ஒரு நிறுவனத்தில் அவர் பதினேழு ஆண்டுகள் தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றினார். அவ்வளவு அர்ப்பணிப்புடன் வேலை செய்தார்; விடுமுறை எடுக்கவில்லை, குடும்பத்துடன் நேரம் செலவிடவில்லை. ஆனால் ஒருநாள், அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார் (Financial Express, 3 நவம்பர் 2025). அவருக்கு அலுவலகமே ஆலயம், கணினியே கடவுள், வேலைதான் வழிபாடு.
அவரின் விசுவாசம், அர்ப்பணிப்பு, முதலீடு, கனவுகள் என அனைத்தும் ஒரு கணத்தில் முடிவுக்கு வந்தது.
பல தெய்வங்கள்:
இந்த பிரபஞ்சத்தின் தேவனானவன் பல்வேறு ரூபங்களில் வெளிப்படும் தெய்வங்களைக் கொண்டிருக்கிறான் (2 கொரிந்தியர் 4:4). இந்த எல்லா தெய்வங்களுக்கும் ஒரே நோக்கம்; ஒரு மனிதனின் வழிபாட்டை தேவனிடமிருந்து விலக்கி, இறுதியில் சாத்தானின் பக்கம் திருப்புவதே ஆகும். தேவனிடமிருந்து கவனத்தைத் திருப்பி, மனிதனின் நேரம், சக்தி, திறமை, அறிவு, அனுபவம் ஆகிய அனைத்தையும் சுரண்டிக் கொள்ளுவது எதுவாயினும், அது ஒரு விக்ரகமே.
காசே கடவுள்:
இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது என்று கர்த்தர் தம் சீஷர்களுக்கு எச்சரித்தார் (மத்தேயு 6:24). Mammon என்பது அரமேய மொழிச் சொல்; அதற்கு பணம், செல்வம் என்று பொருள். சிலர் செல்வத்தில் மூழ்கி, பொருட்கோளில் அடிமையாகி, பணத்தையே தொடர்ந்து துரத்துகின்றனர். ஒரு அரசியல்வாதி சொன்னது: “பணம் கடவுள் அல்ல; ஆனால் கடவுளுக்குச் சற்றும் குறைவானது அல்ல”.
வேலை அல்லது தொழில்:
ஆரம்பத்தில் கூறப்பட்ட மனிதனைப் போல, பலர் தங்கள் வேலை, வியாபாரம், தொழிலைத் தங்கள் கடவுளாக மாற்றிக் கொள்கிறார்கள்.
மற்ற எல்லா முன்னுரிமைகளையும் பின்தள்ளி, குடும்ப உறவுகளை புறக்கணித்து, சமூக உறவுகளிலிருந்து விலகி, தங்கள் சொந்த குகையிலோ குமிழியிலோ வாழ்கிறார்கள். அந்த குகை இடிந்தாலோ, குமிழி வெடித்தாலோ, அவர்கள் கடும் அதிர்ச்சியை சந்திக்கிறார்கள். மனதளவிலும் உணர்வு ரீதியாகவும் பெரும் குழப்பத்தை எதிர்கொண்டு, சிலர் தற்கொலை எண்ணங்களின் விளிம்புக்குத் தள்ளப்படுகிறார்கள்.
குடும்ப உறுப்பினர்கள்:
சில ஆண்களுக்கு அவர்களின் தாய் கடவுளாகி விடுகிறார்; சில பெண்களுக்கு அவர்களின் தந்தை கடவுளாகி விடுகிறார். இதனால் துணைவரை புறக்கணித்து, குடும்ப வாழ்க்கையை சிதைக்கிறார்கள். சிலர் தங்கள் வாழ்க்கைத் துணையையே கடவுளாக்கி, மற்ற குடும்ப உறவுகளை முறித்துக் கொள்கிறார்கள். குழந்தைகளும் கடவுளாக்கப்பட்டு, துணையும் பிறரும் புறக்கணிக்கப்படலாம்.
சமூகம்:
மிகுந்த சமூக அக்கறையுடன், பிறருக்காகவே வாழும் சிலர் இருக்கிறார்கள். சமூக நலனுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்து, தங்கள் சொந்த வாழ்க்கையை அலட்சியப்படுத்துகிறார்கள். ஆனால், அவர்கள் உலகமெங்கும் ஆதாயப்படுத்தினாலும், தங்கள் ஆத்துமாவை இழந்தால், அதனால் என்ன பயன்? பிரயோஜனம் இல்லை (மத்தேயு 16:26).
நான் என் தேவனை நேசிக்கிறேனா? அவருடைய சித்தத்தைச் செய்கிறேனா? தேவனுடைய ராஜ்யமே என் முன்னுரிமையா?
Rev. Dr. J.N. Manokaran