் உண்மையான நண்பர்களாக இருக்கிறோமா? அவர்களை அன்புடன் அணுகி, அவர்களுடைய பாரங்களைப் பகிர்ந்துகொண்டு, கிறிஸ்துவுக்குள் வளர உதவுகிறோமா?

Rev. Dr. J.N. Manokaran